பிரிந்த காதலை சேர்த்து வைக்கும் ஆப் மூலமாக, ஒரு பெண்ணிடம் 40 சவரன் நகையை ஏமாற்றிய பஞ்சாப்பை சேர்ந்த இருவரை சென்னை விமான நிலைய காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பள்ளி நாள்களின்போது காதலித்த சீனியர், பின்நாள்களில் வெளிநாட்டுக்குச் சென்றுவிடவே அவரோடு எப்படியாவது ஒன்று சேர்ந்துவிட வேண்டும் என்று முயற்சி செய்துள்ளார் சென்னையைச் சேர்ந்த அந்தப் பெண்.

எப்படியாவது தன்னுடைய முறிந்த காதலனை சேர்ந்துவிட வேண்டும் என்று நினைத்தபோது, `How to Bring Back X’ என்ற ஆப் அவரது கண்ணில் பட்டது. ஒரு வழி கிடைத்துவிட்டதென அதில் சென்று தன்னுடைய பெயர், காதலனின் விவரங்களைப் பதிவு செய்திருக்கிறார்.
அப்பெண்ணை அந்த வலைதளம் மூலமாக இருவர் தொடர்பு கொண்டு பேசி, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வருமாறு கூறியுள்ளனர். அங்கு சென்ற பெண்ணிடம், `உன்னுடைய காதலைச் சேர்த்து வைக்கிறோம். ஆனால், இதற்கு அதிக பணம் செலவாகும், பணம் இல்லை என்றாலும் பரவாயில்லை நகையாகக் கொடுத்தாலும் சரி' என்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
காதலனுடன் சேர்ந்து விட வேண்டும் என்ற ஆசையிலும், இவர்களின் மீது வைத்த நம்பிக்கையிலும், 40 சவரன் நகையைக் அவர்களிடம் கொடுத்திருக்கிறார். நகையை வாங்கிச் சென்றவர்கள், சொன்னபடி காதலனோடு சேர்த்து வைப்பதற்கான எந்த வேலையையும் செய்யவில்லை.

மாறாக சிறிது நாளிலேயே அப்பெண்ணை மீண்டும் தொடர்பு கொண்டு, `அப்பணம் போதவில்லை; இன்னும் 5 லட்சம் கொடுக்க வேண்டும், இல்லையெனில் உன்னுடைய அந்தரங்க தகவல்களை சமூக வலைதளத்தில் பரப்பி விடுவோம்' என மிரட்டி உள்ளனர். அதிர்ச்சியடைந்த அப்பெண் என்ன செய்வதென்று தெரியாமல், சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரை ஏற்றுக்கொண்டு அந்த வலைதளத்தின் முகவரியைக் காவல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததில், அவர்கள் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்தது. காவல் துறையினர் அந்தப் பெண்ணை பணம் தருவதாகக் கூறி அவர்களை மீண்டும் விமான நிலையத்துக்கு அழைக்குமாறு கூறியுள்ளனர். அப்படியே அப்பெண்ணும் அழைக்க பணம் பெற இருவரும் வந்துள்ளனர்.
பெண்ணை அவர்களோடு பேசச் சொல்லி, பயணிகள் போல மஃப்டியில் காவல்துறை அதிகாரிகள் கண்காணித்தனர். பஞ்சாபைச் சேர்ந்த 27 வயதான அனில் குமார் மற்றும் 33 வயதான ககன்தீப் பார்கவ் பணத்தைப் பெறும் ஆவலில், விமான நிலையம் வந்து அப்பெண்ணிடம் பேசி, பணம் பெறும் சமயத்தில், காவல் துறை அதிகாரிகள் சுற்றி வளைத்து பிடித்தனர்.

இந்த வலைதளத்தின் மூலம் பலரையும் ஏமாற்றியது கண்டறியப்பட்டு, அவர்களிடமிருந்த 8.5 லட்சம் பணம், 54 கிராம் தங்கச் சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, ஆலந்தூர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். விரைவிலேயே காவல் துறையினர் இவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
காதலனிடம் சேரும் எண்ணத்தில் பெண் ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட தகவல் அவருக்கே எதிராக முடிந்துள்ளது. பல வழிகளில் மோசடிகள் அதிகரித்து வருவதால், தனிப்பட்ட தகவல்களை சமூக வலைதளத்திலோ, நம்பிக்கையில்லாத இடங்களிலோ பகிர்வதைத் தவிர்ப்பது நல்லது.