Published:Updated:

`எல்லாத்தையும் நிறுத்திட்டு வா!' - புத்தி சொன்ன மனைவி; உயிரை மாய்த்துக்கொண்ட ரவுடி

மனைவி திட்டியதால் மதுபானத்தில் விஷம் கலந்து ரவுடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அரியலூரில் நடந்துள்ளது.

தற்கொலை செய்துகொண்ட பிரபு
தற்கொலை செய்துகொண்ட பிரபு

அரியலூர் மாவட்டம் ஓலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர், பிரபு. இவரது மனைவி கிருத்திகா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர், திருட்டு, வழிப்பறி, கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

அரியலூர்
அரியலூர்

இதுதொடர்பாக பிரபு மீது காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில், லால்குடியில் வழிப்பறியில் ஈடுபட்டதற்காக அவரை போலீஸார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்த அவர், சில தினங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர், தனது சொந்த ஊரான ஓலையூருக்குச் சென்றபோது அங்கு, மனைவி மற்றும் குழந்தைகள் இல்லை.

`பொய் சொன்னேன், கணவர் கொலை செய்துவிட்டார்'- ரவுடி கொலையில் சிக்கிய அம்மு வாக்குமூலம்!

இதையடுத்து, மனைவியின் சொந்த ஊரான மீன் சுருட்டிக்குச் சென்றார். மனைவியின் பெற்றோர் வீட்டில் இருந்த கிருத்திகாவைத் தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். ஆனால் கிருத்திகா மறுத்துவிட்டார். இதனால் வேதனையடைந்த பிரபு, இலையூரில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

தற்கொலை செய்துகொண்ட பிரபு
தற்கொலை செய்துகொண்ட பிரபு

இன்று காலை நீண்ட நேரமாகியும் பிரபு எழுந்திருக்கவில்லை. அவரது தந்தை, பிரபுவை எழுப்பியபோது அவர் இறந்துவிட்டது தெரியவந்தது. இதுகுறித்த தகவல் அறிந்ததும், ஆண்டிமடம் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று பிரபுவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பிரபுவின் மரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். அப்போது அவர், மனைவி தன்னுடன் குடும்பம் நடத்த வர மறுத்ததால், மதுவில் விஷம் கலந்து குடித்துத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

வழக்கை விசாரித்துவரும் போலீஸாரிடம் பேசினோம். ``பிரபுவின் மீது திருச்சி, லால்குடி, ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் உள்ளிட்ட பல ஊர்களில் 20-க்கும் மேற்பட்ட‌ கொலை, கொள்ளை வழக்குகள் இருக்கின்றன‌. இந்த நிலையில் குண்டர் சட்டத்தில் சிறையிலிருந்த அவர், கடந்த 26‍‍‍-ம் தேதிதான் வெளியே வந்திருக்கிறார். வந்ததும் வீட்டில் மனைவி, பிள்ளைகள் இல்லை.

அரியலூர் எஸ்.பி அலுவலகம்
அரியலூர் எஸ்.பி அலுவலகம்

தன் அப்பாவிடம் கேட்டபோது, என்னிடம் சண்டை போட்டுவிட்டு பிள்ளைகளைத் தூக்கிக்கொண்டு அம்மா வீட்டுக்குச் சென்றுவிட்டாள் என்று கூறியுள்ளார். பின்னர், மனைவியைப் பார்க்க பிரபு அங்கு சென்றுள்ளார். அப்போது, ``உன்னால நான் வீட்டில தனியா இருக்க முடியல. ஒரு பக்கம் போலீஸோட டார்ச்சர், இன்னொரு பக்கம் ரவுடிப் பயலுக வீட்டுக்கு வந்து மிரட்டிட்டுப் போறானுங்க. உன்னோட திருட்டுப் புத்தி என்னோட பிள்ளைகளுக்கும் வரணுமா? எல்லாத்தையும் நிறுத்திட்டு வா'' என்று கண்டபடி திட்டி அனுப்பியிருக்கிறார். அந்த கடுப்பில் மதுபானம் வாங்கி, அதில் விஷத்தைக் கலந்து குடித்து இறந்திருக்கிறார்" என்று தெரிவித்தனர்.