Published:Updated:

பாய்ஸ் லாக்கர் ரூம்... டெல்லியை அதிரச் செய்த பாலியல் வக்கிரம்!

பாலியல் வக்கிரம்
பிரீமியம் ஸ்டோரி
News
பாலியல் வக்கிரம்

சிறுவர்கள் குற்றங்களை இரண்டு வகையாகப் பிரிக்க வேண்டும். பசி, வறுமை, குடும்பச் சூழ்நிலை காரணமாக குற்றங்களில் ஈடுபடுகிறவர்களை சிறுவர்களாகப் பார்க்கலாம்.

ஊரடங்கால் நாடே வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கிறது. அலுவலகப் பணிகள் தொடங்கி பயிற்சி வகுப்புகள் வரை எல்லாம் ஆன்லைனில் நடக்கின்றன.

ஏற்கெனவே மொபைலுக்குள் மூழ்கியிருந்த மாணவர்கள், ஊரடங்கு நேரத்தில் இன்னும் அதில் தீவிரமானார்கள். பிள்ளைகள் ஆன்லைன் வகுப்புகளில் மூழ்கியிருப்பதாக பெற்றோர்கள் நினைத்துக்கொண்டிருந்தனர். எல்லாம் ‘பாய்ஸ் லாக்கர் ரூம்’ சர்ச்சை வெடிக்கும் வரைதான். ஆம், தங்கள் பிள்ளைகள் ஆன்லைனில் என்ன செய்துகொண்டிருக்கின்றனர் என்று பெற்றோர்களைப் பதறவைத்துள்ளது ‘பாய்ஸ் லாக்கர் ரூம்’ விவகாரம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அதென்ன, ‘பாய்ஸ் லாக்கர் ரூம்’?

தெற்கு டெல்லியில் வசதியானவர்களின் வீட்டுப்பிள்ளைகள் படிக்கும் நான்கு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் சிலர், இன்ஸ்டாகிராமில் ஆரம்பித்த குரூப்பின் பெயர்தான் ‘பாய்ஸ் லாக்கர் ரூம்’ (Bois Locker Room). இந்தக் குழுவில் உள்ளவர்கள் பெரும்பாலும் ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ மாணவர்கள்தான். கல்லூரி மாணவர்கள் சிலரும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தக் குழுவில் உள்ள மாணவர்கள் தங்களுடன் படிக்கும் மாணவிகளின் புகைப்படங்களைப் பதிவேற்றி, ஆபாசமாக வர்ணிப்பதில் ஆரம்பித்து அவர்களுக்கு எப்படியெல்லாம் பாலியல் தொல்லை கொடுக்கலாம், யாரையெல்லாம் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யலாம் என, அநாகரிகத்தின் உச்சத்துக்குச் சென்றுள்ளனர்.

பாய்ஸ் லாக்கர் ரூம்... டெல்லியை அதிரச் செய்த பாலியல் வக்கிரம்!

இவர்களின் ‘ஆபாச சாட்டிங்’கின் ஸ்கிரீன் ஷாட்கள் எப்படியோ வெளியில் கசிந்து சர்ச்சையானது. சமூக வலைதளங்களில் #BoisLockerRoom என்ற ஹேஷ்டேக்கில் விவாதம் சூடுபிடித்தது. டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் சுவாதி மாலிவால், இதுதொடர்பாக இன்ஸ்டாகிராம் நெட்வொர்க் மற்றும் டெல்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பினார். அத்துடன், அந்த ஸ்கிரீன் ஷாட்களை தன் ட்விட்டரில் பகிர்ந்து, இதில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் அத்தனை பேரையும் கண்டுபிடித்துக் கைதுசெய்யுமாறு ஆவேசப்பட்டிருந்தார். இதை தொடர்ந்து, டெல்லி சைபர் க்ரைம் போலீஸார் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்ததுடன், பாய்ஸ் லாக்கர் ரூமில் சம்பந்தப்பட்ட 15 வயது மாணவன் ஒருவனை காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்து சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான சுமதியிடம் பேசினோம். ‘‘இவர்கள் 18 வயதுக்கு உட்பட்டவர்கள்தான் என்றாலும், தங்களுடன் பயிலும் சக மாணவிகளை எப்படி ஏமாற்றி வரவழைத்து, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யலாம் என ஆலோசித்துள்ளனர். மனதளவில் இவர்கள் வளர்ந்த ஆண்களாக இருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. ஆகையால், இவர்களை சிறுவர்களாகப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. விசாரணை நடத்தி எல்லோருக்கும் உரிய தண்டனை வழங்க வேண்டும்.

பாய்ஸ் லாக்கர் ரூம்... டெல்லியை அதிரச் செய்த பாலியல் வக்கிரம்!
சிறுவர்கள் குற்றங்களை இரண்டு வகையாகப் பிரிக்க வேண்டும். பசி, வறுமை, குடும்பச் சூழ்நிலை காரணமாக குற்றங்களில் ஈடுபடுகிறவர்களை சிறுவர்களாகப் பார்க்கலாம்.

இதுவே குடிப்பதற்காக, சூதாடுவதற்காக, தங்கள் சுகத்துக்காக குற்றச்செயல்களில் ஈடுபட்டால், அவர்களை சிறுவர்கள் என்ற கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டிய அவசியமில்லை. அவர்களை ‘அடல்ட்’ கிரிமினல்களாகவே பார்க்க வேண்டும். இந்தப் பிரச்னை நீதிமன்றத்துக்குப் போனால், ‘அட்டம்ட் டு ரேப்’ சட்டத்தின்கீழ்தான் வரும். இந்தக் காலத்தில் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் வெளிப்படைத்தன்மையே இருப்பதில்லை. பிரைவசி என்ற பெயரில் தனி ரூம், தனி செல்போன் என வாழ்ந்துகொண்டிருப்பதால்தான், இதுபோன்ற குற்றங்கள் சகஜமாக நடந்துகொண்டிருக்கின்றன” என்று வருத்தப்பட்டார்.

சைபர் குற்றங்களுக்கான வழக்கறிஞரும், டிஜிட்டல் செக்யூரிட்டி அசோசியேஷன் ஆஃப் இந்தியாவின் நிர்வாகியுமான வி.ராஜேந்திரன், ‘‘கூடியவிரைவில் தனிமனித தகவல் பாதுகாப்புச் சட்டம் வரவிருக்கிறது. இந்தச் சட்டத்தில் சமூக வலைதளங்களுக்கும் பொறுப்புகள் தரவிருப்பதால், ஒருவரின் சம்மதம் இல்லாமல் புகைப்படங்களை எடுத்து தவறாகப் பயன்படுத்தும் இதுபோன்ற குற்றங்கள் குறையும். இந்த மாணவர்களுக்கு உளவியல் சிகிச்சையளித்து நார்மலான பிறகுதான் சமூகத்தில் புழங்க அனுமதிக்க வேண்டும்’’ என்றார்.

பள்ளி உளவியல் ஆலோசகர் திவ்யபிரபா, ‘‘இப்படி சாட்டிங் செய்த மாணவர்கள் அத்தனை பேருமே பின்னாளில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவார்கள் எனச் சொல்லிவிட முடியாது. இந்த வயதில் நண்பர்களுக்கு முன்னால் தன்னை தைரியசாலியாக, ஹீரோவாகக் காட்டிக் கொள்ளவோ, தன்னை அவமானப்படுத்திய மாணவியைப் பழிவாங்கவோ, சும்மா சாட்டிங்தானே என்ற மனநிலையிலோ அவர்கள் அப்படிச் செய்திருக்கலாம். தாங்கள் செய்வது எவ்வளவு பெரிய தவறு, இதற்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பதை அவர்களுக்குப் புரியவைப்பதன் மூலம் இதுபோன்ற தவறுகளைத் தவிர்க்கலாம். பாய்ஸ் லாக்கர் ரூமின் ஸ்கிரீன் ஷாட்ஸ் வெளியே வந்ததால் நமக்குத் தெரிகிறது. வெளியில் தெரியாமல் எத்தனை எத்தனை மாணவர்கள் இருக்கிறார்களோ... பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவர்களைக் கண்காணிப்பதன் மூலமாகத்தான் இதுபோன்ற குற்றங்களைத் தவிர்க்க முடியும்’’ என்றார்.

இந்தச் சூழலில் ‘கேர்ள்ஸ் லாக்கர் ரூம்’ என்ற பெயரிலான சாட்டிங் ஸ்கிரீன் ஷாட்கள், பெண்களாலேயே பகிரப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பரவ ஆரம்பித்திருக்கின்றன. அதில், பெண்களின் அந்தரங்க பாகங்களை பெண்களே ஆபாசமாகக் கிண்டலடிப்பது, ஆண்களின் புகைப்படங்களைப் பதிவேற்றி, ‘இவனுடன் டேட்டிங் செய்ய ஆசை’ என்று சொல்வது போன்ற ஆபாச அரட்டைகள் நிறைந் திருக்கின்றன. இது பெண்களாலேயே பகிரப்படுகின்றனவா அல்லது வேண்டுமென்றே பெண்களின் பெயரால் பகிரப்படுகின்றனவா என்பது இன்னமும் உறுதியாகவில்லை.

ஆணோ, பெண்ணோ தங்கள் வக்கிரத்தைத் தணிக்க அடுத்தவர்களின் அந்தரங்கத்துக்குள் நுழைவது சட்டப்படி குற்றம்தான்!