Published:Updated:

திருட்டு நகையுடன் ரயிலேறி தப்பிய திருடன் - விமானத்தில் சென்று கைவிலங்குடன் வரவேற்ற போலீஸார்!

திருட்டு நகையுடன் ரயிலேறி தப்பித்த திருடனை பெங்களூரு போலீஸார் விமானத்தில் சென்று பிடித்த சம்பவம் நடந்திருக்கிறது.

கைது செய்யப்பட்ட குஷால்
கைது செய்யப்பட்ட குஷால்

பெங்களூரில் உள்ள பசவனகுடி பகுதியில் வசித்து வருபவர் மெஹக் வி.பிரகல். அப்பகுதியில் துணிக்கடை நடத்திவரும் மெஹக் வீட்டில் குஷால் சிங் என்பவர் வீட்டு வேலைக்கு சேர்ந்திருக்கிறார். ராஜஸ்தானைச் சேர்ந்த குஷாலை, குடும்ப நண்பர் ஒருவரின் பரிந்துரையின் பேரில் மெஹக் பணியில் சேர்த்திருக்கிறார். தீபாவளியன்றுதான் குஷால் பணியில் சேர்ந்திருக்கிறார். அன்று காலை 7.30 மணியளவில் வீட்டுக்கு வந்த அவரிடம், வீட்டை சுத்தம் செய்யும்படி மெஹக் குடும்பத்தினர் சொல்லியிருக்கிறார்கள். பின்னர் மெஹக், குடும்பத்தினருடன் சிக்பேட் பகுதியில் இருக்கும் தனது கடைக்கு பூஜை செய்வதற்காகச் சென்றிருக்கிறார். குஷாலிடம் வீட்டைப் பார்த்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டு அவர்கள் சென்றிருக்கிறார்கள்.

போலீஸ்
போலீஸ்
Pixabay

மதியம் 12.30 மணியளவில் வீடு திரும்பிய மெஹக் குடும்பத்தினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டில் உள்ள பொருள்கள் கலைந்து கிடந்ததுடன், நகைகளும் மாயமாகியிருந்தது அவர்களுக்குத் தெரியவந்தது. அதேநேரம், குஷாலும் வீட்டில் இல்லாதது சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மெஹக், இதுகுறித்து உடனடியாக போலீஸில் புகார் செய்திருக்கிறார். வேலைக்குச் சேர்ந்து 5 மணி நேரமே ஆன நிலையில், அந்த வீட்டில் இருந்து ரூ.38.32 லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் பொருள்களுடன் குஷால் மாயமாகிவிட்டதாக மெஹக், தனது புகாரில் தெரிவித்திருக்கிறார். திருட்டு குறித்து உடனடியாக விசாரணையைத் தொடங்கிய போலீஸார், குஷாலின் மொபைல் நம்பர் மூலம் அவர் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினர்.

வேலை செய்த வீட்டில் 5 ஆண்டுகளாக ரூ.19,85,000 திருட்டு!- ரகசிய கேமராவால் சிக்கிய சென்னைப் பெண்

மொபைல் நம்பரை டிரேஸ் செய்த போலீஸார், குஷால் பயணம் செய்துகொண்டிருப்பதைக் கண்டுபிடித்தனர். தொடர் விசாரணையில், அவர் பெங்களூரிலிருந்து ஆஜ்மீருக்குச் செல்ல ரயிலில் ஏறியிருப்பது தெரியவந்தது. பெங்களூருலிருந்து ஆஜ்மீர் செல்ல 3 நாள்கள் ரயில் பயணம் ஆகும் என்ற நிலையில், விமானத்தில் சென்று குஷாலைக் கைது செய்ய பெங்களூரு போலீஸார் திட்டமிட்டனர். அதன்படி, ராஜஸ்தானின் ஜெய்ப்பூருக்கு விமானத்தில் சென்ற போலீஸார், அங்கிருந்து ஆஜ்மீர் சென்று குஷாலுக்காகக் காத்திருந்தனர். 3 நாள்கள் பயணம் முடிந்து ஆஜ்மீர் ரயில் நிலையத்தில் இறங்கிய குஷாலை, போலீஸார் கைவிலங்கோடு வரவேற்றனர். போலீஸாரைப் பார்த்தவுடன் தப்பமுயன்ற அவரை, மடக்கிப் பிடித்து, அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பெங்களூரு கொண்டுவந்தனர்.

கைது
கைது
Pixabay

இதுகுறித்து பேசிய பெங்களுரூ போலீஸார், ``பெங்களுருக்கு குஷால் வந்தது இதுவே முதல்முறை. உழைப்பால் முன்னேறி பெரும் பணக்காரராக வேண்டும் என்று திட்டமிட்ட குஷால், அதற்கு தவறான வழியைத் தேர்ந்தெடுத்துவிட்டார். அவர் மீது இதற்கு முன்பாக எந்த வழக்குகளும் இல்லை. அவரிடமிருந்து நகைகளைக் கைப்பற்றியிருக்கிறோம்'' என்றனர். திருட்டு நகைகளை விற்க முயல்வதற்கு முன்பே திருடனை மடக்கிப் பிடித்த பெங்களூரு போலீஸாருக்கு பாராட்டுகள் குவிகின்றன.