Published:Updated:

`ஸ்பை கேமரா, மெமரி கார்டு; 2 நாள்களில் ரூ.80 லட்சம்!' - திரிபுராவை அதிரவைத்த துருக்கி கும்பல்

இந்த இரண்டு நாள்களில், பல்வேறு பொதுத்துறை வங்கிகளின் ஏடிஎம் மையங்களில் மொத்தம் 80 லட்சம் ரூபாய்வரை கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

ஏடிஎம் கொள்ளை
ஏடிஎம் கொள்ளை ( vikatan )

துருக்கியைச் சேர்ந்த சைபர் கிரைம் கும்பல் ஒன்று, திரிபுரா தலைநகர் அகர்தலாவிலுள்ள பொதுத்துறை வங்கிகளின் ஏடிஎம் மையங்களில் கொள்ளையடித்திருப்பது தெரியவந்துள்ளது. அகர்தலாவிலுள்ள பொதுத்துறை வங்கி வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்கிலிருந்த பணம் திருடப்பட்டிருப்பதாக, அகர்தலா காவல்துறைக்கு கடந்த இரண்டு நாள்களில் மட்டும் மொத்தம் 60 புகார்கள் வந்திருக்கின்றன. இவற்றில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வாடிக்கையாளர்களிடமிருந்து மட்டும் மொத்தம் 45 புகார்கள் பெறப்பட்டுள்ளன.

ஏடிஎம் கார்டு
ஏடிஎம் கார்டு

இந்த இரண்டு நாள்களில், பல்வேறு பொதுத்துறை வங்கிகளின் ஏடிஎம் மையங்களில் மொத்தம் 80 லட்சம் ரூபாய்வரை கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. அந்த ஏடிஎம் குளோனிங் கருவியில் ஒரு ஸ்பை கேமரா, மெமரி கார்டு மற்றும் வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்குத் தகவல்களைச் சேகரிக்கும் டேட்டா டிவைஸ் ஒன்றும் இணைந்திருக்கும்.

`அந்தப் பை முழுவதும் 2000, 500 ரூபாய் கட்டுகள்!' - ஏடிஎம் கொள்ளையனை நள்ளிரவில் பிடித்த ஆட்டோ டிரைவர்

துருக்கியைச் சேர்ந்த சைபர் கிரைம் கும்பல் ஒன்று, கடந்த ஆகஸ்ட் மாதத்தில், கௌஹாத்தியிலுள்ள ஏடிஎம் மையங்களில், ஏடிஎம் குளோனிங் கருவிகளைப் பயன்படுத்தி லட்சக்கணக்கான ரூபாயைக் கொள்ளையடித்திருக்கிறது. அதே கும்பல்தான் இந்தக் கொள்ளைச் சம்பவத்திலும் ஈடுபட்டிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

ஏடிஎம் கொள்ளை
ஏடிஎம் கொள்ளை

தற்போது இந்தக் கொள்ளைக் கும்பல் கொல்கத்தாவுக்குச் சென்றிருப்பதாகவும், விரைவில் அவர்களைப் பிடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது. ஒருபுறம், பொதுமக்களை ஏடிஎம்/ஆன்லைன் பயன்பாட்டுக்கு மாற்றப்பட்டு வரும் சூழலில், இத்தகைய சைபர் கொள்ளைகள், அவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.