Published:Updated:

`தேர்வில் தேர்ச்சி; பணிநியமன ஆணை வழங்க ரூ.27 லட்சம்..?!’ -டிஎன்பிஎஸ்சி ஊழியர் உட்பட மூவருக்கு வலை

வேலை தருவதாக கூறி 27 லட்சம் மோசடி..!
வேலை தருவதாக கூறி 27 லட்சம் மோசடி..! ( விகடன் )

''மதுரூபனுக்கு பணிநியமன ஆணை வழங்க ரூ.27 லட்சம் தரவேண்டும். அதைத் தராவிட்டால், மதுரூபனின் பெயரை தேர்ச்சிப் பட்டியலில் இருந்து நிறுத்திவைக்கப்படும்'' என்று கூறியுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 2 தேர்வில் வெற்றிபெற்றிருப்பதாகக் கூறியும், அந்தப் பணியை வழங்க ரூ.27 லட்சம் பெற்று மோசடியில் ஈடுபட்ட மூவர் மீது குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

டி.என்.பி.எஸ்.சி அலுவலகம்
டி.என்.பி.எஸ்.சி அலுவலகம்
விகடன்

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம், கடந்த சில ஆண்டுகளாக நடத்திய குரூப் 4 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகளில் முறைகேடு செய்து வெற்றிபெற்றவர்கள் குறித்த தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, முறைகேடாகத் தேர்வு எழுதியவர்கள், அதன்மூலம் பணியில் சேர்ந்தவர்கள், முறைகேட்டிற்குத் துணை போன அரசு அலுவலர்கள், ஏஜென்ட்டுகள் எனப் பலரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்ட நிலையில், இந்த மோசடிகுறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்நிலையில், 2016-ல் நடந்த குரூப் 2 தேர்வு எழுதிய மதுரையைச் சேர்ந்த மதுரூபன் வெற்றிபெற்றதாக டிஎன்பிஎஸ்சி அதிகாரபூர்வ இணையதளத்தின் மூலம் மின் அஞ்சல் அனுப்பப்பட்டிருந்தது. மதுரை சம்மட்டிபுரம், பாண்டியன் நகர் 2-வது தெருவில் வசித்து வரும் மதுரூபனின் தந்தை சண்முகசுந்தரத்தை டிஎன்பிஎஸ்சி -யில் பணியாற்றிவரும் சிவா மற்றும் நாகேந்திரராவ், ரமணி ஆகிய மூவரும் தொடர்புகொண்டு, ''மதுரூபனுக்கு பணிநியமன ஆணை வழங்க ரூ.27 லட்சம் தரவேண்டும். அதைத் தராவிட்டால், மதுரூபனின் பெயர் தேர்ச்சிப் பட்டியலில் இருந்து நிறுத்தி வைக்கப்படும்'' என்று கூறியுள்ளனர்.

வேலை தருவதாக கூறி 27 லட்சம் மோசடி..!
வேலை தருவதாக கூறி 27 லட்சம் மோசடி..!
விகடன்

இதையடுத்து, 2018 டிசம்பரில் ராமேஸ்வரம் வந்த சண்முகசுந்தரம், அவர்களிடம் ரூ.27 லட்சத்தைக் கொடுத்துள்ளார். பணம் கொடுத்து 2 ஆண்டுகள் ஆன நிலையிலும் மதுரூபனுக்கு பணிநியமன ஆணை வழங்கப்படவில்லை. இதற்காகக் கொடுக்கப்பட்ட பணத்தையும் திருப்பித்தரவில்லை. இதையடுத்து சண்முகசுந்தரம், இந்த மோசடி குறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரிடம் புகாரளித்தார்.

குற்றப்பிரிவு அலுவலகம்
குற்றப்பிரிவு அலுவலகம்
உ.பாண்டி

இதுகுறித்து ராமநாதபுரம் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து, மோசடியில் ஈடுபட்ட சிவா, நாகேந்திரராவ், ரமணி ஆகிய மூன்று பேரையும் தேடிவருகின்றனர். அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வு முறைகேடுகள் குறித்த பரபரப்புகள் அடங்கியுள்ள நிலையில், மீண்டும் ஒரு மோசடி வெளியாகியிருப்பது அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு