Published:Updated:

OTP முதல் உடனடி இணையவழி கடன் சேவை வரை! - எச்சரிக்கும் புதுச்சேரி சைபர் க்ரைம் போலீஸ்

சைபர் க்ரைம் ( சித்திரிப்புப் படம் )

சைபர் க்ரைம்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சூழலில், சைபர் க்ரைம் கும்பலால் எப்படியெல்லாம் நாம் குறி வைக்கப்படுகிறோம் என்று தெரிந்து வைத்துக் கொள்வது அவசியமாகிறது.

OTP முதல் உடனடி இணையவழி கடன் சேவை வரை! - எச்சரிக்கும் புதுச்சேரி சைபர் க்ரைம் போலீஸ்

சைபர் க்ரைம்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சூழலில், சைபர் க்ரைம் கும்பலால் எப்படியெல்லாம் நாம் குறி வைக்கப்படுகிறோம் என்று தெரிந்து வைத்துக் கொள்வது அவசியமாகிறது.

Published:Updated:
சைபர் க்ரைம் ( சித்திரிப்புப் படம் )

நாளுக்கு நாள் வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களைப் போலவே, அதைப் பயன்படுத்தி நடக்கும் குற்றங்களும், திருட்டுகளும் அதிகரித்து  வருகின்றன. நமது தேவைகள் மூலம் நம்மை நெருங்கும் சைபர் குற்றவாளிகள், எப்படியான யுக்திகளை கையாளுகிறார்கள் என்பது குறித்து, விகடனிடம் விரிவாக பேசியிருக்கிறார் புதுச்சேரி இணைய வழி குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் பி.சி. கீர்த்தி.

இணையவழி உடனடி கடன் சேவை முறைகேடு:

உங்களுக்கு அறிமுகம் இல்லாத எண்ணிலிருந்து உங்களுக்கு வரும் அழைப்பில், உங்களுக்கு கடன் பெறுவதற்கான லிங்க் அனுப்புவதாக கூறுவார்கள். அதன் பின்பு உங்களது தொலைபேசி எண்ணிற்கு ஒரு லிங்க் வரும். அல்லது உங்கள் நண்பர்கள் எண்ணிலிருந்தும் அப்படியான லிங்க் வரலாம். அந்த லிங்க் மூலம் பொய்யான அப்ளிகேஷனுக்குள் நீங்கள் உள்நுழைந்த அடுத்த நிமிடமே, உங்கள் கைபேசியில் இருக்கும் செல்போன் எண்கள், வாட்ஸ்-அப் தகவல்கள், அதிலுள்ள புகைப்படங்கள், செல்ஃபி புகைப்படங்கள், வீடியோக்கள், ஆதார் எண், பான் எண், வங்கி கணக்கு உள்ளிட்ட அனைத்து தகவல்களும் திருடப்பட்டுவிடும். அதற்கடுத்த 10 நிமிடங்களில் நீங்கள் ரூ,5,000 கடன் கேட்டிருந்தால், உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.2,000/- அல்லது ரூ.3,000/- ரூபாய் எந்தவொரு நிபந்தனைகளுமின்றி உங்கள் வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தி விடுவார்கள்.

லோன் ஆப்!
லோன் ஆப்!

உங்களுக்கு பணம் வந்த 7 வது நாளில் 10 மடங்கு வட்டியுடன், அதாவது 2,000/- ரூபாய்க்கு 20,000/- ரூபாய் பணம் கட்ட சொல்லி உங்களை மிரட்டுவார்கள். ஏற்கனவே நீங்கள் பணம் செலுத்தி இருந்தாலும் உங்களை மீண்டும் மீண்டும் பணம் கட்ட சொல்லி மிரட்டுவார்கள். மேலும் செல்போனில் இருந்து திருடப்பட்ட உங்கள் அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை, நிர்வாண புகைப்படங்களுடன் எடிட் செய்து உங்கள் வாட்ஸ்-அப்பில் உள்ள அனைவருக்கும் அனுப்பி வைப்பார்கள். அதன்மூலம் உங்கள் நன்மதிப்பை கெடுக்கும் விதத்தில் நடந்து கொள்வார்கள். அத்துடன்  உங்கள் காண்டாக்ட் லிஸ்டில் உள்ள அனைவருக்கும் போன் செய்து பணம் கட்ட சொல்லி ஆபாசமான வார்த்தைகளால் திட்டுவார்கள். அதனால் இதுபோன்ற போலியான அப்ளிகேஷன் மூலம் பணம் பெற்று பிரச்னைகளில் சிக்கிக்கொள்ள வேண்டாம்.

ஓ.எல்.எக்ஸ் முறைகேடு:

OLX அப்ளிகேஷன் மூலம் உங்களை நெருங்கும் இணைய குற்றவாளி, பெரும்பாலும் தன்னை இந்திய ராணுவத்தில் பணிபுரிவதாக கூறுவார்.  அத்துடன் தான் வேறு மாநிலத்திற்கு பணியிட மாற்றலாகி செல்லவிருப்பதாகவும், அதனால் தன்னிடம் உள்ள வாகனங்கள் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்களை மிகக்குறைந்த விலையில் விற்பதாகவும் சொல்லி, ஃபேஸ்புக் மற்றும் OLX பக்கத்தில் விளம்பரம் செய்திருப்பார். அப்படியான போலியான விளம்பரத்தை நம்பி அவசரப்பட்டு, ஆர்வமிகுதியால் நீங்கள் பணம் அனுப்பினால், அத்துடன் அந்த நபர் காணாமல் போய்விடுவார். அதனால் நேரில் உறுதிப்படுத்திய பின்னர் பொருட்களை வாங்குங்கள்.

OLX
OLX

வேலைவாய்ப்பு முறைகேடு:

வேலைவாய்ப்புகளுக்காக Shine.com மற்றும் Naukri.com போன்ற வலைத்தளங்களில் பதிவு செய்து வைத்திருப்பீர்கள். அந்த தகவல்களை திருடும் சைபர் குற்றவாளிகள், சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் இருந்து வேலை தருவதாக போலியாக பேசி உங்களிடம் இருந்து பணம் பறிக்க முயல்வார்கள். இது போன்ற மோசடிகளில் நீங்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

ஃபேஸ்புக் மூலம் பரிசுப்பொருட்கள்:

ஃபேஸ்புக் மூலம் உங்களை தொடர்பு கொள்பவர்கள் தான் வெளிநாட்டில் இருப்பதாகவும், தனக்கு இந்தியா மிகவும் பிடித்த நாடு என்றும் கூறுவார்கள். அத்துடன் வெளிநாட்டில் தனக்கு நிறைய சொத்துக்கள் இருப்பதாக கூறி, உங்களுடன் சில நாட்கள் போலி நட்புடன் பழகுவார்கள். பிறகு உங்களுக்கு விலையுயர்ந்த பரிசு பொருட்கள் அனுப்புவதாக கூறி, பரிசுப்பொருட்கள் அடங்கிய புகைப்படத்தையும் அனுப்பி உங்கள் ஆசையை தூண்டுவார்கள். பின்பு பரிசு பொருட்கள் கஸ்டம்சில் மாட்டிக்கொண்டதாகவும், அதற்கான வரியை செலுத்தினால் உங்களுக்கு பார்சல் வந்துவிடும் என்று கூறி பணம் பறித்துவிடுவார்கள். அதனால் முன்பின் தெரியாமல் ஃபேஸ்புக் மூலம் அறிமுகமாகும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.

பரிசுப் பொருள்கள்
பரிசுப் பொருள்கள்

விமான நிறுவன வேலை முறைகேடு:

செல்போன் குறுந்தகவல் அல்லது மின்னஞ்சல் மூலம் உங்களை தொடர்பு கொண்டு ஏர்போர்ட் நிறுவனத்தில் பல்வேறு வேலைகள் காலியாக இருப்பதாகவும், அதை வாங்கித் தருவதாகவும் ஆசை காட்டுவார்கள். நீங்கள் அளிக்கும் பதில் மூலம் உங்கள் விருப்பத்தை தெரிந்துகொண்டு பணம் பறிக்க முயற்சி செய்வார்கள். அவர்களிடம் இருந்தும் உஷாராக இருக்க வேண்டும்.

கூகுளில் நிரம்பிக் கிடக்கும் போலி வலைத்தளங்கள்:

போலியான வலைத்தளங்கள் கூகுளில் அதிகமாக உள்ளது. கூகுளில் அமேசான், ஃபிளிப்கார்ட் மற்றும் வங்கிகளின் கஸ்டமர் கேர் எண்களை தேடும்போது, போலியான வலைத்தளத்தில் உங்கள் வங்கி தகவல்களை பதிவிடுவதை தவிர்க்க வேண்டும். அப்படி செய்யும்போது உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணம் அனைத்தையும் இழக்க நேரிடும். எனவே நீங்கள் சரியான வலைப்பக்கத்திற்குள்தான் செல்கிறீர்களா என உறுதி படுத்திக்கொள்ள வேண்டும்.

Real site URL: http://www.onlinesbi.sbi/

Fake site URL: http://www.onlinsbi.sbi/

காவல் ஆய்வாளர் பி.சி.கீர்த்தி.
காவல் ஆய்வாளர் பி.சி.கீர்த்தி.

OTP மோசடி:

சில குறிப்பிட்ட வங்கியின் மேனேஜர் என்று தொடர்பு கொள்பவர்கள், உங்கள் வங்கி கணக்கு, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பிளாக் ஆகி விட்டதாக கூறுவார்கள். அதற்காக KYC, ஆதார் எண், பான் கார்டு போன்றவற்றை அப்டேட் செய்ய வேண்டும் என்று கூறி,  உங்களுடைய வங்கிக் கணக்கு மற்றும் டெபிட் கார்டுகளின் OTP தகவல்களை கேட்பார்கள். எந்த வங்கியில் இருந்தும் இது போன்ற தகவல்களை எந்த ஒரு வங்கிக் கிளை மேலாளர்களும் கேட்கமாட்டார்கள். எனவே ஒருபோதும் நீங்கள் உங்கள் வங்கி தொடர்பான தகவல்களை யாரிடமும் சொல்ல கூடாது.

கிரெடிட் கார்டு மோசடி:

உங்களுடைய கிரெடிட் கார்டு லிமிட்டை அதிகப்படுத்தி தருவதாக கூறி,  உங்களுடைய கிரெடிட் கார்டு விபரங்கள் மற்றும் OTP எண்ணை  கேட்பார்கள். ஒருபோதும் இந்த தகவல்களை அவர்களுக்கு நீங்கள் தெரிவிக்கக் கூடாது.

எஸ்.பி.ஐ யோனோ அப்ளிகேஷன்:

உங்கள் Yono அப்ளிகேஷன் பிளாக் ஆகிவிட்டது என குறுந்தகவல் லிங்க் அல்லது போன் கால் மூலமாகவோ அழைப்பு வரும். பிறகு அந்த லிங்கில் உங்கள் Yono அப்ளிகேஷன் ஐ.டி மற்றும் பாஸ்வேர்டை பதிவிடுமாறு கேட்கப்பட்டிருக்கும். அதன்படி உங்கள் ரகசிய தகவல்களை பதிவு செய்தால் உங்கள் வங்கிக்கணக்கில் இருக்கும் பணத்தை உடனே திருடிவிடுவார்கள் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

கிரெடிட் கார்டு
கிரெடிட் கார்டு

பண இரட்டிப்பு மோசடி:

10,000/- ரூபாய் முதலீடு செய்தால் ஒருசில மாதங்களில் உங்கள் பணத்தை இரட்டிப்பாக்கி தருகிறோம் (Money doubling) என்பது போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்கள் இன்ஸ்டாகிராம், டெலிகிராம், ஃபேஸ்புக் பக்கங்களில் நிரம்பிக் கிடக்கிறது. அதை நம்பி அந்த விளம்பரத்திற்குள் சென்றால், ஆசை வார்த்தைகள் கூறி உங்களை லட்சக்கணக்கில் மோசடி செய்யக்கூடும், அப்படியான மோசடி விளம்பரங்களை நம்பி ஏமாந்துவிட வேண்டாம். மேலும் பிட் காயின், ஆன்லைன் டிரேடிங் தொடர்பான போலியான விளம்பரங்களும் சமூக வலைத்தலங்களில் அதிகமாக கிடக்கிறது. அவற்றில் பெரும்பாலும் முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது.

இன்ஸ்டாகிராம் ஆள்மாறாட்ட மோசடி:

உங்கள் நண்பர்கள் பெயரில் போலியாக உருவாக்கிய இன்ஸ்டாகிராம் மூலம் உங்களிடம் சாட் செய்து, பிட்காயினில் முதலீடு செய்யும்படி கூறுவார்கள். தானும் அதில் முதலீடு செய்வதாக நம்பிக்கை கொடுப்பார்கள். அத்துடன் உங்கள் மெயில் ஐ.டி மற்றும் பாஸ்வார்டை பெற்று உங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கை ஹேக் செய்துவிடுவார்கள். இதுபோன்ற மோசடிகளில் இருந்து கவனமாக இருக்க வேண்டும்.