Published:Updated:

தூத்துக்குடி: திருநங்கைகளின் தலைமுடியை அறுத்துக் கொடூரத் தாக்குதல்; அதிர்ச்சி வீடியோ - 2 பேர் கைது!

கழுகுமலை காவல் நிலையம்

தூத்துக்குடியில் இரண்டு திருநங்கைகள்மீது தாக்குதல் நடத்தியதுடன், அவர்களின் தலைமுடியை பிளேடால் வெட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து தாக்குதல் நடத்திய இரண்டு பேரை போலீஸார் கைதுசெய்தனர்.

தூத்துக்குடி: திருநங்கைகளின் தலைமுடியை அறுத்துக் கொடூரத் தாக்குதல்; அதிர்ச்சி வீடியோ - 2 பேர் கைது!

தூத்துக்குடியில் இரண்டு திருநங்கைகள்மீது தாக்குதல் நடத்தியதுடன், அவர்களின் தலைமுடியை பிளேடால் வெட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து தாக்குதல் நடத்திய இரண்டு பேரை போலீஸார் கைதுசெய்தனர்.

Published:Updated:
கழுகுமலை காவல் நிலையம்

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருகேயுள்ள துலுக்கர்பட்டியைச் சேர்ந்த திருநங்கை மகேஷ், இவருடைய தோழி அனன்யா. தென்காசி மாவட்டம் கே.ஆலங்குளத்தைச் சேர்ந்த இவரும் திருநங்கைதான். இவர்கள் இருவரும் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி துலுக்கர்பட்டியிலிருந்து கெச்சிலாபுரத்துக்கு இரு சக்கரவாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது கழுகுமலையைச் சேர்ந்த நோவாபூபன், அவரின் நண்பரான சங்கரன்கோவிலைச் சேர்ந்த விஜய் இருவரும் வழிமறித்து, இரண்டு திருநங்கைகளையும் கடத்திச் சென்று கெச்சிலாபுரத்திலுள்ள காட்டுப்பகுதியில் வைத்து தாக்கியுள்ளனர்.

திருநங்கைகள் மகேஷ் - அனன்யா
திருநங்கைகள் மகேஷ் - அனன்யா

அனன்யாவின் தலைமுடியை பிளேடால் அறுத்துள்ளனர். அதை வீடியோவாகவும் எடுத்ததுள்ளனர். ``இதை வெளியே சொல்லக் கூடாது. சொன்னால் கொலை செய்துவிடுவோம்” என, நோவாபூபன், விஜய் ஆகிய இருவரும் மிரட்டியுள்ளனராம். இந்தத் தாக்குதலில் காயமடைந்த அனன்யா, மகேஷ் இருவரும் கோவில்பட்டி, மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்துள்ளனர். மேலும், நோவாபூபன், விஜய் இருவரும் அரசு மருத்துவமனைக்கு வந்து, ``ரெண்டு பேரும் இந்த ஊர்லயே  இருக்கக் கூடாது”  என திருநங்கைகளை அரிவாளைக் காட்டி மிரட்டியதாகச் சொல்லப்படுகிறது.

இதனையடுத்து இரண்டு திருநங்கைகளும், மருத்துவமனையிலிருந்து யாரிடமும் சொல்லாமல் கிளம்பிச் சென்றுள்ளனர். இந்த நிலையில் இரு திருநங்கைகள் தாக்கப்படும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து திருநர் உரிமைக் கூட்டியக்கத்தின் மாநிலத் தலைமை ஒருங்கிணைப்பாளரான  கிரேஸ்பானு, ”இந்த மாதிரியான வன்முறை எப்போது முடிவுக்கு வரும்... இதைப்போல வன்முறைகளை திருநர் சமூகத்தினர் தினம் தினம் அனுபவித்துவருகிறார்கள்” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.   

கைதுசெய்யப்பட்ட இருவர்
கைதுசெய்யப்பட்ட இருவர்

இதையடுத்து தென்மண்டல காவல்துறை ஐ.ஜி அஸ்ராகார்க், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணன் ஆகியோர்,  ”இரு திருநங்கைகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு, இருவரும் கைதுசெய்யப்படுவர்கள்”  என உறுதியளித்துள்ளனர். இதையடுத்து இரண்டு திருநங்கைகள் மீது தாக்குதல் நடத்திய நோபா யூபன், விஜய் இருவரையும் கழுகுமலை காவல் நிலைய போலீஸார் கைதுசெய்து ஆபாசமாகப் பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல், திருநங்கைகளின் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.