Published:Updated:

தந்தூரி சிக்கனால் சிறுவன் பலியானதாக சொல்லப்படும் விவகாரம்... ஆரணி ஹோட்டல் மீது நடவடிக்கை!

சிறுவன் பலி

ஆரணியில், தந்தூரி சிக்கன் சாப்பிட்டதால் 17 வயது சிறுவன் பலியானதாகக் கூறப்படும் விவகாரத்தில் அசைவ ஹோட்டலை மூடி உணவுப் பாதுகாப்புத்துறையினர் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.

தந்தூரி சிக்கனால் சிறுவன் பலியானதாக சொல்லப்படும் விவகாரம்... ஆரணி ஹோட்டல் மீது நடவடிக்கை!

ஆரணியில், தந்தூரி சிக்கன் சாப்பிட்டதால் 17 வயது சிறுவன் பலியானதாகக் கூறப்படும் விவகாரத்தில் அசைவ ஹோட்டலை மூடி உணவுப் பாதுகாப்புத்துறையினர் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.

Published:Updated:
சிறுவன் பலி

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ம் தேதி, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள 7 ஸ்டார் பெயரிலான அசைவ ஹோட்டலில் ‘தந்தூரி சிக்கன்’ சாப்பிட்ட 10 வயது சிறுமி லோஷினி உடல் உபாதைகள் ஏற்பட்டு மரணமடைந்தார். அந்தச் சிறுமியின் இறப்பு தொடர்பாக, ஹோட்டல் உரிமையாளர் ஆயத் பாஷா, சமையல் மாஸ்டர் முனியாண்டி ஆகிய இருவரையும் ஆரணி டவுன் போலீஸார் கைது செய்தனர். உணவுப் பாதுகாப்புத்துறை தரப்பிலும் அந்த ஹோட்டல் மீது மூன்று வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. நீதிமன்றத்தில் அந்த வழக்குகளின் விசாரணை நடைபெற்றுவருகிறது.

இந்தச் சம்பவத்தின் தாக்கமே தணியாத சூழலில், அதே ஆரணியிலுள்ள ‘5 ஸ்டார் எலைட்’ ஹோட்டலில் தந்தூரி சிக்கன் சாப்பிட்டதில் 17 வயது சிறுவன் மரணமடைந்திருப்பதாக போலீஸில் புகாரளிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவம் குறித்து விசாரித்தோம்.

திருமுருகன்
திருமுருகன்

ஆரணியிலுள்ள ஆரணிப்பாளையம் மோகனன் தெருவைச் சேர்ந்தவர் கணேஷ். இவரின் மகன் திருமுருகன், ப்ளஸ் டு பொதுத்தேர்வு எழுதிவிட்டு ரிசல்ட்டுக்காக காத்திருந்தான். இந்த வேளையில், நண்பர்களுடன் சேர்ந்து ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள 5 ஸ்டார் எலைட் ஹோட்டலில் பிரியாணி சாப்பிட்டுள்ளான். அப்போது, திருமுருகன் தந்தூரி சிக்கனையும் சேர்ந்து உண்டுள்ளான். பின்னர் வீடு திரும்பிய திருமுருகனுக்கு வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது. உள்ளூர் மருத்துவரிடம் அழைத்துச்சென்று பரிசோதனை செய்தபோது, ‘ஃபுட் பாய்ஸன்’ ஏற்பட்டிருப்பதாகக் கூறினார். வயிற்று வலி அதிகமானதால், ஸ்கேன் எடுத்துப் பார்த்துள்ளனர். உடல் நிலை மிகவும் மோசமானதையடுத்து, வேலூர் அடுக்கம்பாறையிலுள்ள அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துசென்றனர். ஆனால், வரும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்துவிட்டான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அரசு மருத்துவமனையில் சிறுவனின் இறந்துவிட்டதை உறுதி செய்தப் பின்னரும் பெற்றோர் தனியார் மருத்துவமனைக்கு உடலை எடுத்துசென்றனர். தனியார் மருத்துவமனை மருத்துவர்களும் சிறுவன் இறந்துவிட்டதாகக் கூறியதையடுத்து, வீட்டுக்கு எடுத்துசென்று இறுதிச்சடங்கு நடத்தி உடலை எரியூட்டியிருக்கிறார்கள். ஆனால், இதுகுறித்து முன்கூட்டியே பெற்றோர் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கவில்லை. அப்படி தெரிவித்திருந்தால், சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கும். இறப்பிற்கான காரணமும் அறியப்பட்டிருக்கும். ஆனால், உடலை எரியூட்டிவிட்டு புகார் கொடுத்திருந்திருந்த சூழலில்தான் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. ஊடகங்களில் செய்திகள் வெளியானதையடுத்து, காவல்துறையினரும், உணவுப் பாதுகாப்புத் துறையினரும் விசாரணையில் இறங்கினர்.

உணவுப் பாதுகாப்புத்துறையின் உத்தரவு நகல்
உணவுப் பாதுகாப்புத்துறையின் உத்தரவு நகல்

இதில், புகாருக்குள்ளான 5 ஸ்டார் எலைட் ஹோட்டலில் இருந்த பணியாளர்கள் கையுறை, தொப்பி அணிதல் போன்ற விதிமுறைகளைக் கடைப்பிடிக்கவில்லை என்பதை கண்டறிந்தனர். மேலும், சுகாதாரமற்ற முறையில் இறைச்சிகளை வைத்திருந்ததையும் உறுதிப்படுத்தினர். இதையடுத்து, அந்த ஹோட்டலுக்கு நோட்டீஸ் வழங்கியிருக்கிறார்கள். மேலும், அங்கு சமைக்க வைத்திருந்த சிக்கனையும் பறிமுதல் செய்து ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கிறார்கள். உணவுப் பாதுகாப்புத்துறையினர் ஆய்வு நடத்தியப் பின்னர் நகராட்சி சுகாதார அலுவலர்கள் அந்த ஹோட்டலுக்குச் சென்று சோதனை நடத்தினர். ஹோட்டலை அசுத்தமாக வைத்திருந்தது, பாலிதீன் கேரி பேக்குகளை பயன்படுத்தியது தொடர்பாக ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். இந்த நிலையில், உணவுப் பாதுகாப்புத் தரங்கள் சட்டம் 2006-ன் கீழ் அந்த ஹோட்டலில் உணவு விற்பனை செய்ய தடை விதிக்கவும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டிருக்கிறார்கள்.

இது தொடர்பாக, உணவுப் பாதுகாப்புத்துறையின் திருவண்ணாமலை மாவட்ட நியமன அலுவலர் ராமகிருஷ்ணனிடம் கேட்டபோது, ‘‘பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தாமல் உடலை எரியூட்டியதால் விசாரணையில் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. எங்களுக்குத் தகவல் கிடைத்தவுடன் உடனடியாக விசாரணையைத் தொடங்கிவிட்டோம். இவர் ஒருத்தர் மட்டும்தான் பாதிக்கப்பட்டிருக்கிறார். புகாருக்குள்ளான ஹோட்டலை மூடியிருக்கிறோம். மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தியிருக்கிறோம். ஆய்வறிக்கை வந்தப் பின்னரே மற்ற விபரங்களை தெரிவிக்க முடியும்’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism