Published:Updated:

கேரளா: `பழங்குடி மாணவிகள்தான் டார்கெட்...' காதல்வலை வீசும் கஞ்சா மாஃபியாக்கள் - பறிபோகும் உயிர்கள்!

பாலியல் தொல்லை ( சித்தரிப்புப் படம் )

திருவனந்தபுரம் மாவட்டத்தில், பழங்குடியின கிராமங்களில் மாணவிகளை காதல்வலையில் வீழ்த்தி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, தற்கொலைக்கு தூண்டிய டிரக் மாஃபியாக்களுக்கு காவல்துறை கடிவாளம் போட வேண்டும் என்கிறார்கள் அந்தப் பகுதி மக்கள்.

கேரளா: `பழங்குடி மாணவிகள்தான் டார்கெட்...' காதல்வலை வீசும் கஞ்சா மாஃபியாக்கள் - பறிபோகும் உயிர்கள்!

திருவனந்தபுரம் மாவட்டத்தில், பழங்குடியின கிராமங்களில் மாணவிகளை காதல்வலையில் வீழ்த்தி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, தற்கொலைக்கு தூண்டிய டிரக் மாஃபியாக்களுக்கு காவல்துறை கடிவாளம் போட வேண்டும் என்கிறார்கள் அந்தப் பகுதி மக்கள்.

Published:Updated:
பாலியல் தொல்லை ( சித்தரிப்புப் படம் )

கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டத்தில் விதுரா, ஊருபொய்கா, விட்டிக்காவு, இடிஞாறு, ஈயக்கோடு, பெருங்கமலா போன்ற மலையோர கிராமங்கள் விவசாயத்தைப் பிரதானமாகக்கொண்டிருக்கின்றன. இந்த கிராமங்களிலிருக்கும் மக்கள் அனைவரும் விவசாய கூலி வேலைக்குச் செல்பவர்கள். விதுரா மலையோர கிராமத்தைச் சேர்ந்த 18 வயது மாணவி ஒருவர், கடந்த 10-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். மாணவியின் தற்கொலை தொடர்பாக போலீஸார் விசாரணையில் இறங்கியதில், அந்த மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது. கடந்த சில மாதங்களாக மலையோர கிராமங்களில் தொடர்ச்சியாக மாணவிகள் தற்கொலை செய்துகொள்வது அந்தப் பகுதி மக்களை அச்சப்படவைத்தது. இது தொடர்பாக, கணக்கெடுத்துப் பார்த்தபோது கடந்த ஐந்து மாதங்களில், ஐந்து மாணவிகள் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. அதேபோல, இரண்டு மாணவிகள் தற்கொலைக்கு முயன்றபோது காப்பாற்றப்பட்டனர்.

இந்தத் தொடர் தற்கொலைச் சம்பவங்களின் பின்னணியில், டிரக் மாஃபியாக்கள், மாணவிகளைத் தங்கள் காதல்வலையில் வீழ்த்தி, பின்னர் பாலியல் வன்கொடுமைக்கு இரையாக்கியதும், அதன் காரணமாக மாணவிகள் தற்கொலைக்குத் தூண்டப்பட்ட தகவல்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.

மலையோர கிராமங்களில் எஸ்.பி திவ்யா கோபிநாத் விசாரணை
மலையோர கிராமங்களில் எஸ்.பி திவ்யா கோபிநாத் விசாரணை

இந்த அதிர்ச்சி ரகத் தகவல்கள் குறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலரிடம் பேசினோம். ``மலையோர கிராமங்களைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் காலையிலேயே விவசாய வேலை செய்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுவிடுவார்கள். குழந்தைகள்தான் வீட்டில் இருப்பார்கள். கொரோனா காரணமாக ஆன்லைனில் வகுப்புகள் நடப்பதால், மாணவிகள் வகுப்பை கவனிக்க மொபைல் வாங்கி கொடுத்திருக்கிறார்கள். மலைக்கிராமங்களின் அருகில் உள்ள இளைஞர்கள் கஞ்சாவுக்கு அடிமை ஆகி டிரக் மாஃபியாக்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள். அவர்கள் மலைக்கிராமங்களில் இரண்டு, மூன்று நாள்கள் சுற்றிவிட்டு, மாணவிகளின் மொபைல் எண்களை வாங்கிவிடுகிறார்கள். பின்னர் அவர்களைக் காதல்வலையில் வீழ்த்திவிடுகிறார்கள். மாணவிகள் உண்மையாகக் காதலிக்கின்றனர். ஆனால், அந்த இளைஞர்கள் மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தொடர்பைத் துண்டித்துவிடுகிறார்கள். இதனால் மன உளைச்சலில் மாணவிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். ஆனால், அதைப் பற்றிக் கவலைப்படாத போதை இளைஞர்கள் அடுத்த மாணவிக்கு வலைவீசச் சென்றுவிடுகிறார்கள். காதல் என்ற பெயரில் ஏமாற்றப்பட்டு இறந்தவர்கள் பட்டியலில் பள்ளி மாணவிகள் முதல் கல்லூரி மாணவிகள் வரை உள்ளனர். அனைத்து மாணவிகளுமே நன்றாகப் படிக்கக்கூடியவர்கள்" என்றவர்கள், சில தற்கொலைக்கான காரணங்களை விரிவாகக் கூறினார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``இடிஞாறு வெட்டிக்காவில் 16 வயது மாணவி, கடந்த நவம்பர் 1-ம் தேதி உயிரிழந்தார். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது தெரியவந்தது. இறந்த மாணவி, தான் சதிக்குழியில் வீழ்ந்துவிட்டதாக இருக்கலாம் என்று முன்பு தன் தந்தையிடம் கூறியிருந்தார். அது பற்றி தந்தை பாலோடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் பல வாரங்களுக்குப் பிறகு இடிஞாறு பகுதியைச் சேர்ந்த அலன் பீட்டர் என்ற இளைஞரை போலீஸார் கைதுசெய்தனர். டிரக் மாஃபியாவைச் சேர்ந்த அலன் பீட்டருக்கு உதவிய சிலரை போலீஸார் தேடிக்கொண்டிருக்கிறார்கள். பெருங்கமலப் பகுதியில் 16 வயது மாணவி கடந்த நவம்பர் 21-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். அவர் பெற்றோர் படிக்க வாங்கிகொடுத்த மொபைல் மூலம் தன் காதலனிடம் பேசியது தெரியவந்தது. மாணவி இறந்ததை அறிந்ததும் அவர் மொபைலிலிருந்த ஆவணங்களை அழிக்க இடிஞாறு வெட்டிக்காவு பகுதியைச் சொந்த சேம் என்ற பிபின் குமார் அங்கு வந்திருக்கிறார். அப்போது அவரை போலீஸார் கைதுசெய்தனர்.

பலியாகும் மாணவிகள்
பலியாகும் மாணவிகள்

டி.டி.சி படித்த 19 வயது பெண் ஒருவரும் நவம்பர் மாதம் தற்கொலை செய்துகொண்டார். அந்தப் பெண்ணும் தனக்கு ஒரு காதலன் இருப்பதாக மட்டும் அம்மாவிடம் கூறியிருக்கிறார். அது யார் என்று இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. விதுரா ஆனப்பாறை பகுதியில் 18 வயது மாணவியைக் காதலித்த ஸ்ரீஜித் என்ற இளைஞன் அவரைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி நெருங்கியிருக்கிறான். ஆனால், அவனுக்குப் பல பெண்களுடன் தொடர்பு இருந்தது அந்த மாணவிக்கு தெரியவந்திருக்கிறது. இது பற்றிக் கேட்டபோது அந்த மாணவியைத் திருமணம் செய்ய மாட்டேன் எனக் கூறி அசிங்கப்படுத்தியிருக்கிறான். இதையடுத்து அந்த மாணவி தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கில் ஸ்ரீஜித் கைதுசெய்யப்பட்டார். காதல்வலையில் வீழ்த்திய மாணவியைத் தங்கள் பகுதிக்கு அழைத்து, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரங்களும் நடந்திருக்கின்றன. இதுவும் தற்கொலைக்குக் காரணமாக அமைந்துவிடுகிறது. பக்கத்து வீடுகளைச் சேர்ந்த மாணவிகளிடம் தொடர்பு ஏற்படுத்தித் தரும்படி சில மாணவிகளை மிரட்டவும் செய்திருக்கிறார்கள் இந்த டிரக் மாஃபியாக்கள். சில மாணவிகளைக் காதலில் வீழ்த்தி, அவர்களுக்கு மொபைல்போனும் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். விதுரா உள்ளிட்ட கிராமப் பஞ்சாயத்துகளில் கஞ்சா மாஃபியா ஆதிக்கம் அதிகம். இவர்களால்தான் பெண்கள் சதிக்குழியில் வீழ்கிறார்கள். வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் இந்த மாஃபியாக்களின் அராஜகங்களை ஒடுக்க எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை" என்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தச் சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து ஆய்வுசெய்து அறிக்கை அளிக்கும்படி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், கடந்த 17-ம் தேதி திருவனந்தபுரம் ரூரல் எஸ்.பி திவ்யா கோபிநாத் பழங்குடியின கிராமங்களுக்குச் சென்று விசாரணை நடத்தினார். இது பற்றி நம்மிடம் பேசிய திருவனந்தபுரம் ரூரல் எஸ்.பி திவ்யா கோபிநாத், ``நான் விசாரணை நடத்திய அளவில் அவை நேச்சுரல் டெத் இல்லை என்பது தெரியவந்துள்ளது. ஒவ்வொரு வழக்கிலும் ஒவ்வொரு விஷயம் இருக்கிறது. காதல் விவகாரங்களும் உண்டு. சில வழக்குகள் போக்‌சோவும்கூட. பழகிய ஆண்கள் ஆன்லைன் மூலம் மாணவிகளிடம் பேசிவந்துள்ளனர். இது குறித்து விரிவான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

 பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை
சித்தரிப்புப் படம்

பழங்குடி கிராமங்களில் விசாரணைக்குச் சென்ற மற்றொரு போலீஸ் அதிகாரியிடம் பேசினோம். ``இந்தப் பகுதிகளில் போதைப்பொருள் மாஃபியாக்கள் அதிகமாக இருக்கின்றனர். அவர்கள்தான் மாணவிகளை காதல் என்ற போர்வையில் வீழ்த்துகிறார்கள். செட்டில்மென்ட் காலனியில் உள்ள மாணவிகளுக்கு விழிப்புணர்வு குறைவாக உள்ளது. இளைஞர்கள் காதலிப்பதாக நடிக்கிறார்கள். ஆனால், மாணவிகள் உண்மையாகக் காதலிக்கிறார்கள். காதல், தோல்வியில் முடியும்போது மாணவிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். காவல்துறை சார்பில் விழிப்புணர்வு வகுப்புகள் நடத்துவதற்கும், அந்தப் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி வெளியிலிருந்து கிராமங்களுக்கு வரும் நபர்களை அடையாளம்காணும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறோம். அதேபோல, வனத்துறையினருடன் இணைந்து ரோந்து செல்வதை அதிகரிக்கவிருக்கிறோம்" என்றார்.

கஞ்சா மாஃபியாக்களை ஒழித்து, மாணவிகளைக் காப்பாற்ற போலீஸார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் மலைவாழ் மக்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism