பெங்களூரு: ஆன்லைன் டிக்கெட் புக்கிங்; செல்போன் ஆப்-பில் ரூ.7 லட்சத்தை இழந்த முதியவர்!

பெங்களூருவைச் சேர்ந்த முதியவர் ஒருவர் மொபைல் ஆப் மூலம் விமான டிக்கெட் புக் செய்தபோது ஏழு லட்ச ரூபாயை இழந்திருக்கிறார்.
உலகம் அதிவேகத்தில் நவீன மயமாகிக்கொண்டே செல்கிறது. தொழில்நுட்பங்கள் முன்னேற்றத்துக்கு உதவும் அதே வேளையில், சிலர் தொழில்நுட்பத்தைத் தவறான செயல்களுக்குப் பயன்படுத்திவருகின்றனர். நம்மில் பலரும் ஆன்லைனில் உணவு, கால் டாக்ஸி, பயண டிக்கெட், சினிமா டிக்கெட் புக் செய்வதிலிருந்து இன்னும் பல செயல்களுக்கு மொபைல் ஆப்களைப் பயன்படுத்திவருகிறோம்.

இப்படி ஒருவர் செல்போன் செயலியைப் பயன்படுத்தி டிக்கெட் புக் செய்யும்போது மோசடி செய்யப்பட்டிருக்கிறார். கடந்த டிசம்பர் 30-ம் தேதி பெங்களூரூவில் வசிக்கும் 68 வயது நபர் ஒருவர் ஆன்லைனில் விமான டிக்கெட் புக் செய்யும்போது, ஏழு லட்சம் ரூபாயை இழந்திருக்கிறார். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
பெங்களூரு வைட்ஃபீல்ட் பகுதியைச் சேர்ந்த 68 வயது நபர், மொபைல் ஆப் மூலம் திருவனந்தபுரம் செல்வதற்கு டிக்கெட் முன்பதிவு செய்திருக்கிறார். சிறிது நேரத்தில் அவரின் எண்ணுக்குக் கட்டணம் பெறப்படவில்லை என்ற குறுஞ்செய்தி வந்திருக்கிறது. வங்கிக் கணக்கைச் சரிபார்த்தபோது அவரின் கணக்கிலிருந்து ஏழு லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டது தெரியவந்திருக்கிறது. இதையடுத்து, டிசம்பர் 31-ம் தேதி சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார்.

வாடிக்கையாளர் சேவை மையத்தில், தீபக் குமார் சர்மா என்று தன்னை அறிமுகம் செய்துகொண்ட நபர் ஒருவர் அவருடன் பேசியிருக்கிறார். தொழில்நுட்பச் சிக்கலால் ஏற்பட்ட பிரச்னையால் எடுக்கப்பட்ட தொகையைத் திருப்பித் தர முடியாது என்று கூறியிருக்கிறார். அவரின் வேறொரு வங்கிக் கணக்கு எண்ணைத் தருமாறு கேட்டிருக்கிறார். அதற்கு இவர் வங்கிக் கணக்கின் கடைசி நான்கு எண்களை மட்டும் தெரிவித்திருக்கிறார். அதையடுத்து பல 'OTP' அவரின் எண்ணுக்கு வந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெரியவர், வைட்ஃபீல்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். புகாரின் அடிப்படையில் பல்வேறு பிரிவுகளின் கீழ் மோசடி வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.