Published:Updated:

தப்பிக்க, பெண் வேடம்; அடித்துக் கொன்றதாக உறவினர்கள் கண்ணீர்! - சர்ச்சையில் அரியலூர் போலீஸ்

உறவினர்கள்
உறவினர்கள்

அவர் மனைவிக்கு வந்த தொலைபேசி நம்பரை வைத்து, போலீஸார் டிராக்கிங் செய்ததில், உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள காட்டுக்கோயில் காட்டுப்பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

விசாரணைக்காக அழைத்துவரப்பட்டவர் மர்மமான முறையில் இறந்த சம்பவம், அரியலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸார் அடித்ததால் இறந்துபோனாரா... இல்லை நெஞ்சுவலியால் இறந்துபோனாரா என்று பல்வேறு சந்தேகங்கள் இந்த விவகாரத்தில் எழுந்துள்ளன.

போலீஸார் விசாரணையில் உயிரிழந்த மணி
போலீஸார் விசாரணையில் உயிரிழந்த மணி

அரியலூர் மாவட்டம் தா.பழூர், ஆண்டிமடம், செந்துறை உள்ளிட்ட பல பகுதிகளில், கொள்ளைச் சம்பவங்கள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன. கொள்ளையர்களை காவல்துறையினர் பிடிக்க முடியாமல் தினம்தோறும் அல்லாடி வந்தனர். இந்த நிலையில், ஆண்டிமடத்தில் உள்ள கோயிலில் உண்டியல் பணம் மற்றும் ஆலய மணி திருடப்பட்டன. அதே நாளில், செல்வராணி என்பவரின் வீட்டில் லட்சக்கணக்கில் பணம், நகை கொள்ளை போனது. இதுகுறித்து விசாரிக்க, அரியலூர் எஸ்.பி. சீனிவாசன் தனிப்படை அமைத்தார்.

விசாரணையில், ஆண்டிமடம் அருகே உள்ள கஞ்சமலைப்பட்டி பகுதியைச் சேர்ந்த மணி என்பவர் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் விசாரணை நடத்துவதற்காகத் தனிப்படை போலீஸார் அவருடைய கிராமத்திற்குச் சென்றுள்ளனர். இந்தத் தகவல் அவருக்குத் தெரியவர, போலீஸ் பிடியில் சிக்காமல் இருக்க சேலை உடுத்திக்கொண்டு மாறுவேடத்தில் தப்பிச்சென்றுள்ளார். பின்பு, அவரைப் பிடிக்க முடியாமல் விசாரணை நடத்திவந்தனர் காவல்துறையினர். இந்த நிலையில், அவரின் மனைவிக்கு வந்த தொலைபேசி நம்பரைவைத்து போலீஸார் டிராக்கிங் செய்ததில், உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள காட்டுக்கோயில் காட்டுப்பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற தனிப்படை போலீஸார், மணியை சுற்றிவளைத்துக் கைது செய்தனர்.

மணியின் உறவினர்கள்
மணியின் உறவினர்கள்

பின்பு, மணியைக் காவல் நிலையத்துக்கு அழைத்துவந்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில், மணிக்கு நேற்றிரவு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதுடன், நெஞ்சு வலிப்பதாகச் சொல்லியிருக்கிறார். உடனே தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, மணியின் உடலை மீட்ட போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக அரியலூர் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கு... 9.92 கோடி ரூபாயை வீணடித்த அரசு!

இவருடைய மரணம்குறித்து அரியலூர் எஸ்பி விசாரணை நடத்தி வருகிறார். இதுகுறித்து மணியின் உறவினர்களிடம் பேசினோம். ``போலீஸார் பிடித்துச்செல்லும்போது நன்றாகத்தான் இருந்தார். அவரை தாக்கியதால்தான் மணி இறந்துபோனார். மணியின் இறப்பில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது. உயர் அதிகாரிகளைக் கொண்டு விசாரிக்க வேண்டும். இல்லையென்றால், மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம்” என்று எச்சரித்தனர்.

அரியலூர் எஸ்.பி ஆபிஸ்
அரியலூர் எஸ்.பி ஆபிஸ்

என்ன நடந்தது என்று சில காவல்துறை வட்டாரத்தில் பேசினோம். ``ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் வீடு மற்றும் கோயில் நகைகள் மற்றும் உண்டியலைத் திருடிச்செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது மணியின் கும்பல். மணி மற்றும் அவருடைய கூட்டாளிகள்மீது ஏகப்பட்ட கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ஆயிரங்கால் மண்டபத்தில் நடந்த தொழிலதிபர் மகள் திருமணம்! - சிதம்பரம் தீட்சிதர்களிடம் போலீஸ் விசாரணை

இந்த நிலையில், அவரைப் பிடிப்பதற்காகத் தனிப்படை அமைத்துத் தேடிவந்தோம். இந்த நிலையில், அவருடைய மனைவிக்கு வந்த போன் காலை வைத்து ட்ரேஸ் செய்து, அவரை மடக்கிப் பிடித்தோம். அவருக்கு வயது ஐம்பது ஆகிறது. அவரை மிரட்டி விசாரித்தோம். அப்போது அவருக்கு நெஞ்சு வலிப்பதாகச் சொன்னார். அதன்பேரில் மருத்துவமனையில் அனுமதித்தோம்.

அரியலூர் கலெக்டர் ஆபிஸ்.
அரியலூர் கலெக்டர் ஆபிஸ்.

வரும் வழியில் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் சொன்னார்கள். மாவட்டத்தின் பல இடங்களில் திருட்டு நடக்கிறது. அதை காவல்துறை தடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் சொல்கிறார்கள். குற்றவாளிகளைப் பிடித்தால் அடிக்கக்கூடாது என்கிறார்கள். அவர்களை அடிக்காமல் எப்படித்தான் பொருள்களைப் பறிமுதல் செய்வது? திருட்டைத் தடுப்பதற்கு எங்களுக்கு ஒரு வழி நீங்களே சொல்லுங்கள்" என்றனர் காட்டமாக.

அடுத்த கட்டுரைக்கு