Published:Updated:

“அவங்களுக்கு வெச்ச சவரக்கத்தியை எங்களுக்கு வெப்பியா?”

செல்லம்மாள்
பிரீமியம் ஸ்டோரி
News
செல்லம்மாள்

கொலை செய்யப்பட்டாரா சவரத் தொழிலாளி?

படங்கள்: ரிச்சர்ட் விஜயகுமார்

‘‘என் மவனோட சாவுக்கு நீதி கிடைக்கிற வரைக்கும் உடம்பை வாங்க மாட்டோம்’’ - ஒரு நாள்... இரண்டு நாள்கள் இல்லை... 70 நாள்களுக்கும் மேலாக மகனின் சடலத்தை சேலம் அரசு மருத்துவமனையின் பிணவறையிலிருந்து வாங்காமல் வைராக்கியத்துடன் போராடிவருகிறார்கள் ஆத்தூரைச் சேர்ந்த பெற்றோர். சாதிய வன்மத்தால் தங்களின் மகன் கொலை செய்யப்பட்டதாக அவர்கள் கூறும் சம்பவத்தைக் கேட்கும்போது கண்கள் கசிகின்றன.

சேலம் மாவட்டம், ஆத்தூர் வீரகனூர் அருகே கிழக்கு ராஜாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் முத்துசாமி - செல்லம்மாள் தம்பதியர். இவர்களின் 23 வயது மகன் முத்துவேல், கோவையில் தங்கி கட்டட வேலை பார்த்துவந்திருக்கிறார். செப்டம்பர் 10-ம் தேதி காலை சொந்த ஊருக்கு வந்த முத்துவேல், 12-ம் தேதி ஊரிலுள்ள ஏரியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார். என்னதான் நடந்தது? முத்துவேலின் தங்கை சத்யாவிடம் பேசினோம்.

“அவங்களுக்கு வெச்ச சவரக்கத்தியை எங்களுக்கு வெப்பியா?”

‘‘எங்க அப்பா ஊர்ல எல்லாருக்கும் முடிவெட்டுவாரு. வருஷத்துக்கு ஒரு தடவை வீட்டுக்கு ஏத்த மாதிரி கூலி தருவாங்க. ‘உனக்குச் சரியா கண்ணு தெரியலை. உன் பையனை வந்து உன் வேலையை செய்யச் சொல்லு’னு ஊர்க்காரங்க சொல்லியிருக்காங்க. அதுக்கு அண்ணன், ‘அப்பா ஒரு கட்டிங், ஷேவிங் பண்ணினா 150 ரூபா கிடைக்கும். எந்தக் காலத்துலப்பா நீ இருக்கே’னு கேட்டுட்டு வெளியூர் வேலைக்குக் கிளம்பி போயிடுச்சு. எங்க அண்ணன் லீவுல ஊருக்கு வந்தா கைச்செலவுக்காக, கூப்பிடுற ஆளுங்களுக்கு முடிவெட்ட போகும். அப்படி ரெண்டு மாசத்துக்கு முன்னாடி முடிவெட்ட போனப்ப, ‘அவங்களுக்கு (பட்டியல் சமூகம்) வெச்ச சவரக்கத்தியை எங்களுக்கு வெப்பியா!’னு சி.பி.பெரியசாமிங்கிறவரு எங்க அண்ணனை அடிச்சுட்டாரு. ஒரு வருஷத்துக்கு முன்னாடியும் இதே மாதிரிதான் ஒரு பிரச்னை ஆச்சு. சாதிப் பிரச்னையாலதான் எங்க அண்ணனை ஏதோ செஞ்சுட்டாங்க. சம்பவத்தன்னைக்கு ஏரிக்கரையில எங்க அண்ணனைச் சிலர் அடிச்சதையும், கதறல் சத்தத்தையும் சிலர் கேட்டிருக்காங்க. எங்க அண்ணன் சாவுக்கு நீதி கிடைக்காம ஓய மாட்டோம்’’ என்று கலங்கினார்.

முத்துவேலின் தாய் செல்லம்மாளிடம் மகனைப் பற்றிக் கேட்டதும் கதறி அழுதபடியே பேசினார்... ‘‘செப்டம்பர் 10-ம் தேதி வெள்ளிக்கிழமை காலையில 10 மணிக்கு என் மவன் மணிகண்டன்கிற பையனோட கார்ல வீட்டுக்கு வந்தான். வந்த உடனேயே 1,500 ரூவா பணத்தைக் கொடுத்துட்டு அந்தப் பையனோட கிளம்புனவன், ராத்திரி ஏழு மணி வாக்குல வீட்டுக்கு வந்துட்டான். திரும்பவும் ராத்திரி 10 மணி வாக்குல மணிகண்டனும், பெரியசாமிங்கிற பையனும் (இது வேறு பெரியசாமி) வீட்டுக்கு வந்து என் மவனைக் கூட்டிட்டுப் போனாங்க. ராத்திரி முழுக்க பையன் வீட்டுக்கு வரலை. சனிக்கிழமை காலையில விடிஞ்சதும் மணிகண்டன், பெரியசாமி ரெண்டு பேர் வீட்டுக்கும் போய், ‘என் மவன் எங்க?’னு கேட்டேன். அவங்க எதுவும் பேசலை. அப்பவே எனக்குச் சந்தேகம் வந்துச்சு. அன்னிக்கு முழுக்க தேடியும் என் மவன் கிடைக்கலை. ஞாயித்துக்கிழமை காலையில, ஏரியில என் மகனை பொணமாத்தான் பார்க்க முடிஞ்சுது...” என்றவர் என்று தேம்பி அழ ஆரம்பித்தார்.

“அவங்களுக்கு வெச்ச சவரக்கத்தியை எங்களுக்கு வெப்பியா?”

தொடர்ந்து பேசியவர், ‘‘என் பையனோட டீ சர்ட்ல ரத்தக்கறை இருந்துச்சு. கரையில ஒரு செருப்பும், ஏரிக்குள்ள ஒரு செருப்பும் கிடந்துச்சு. ஏரிக்கரை படிக்கட்டுல ரத்தக்கறை இருந்துச்சு... இதையெல்லாம் பார்த்துத்தான், என் மவனை கொலை செஞ்சுருக்காங்கன்னு போலீஸ்ல புகார் கொடுத்தோம். ஆனா, போலீஸ்காரங்க என் மவன் தற்கொலை செஞ்சுக்கிட்டான்னு சொல்றாங்க. என் மவன் கிணத்துலயே நீச்சல் அடிப்பான். முழங்கால் அளவு தண்ணியில விழுந்து எப்படி தற்கொலை செஞ்சுக்க முடியும்?

‘அடக்கம் பண்ண அம்பதாயிரம் தர்றோம். பாடியை வாங்கிக்கங்க’னு வீரகனூர் இன்ஸ்பெக்டர் லெட்சுமணன் சொன்னாரு. இன்ஸ்பெக்டர் முன்னாடியே ஊர்ல இருக்க ஆதிக்க சாதிக்காரங்க ‘பத்து லட்சம் தர்றோம். அமைதியா போயிடு’னு மிரட்டுறாங்க. எங்களுக்குப் பணமெல்லாம் வேணாம். வாழவேண்டிய இளந்தாரிப் பையனை இழந்துட்டுத் தவிக்குறோம். எங்களுக்கு நீதிதான் வேணும். என் பையன் சாவுக்குக் காரணமாக இருந்த மணிகண்டன், பெரியசாமி, மாணிக்கராஜா, சி.பி.பெரியசாமினு நாலு பேர் மேல புகார் கொடுத்துருக்கோம். அவங்களை அரெஸ்ட் பண்ணுங்க. அப்புறம் நான் என் மகன் உடம்பை வாங்கி அடக்கம் பண்ணுறேன்...” என்றார் உறுதியுடன்!

உயிரிழந்த முத்துவேலின் பெற்றோர் இருவருமே கூலித் தொழிலாளிகள். முத்துவேலின் அக்கா, கணவரை இழந்து இரு பெண் குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிலேயே இருக்கிறார். முத்துவேலின் சகோதரர் ஒருவர் சற்றே மனநிலை பாதிக்கப்பட்டவர். இவர்கள் அனைவரும் பொருளாதாரரீதியாக முத்துவேலையே நம்பி இருந்திருக்கிறார்கள். இப்படியான சூழலில் முத்துவேலின் மரணம் மொத்தக் குடும்பத்தையே குலைத்துப்போட்டிருக்கிறது.

சத்யா
சத்யா

வீரகனூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவகுருநாதனிடம் பேசினோம். ‘‘கொலைனு சொல்ற அளவுக்கு முத்துவேல் உடம்புல காயமோ, அறிகுறியோ இல்லைனு போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் சொல்லுது’’ என்றார். ஆத்தூர் டி.எஸ்.பி ராமச்சந்திரனோ, ‘‘ஒரு குற்றச்சாட்டு சொன்னா அதுக்கு எவிடென்ஸ் வேணும். இன்னைய தேதி வரைக்கும் அவங்க தரப்புல சொல்ற குற்றச்சாட்டுக்கு ஒரு சின்ன ஆதாரத்தைக்கூட தரலை. விசாரணை நடந்துக்கிட்டு இருக்கு’’ என்றார்.

ஆதாரங்களைத் திரட்டி கொலையா... தற்கொலையா என்று நிரூபிக்கவேண்டிய கடமை காவல்துறைக்கு இருக்கிறது. தற்கொலையாக இருந்தாலும், அதற்குத் தூண்டியவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக பாதிக்கப்பட்ட குடும்பத்துக்குத் தேவை நீதி!