Published:Updated:

அடங்காத வெறி... தீராத பகை... அலறவிடும் ஆலம்பரைக் கோட்டை!

ஆலம்பரைக் கோட்டை
பிரீமியம் ஸ்டோரி
ஆலம்பரைக் கோட்டை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் கடப்பாக்கம் அருகே இருக்கிறது ஆலம்பரைக் கோட்டை.

அடங்காத வெறி... தீராத பகை... அலறவிடும் ஆலம்பரைக் கோட்டை!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் கடப்பாக்கம் அருகே இருக்கிறது ஆலம்பரைக் கோட்டை.

Published:Updated:
ஆலம்பரைக் கோட்டை
பிரீமியம் ஸ்டோரி
ஆலம்பரைக் கோட்டை

மொகலயர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கோட்டையைப் பிடிக்க, அந்தக் காலத்தில் ஏராளமான போர்கள் நடந்திருக்கலாம். ஆனால், சிதிலமடைந்த நிலையில் இருக்கும் இந்தக் கோட்டையைப் பிடிக்க இப்போதும் ரெளடி கும்பல்கள் போர்க்களம்போல மோதிக்கொள்கின்றன என்றால் நம்ப முடிகிறதா... இதுதான் உண்மை. இதனாலேயே சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்ல கடந்த இரு ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. விசாரித்தால், நம்பிக்கையும் துரோகமுமாக... ரத்தமும் சதையுமாக சினிமாவை மிஞ்சும் பகீர் கதைகள் கிடைக்கின்றன!

ஆலம்பரைக் கோட்டை
ஆலம்பரைக் கோட்டை

மத்திய தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆலம்பரைக் கோட்டையைப் பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகள் அதிகம். கோட்டையை ஒரு ரவுண்டு அடித்துவிட்டு, அருகே இருக்கும் கடற்கரையில் குளித்துவிட்டு, லைட் ஹவுஸ் மேலே ஏறி கடல் அழகை ரசிப்பது சுற்றுலாப் பயணிகளுக்கு பிடித்தமான விஷயம். ஆனால், இரண்டு வருடங்களாக காவல்துறையினரின் தடையால் வெறிச்சோடிக் கிடக்கிறது கோட்டை. அப்படி என்னதான் நடந்தது? ஊர்க்காரர்களிடம் பேசினோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“ஆலம்பரைக் குப்பம் பஞ்சாயத்தில் ஊத்துக்காட்டான் குப்பம், தண்டுமாரியம்மன் குப்பம், கடப்பாக்கம் குப்பம் ஆகியவை அடுத்தடுத்து இருக்கின்றன. இந்த மூன்று குப்பங்களிலும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த மீனவர்கள் வசிக்கிறார்கள். ஆலம்பரைக் கோட்டை பகுதியில் சினிமா படப்பிடிப்பு, கடலில் சட்டவிரோதமான படகு சவாரி போன்றவற்றை நடத்துபவர்கள், ஊத்துக்காட்டான் குப்பத்தில் இருக்கும் உள்ளூர் பிரமுகர்களை ‘கவனிக்க’ வேண்டும். இப்படி ஊத்துக்காட்டானைச் சேர்ந்த குறிப்பிட்ட கும்பல் மட்டும் காசு பார்ப்பது, மற்ற இரு குப்பங்களில் இருக்கும் உள்ளூர் அரசியல் கும்பல்களைக் கடுப்பேற்றியது.

அடங்காத வெறி... தீராத பகை... அலறவிடும் ஆலம்பரைக் கோட்டை!

‘எங்களுக்கும் பங்கு தர வேண்டும்’ என்று எகிறினார்கள். ஆனால் ஊத்துக்காட்டான் கும்பலோ, ‘ஆலம்பரைக் கோட்டை எங்க ஏரியா... உள்ளே வராத’ என சவுண்டு கொடுத்தார்கள். இதில் கடுப்பான இரு குப்பங்களின் ரெளடி கும்பல்களும் கிடைக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் ஊத்துக்காட்டான் கும்பலுடன் மோதிக்கொண்டன. கைத்தகராறு தொடங்கி கத்திக்குத்து வரை அன்றாடம் அரங்கேறின. இதில் உள்ளூரில் அப்பாவி பொதுமக்கள், மீனவர்கள் பாதிக்கப்பட்டது தனிக்கதை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேற்கண்ட பிரச்னை, மீனவர்கள் மத்தியிலும் எதிரொலித்தது. கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் படகுகளை கரைக்கு இழுத்து வர இன்ஜின்கள் தேவை. இங்கு உள்ள குப்பங்களுக்கு பொதுவாக இரண்டு இன்ஜின்கள் உள்ளன. இதில் யாருக்கு முன்னுரிமை என்பதில் மீனவர்களும் மோதிக்கொண்டார்கள். அவர்களில் சில கும்பல்கள் கடற்கரையில் கத்தி, அரிவாள், உருட்டுக்கட்டைகளுடன் அடிக்கடி மோதிக் கொண்டதால் நிஜமான போர்க்களமானது ஆலம்பரைக் கோட்டை.

இப்படியான சண்டை தொடங்குகிறது என்றால் சண்டைக்கு அழைப்பவர், முன்கூட்டியே இரண்டு குப்பங்களுக்கு நடுவே தங்கள் கொடியை நடுவது வழக்கம். இப்படித்தான் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஊத்துக்காட்டான் கும்பல், கடப்பாக்கம் கும்பலுடன் சண்டையிடத் தயாராகி கொடியை நட்டுவிட்டார்கள். இந்தத் தகவல் போலீஸாருக்குத் தெரியவர, அவர்களும் இரவோடு இரவாக அந்தக் கொடியை அப்புறப்படுத்தினர்.

விடிந்ததும் கொடி இல்லாததால், ஊத்துக்காட்டான் குப்பத்தினர் சமாதானமாகி விட்டதாக நினைத்த கடப்பாக்கம் குப்பத்தினர், வழக்கம்போல் கடலுக்குக் கிளம்பினர். பக்கிங்ஹாம் கால்வாய் முகத்துவாரத்தில் மறைந்திருந்த ஊத்துக்காட்டுக் கும்பல், கடப்பாக்கம் குப்பத்தினரை சரமாரியாக வெட்டினார்கள். இதில் சேகர், கிருஷ்ணன் ஆகிய இருவர் கொல்லப்பட்டனர். பத்து பேருக்கு கை, கால்கள் பறிபோயின. 15-க்கும் மேற்பட்டவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இதற்கு பழிவாங்கும்விதமாக கடப்பாக்கம் கும்பல், தண்டுமாரியம்மன் குப்பத்தின் கும்பலுடன் சேர்ந்து ஊத்துக்காடு குப்பத்தையே சூறையாடி விட்டார்கள். வீடுகள், படகுகள், இருசக்கர வாகனங்கள் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டன.

இருதரப்பினர் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்தனர். ஆனாலும், பகை தீரவில்லை. இதனால், ஆலம்பரைக் கோட்டைக்கு வெளியூர் ஆட்கள் யாரும் வரக் கூடாது என போலீஸார் தடைவிதித்துவிட்டனர். கடந்த இரண்டு வருடங்களாகவே சோதனைச்சாவடி அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். அப்படியும் ஒன்பது மாதங்களுக்கு முன்பு கடப்பாக்கம் கும்பல், ஊத்துக்காட்டானைச் சேர்ந்த தேசிங்கு என்பவரை வெட்டிக் கொலை செய்து பழிதீர்த்தனர்” என்று விவரித்தார்கள்.

காஞ்சிபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் கண்ணனிடம் பேசினோம். “நான் பொறுப்பேற்று மூன்று மாதங்கள்தான் ஆகின்றன. ஷூட்டிங் பணத்தை பங்கு பிரிப்பதில் பிரச்னை ஏற்பட்டு கலவரம் நடந்துள்ளது. தற்போது பதற்றம் குறைந்துள்ளது என்கிறார்கள். மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசித்து அந்தப் பகுதியில் சமாதானக் கூட்டம் நடத்தி சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க நடவடிக்கை எடுக்கிறோம்” என்கிறார்.

காவல்துறையினரின் நடவடிக்கை, அனைத்து தரப்பினருக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்க வேண்டும்! கூடவே, அந்தக் கோட்டைப் பகுதியில் நிரந்தர பாதுகாப்புக்கும் காவல்துறை ஏற்பாடுகள் செய்யவேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism