Published:Updated:

`அண்ணனின் திருமணத்தை தடுப்பாயா; இனி நீ வாழக்கூடாது' - கேரள பெண் கொலையில் பகீர் வாக்குமூலம்!

மலையரசு

கொலைக்குப் பிறகு தலைமறைவாகி இருந்த அகிலை, திருவனந்தபுரம் விமானநிலையத்தில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதேபோல் இந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியான அகிலின் தம்பியையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

ராகி மோள்
ராகி மோள்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அம்பூரி பகுதியைச் சேர்ந்தவர் அகிலேஷ் (26). இவருக்கும், பூவாறு திருபுறம் பகுதியைச் சேர்ந்த ராகி மோள் (29) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு மிஸ்டு கால் மூலம் பழக்கம் ஏற்பட்டது. எர்ணாகுளத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்த ராகிமோளுக்கு அகிலைவிட வயது அதிகமாக இருந்தபோதும் இருவரும் காதலித்து வந்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் அகிலும் ராகிமோளும் ஒரு கோயிலில் வைத்து ரகசிய திருமணம் செய்துகொண்டனர்.

ராகி மோள்
ராகி மோள்

ஆனால், அகிலின் வீட்டார் ஏழைப் பெண்ணான ராகிமோளை காதலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, ராணுவத்தில் வேலைபார்த்து வந்த அகில், கடந்த மாதம் 21-ம் தேதி விடுமுறைக்கு ஊருக்கு வந்துள்ளார். அப்போது அவருக்கு வேறு ஒரு பணக்கார பெண்ணைத் திருமணம் செய்ய பேசி முடித்துள்ளனர். இதை அறிந்த ராகிமோள் தனது காதல் குறித்தும், அகிலுடன் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் எனவும் அகிலின் வீட்டாரிடம் தெரிவித்துள்ளார். பணக்காரப் பெண்ணைத் திருமணம் செய்ய ராகிமோள் இடைஞ்சலாக இருந்ததால் அகிலுக்கும் அவரது வீட்டாருக்கும் கோபம் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் கடந்த மாதம் 21-ம் தேதி வேலைக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்ற ராகிமோள் அதன்பிறகு, வீடு திரும்பவில்லை. வேலைக்கும் வரவில்லை என அவரது ஆபீஸில் இருந்தும் தகவல் வர பதறிய பெற்றோர் அவரைக் காணவில்லை என போலீஸில் புகார் அளித்தனர். புகாரைப் பெற்றுக்கொண்ட போலீஸார் விசாரணையில் இறங்கினர். பல நாள்களாக விசாரணை தொடர்ந்தும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையேதான், ஒரு மாதம் கடந்த பின் அகிலின் வீட்டின் பின்புறத்தில் அழுகிய நிலையில் புதைக்கப்பட்டிருந்த ராகியின் உடலை போலீஸார் கண்டுபிடித்தனர்.

அகில் மற்றும் ராகுல்
அகில் மற்றும் ராகுல்

விசாரணையில் தனது தம்பி, அவரின் நண்பர் உதவியுடன் ராகியைக் கொலை செய்து வீட்டின் பின்புறத்திலேயே புதைத்தது தெரியவந்தது. கொலைக்குப் பிறகு தலைமறைவாகி இருந்த அகிலை, திருவனந்தபுரம் விமானநிலையத்தில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதேபோல் இந்த வழக்கில் இரண்டாவது நபரான அகிலின் தம்பியையும் போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் இருவரிடமும் நடத்திய முதல்கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து பேசியுள்ள காவல்துறையினர், ``திருமணத்தை நடத்தவிடாமல் ராகி தகராறு செய்ததால் அவரைக் கொலை செய்ய வேண்டும் எனத் தம்பியுடன் சேர்த்து பிளான் செய்துள்ளார் அகில். அதன்படி சம்பவத்தன்று அவரை கொலை செய்யும் முன்பே வீட்டின் பின்புறம் குழியைத் தோண்டி வைத்துள்ளனர். பின்னர், ராகியைத் தன் தம்பியுடன் சந்திக்கச் சென்றவர், அவரை காரில் ஏற்றிக்கொண்டு வீட்டுக்குச் சென்றுள்ளனர். வீட்டின் முன்வைத்து இருவரும் திருமணம் குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராகி மோள் புதைக்கப்பட்ட இடம்
ராகி மோள் புதைக்கப்பட்ட இடம்

`என் வாழ்க்கையைவிட்டு விலகிவிடு' என அகில் கேட்டுள்ளார். அதற்கு ராகி மறுத்ததுடன் `நீ வேறு பெண்ணை திருமணம் செய்துகொண்டால் உன் வீட்டின் முன்பே தற்கொலை செய்துகொள்வேன்' எனக் கூற ஆத்திரமடைந்துள்ளனர். பல முறை கேட்டுப்பார்த்தும் கேட்காததால் கடைசியில் அவரை கொலை செய்துள்ளனர். காரின் உள்ளே வைத்தே ``என் அண்ணனின் திருமணத்தை தடுப்பாயா? இனி நீ வாழக்கூடாது' எனக் கூறி கொண்டே அகிலின் சகோதரர் ராகுல் முதலில் ராகிமோளின் கழுத்தை நெரித்துள்ளார். கழுத்தை நெறிக்கும்போது சத்தம் வெளியே கேட்கக்கூடாது என்பதற்காக ஆக்சிலேட்டரை அழுத்தி காரை ரிப்பர் செய்வதுபோல நடித்துள்ளார் அகில்.

இதில் ராகிமோள் மயங்கியுள்ளார். இருப்பினும் அவர் உடல் அசைந்தது. இதைத் தொடர்ந்து அகில், காரில் தயாராக வைத்திருந்த நைலான் கயிற்றைக்கொண்டு ராகிமோளின் கழுத்தை இறுக்கிக் கொலை செய்துள்ளனர். பின்னர் தங்கள் பிளானின்படியே ஏற்கெனவே தோண்டிவைத்திருந்த குழியில், ராகியை நிர்வாண நிலையில் புதைத்துள்ளனர்.

கொலைசெய்ய பயன்படுத்திய கார்
கொலைசெய்ய பயன்படுத்திய கார்

ராகிமோளின் உடலை புதைத்த இடத்தில் பாக்குமரக் கன்று நட்டதுடன் காய்ந்த கம்புகளையும் அந்த இடத்தில் போட்டுவைத்துள்ளனர். ஆனால் செல்போன் சிக்னல் மூலம் சிக்கிக்கொண்டனர். விசாரணையில் மூவருமே இந்தக் கொலை குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். ராகியின் தந்தையின் குற்றச்சாட்டின்படி கொலையில் அகிலின் பெற்றோருக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் அவர்களுக்கான தண்டனையைப் பெற்றுத் தருவோம்" எனக் கூறியுள்ளனர்.