Published:Updated:

கொரோனா: உடல்களை வழங்க ரூ.500 லஞ்சம்! - வேலூர் அரசு மருத்துவமனை சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட்

வேலூர் அரசு மருத்துவமனை
வேலூர் அரசு மருத்துவமனை

வேலூரில் கொரோனா தொற்றால் இறப்பவர்களின் உடல்களை உறவினர்களிடம் வழங்குவதற்கு லஞ்சம் வாங்கிய சுகாதார ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.

இறந்துபோகிறவரின் உடலை கடைசியாக ஒருமுறை தொட்டுக்கூட பார்க்க விடாத கொடிய துயரத்தை ரத்த உறவுகளுக்குக் கொடுத்திருக்கிறது, கொரோனா தொற்று. இப்படியான பரிதாபகரமான சூழலிலும், பிணத்தைவைத்து பணம் பறிக்கும் நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். வேலூர் அடுக்கம்பாறையிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கொரோனா தொற்றால் இறப்பவர்களின் உடல்களைக் கணக்கெடுத்து முறைப்படுத்தி வழங்குவதற்காக வெங்கடேசன் என்கிற சுகாதார ஆய்வாளர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

கொரோனா தொற்றால் இறந்தவர் உடல்
கொரோனா தொற்றால் இறந்தவர் உடல்
மாதிரிப் படம்

இவர், மருத்துவமனையிலுள்ள பிணவறையிலிருந்து கொரோனா தொற்றாளர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கவும், ஆம்புலன்ஸில் ஏற்றி சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கவும் பேரம் பேசும் வீடியோ காட்சிகள் சமீபத்தில் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன. அரசு மருத்துவமனைக்கு வருபவர்கள் பெரும்பாலும் ஏழை, எளிய மக்களாகத்தான் இருக்கிறார்கள். மனிதாபிமானமற்ற முறையில், அவர்களிடம் ஒவ்வொரு உடலுக்கும் 500 ரூபாய் வாங்கியிருக்கிறார் சுகாதார ஆய்வாளர் வெங்கடேசன்.

500 ரூபாய் என்றால், நான்கைந்து உடல்களுக்கு ஒரே ஆம்புலன்ஸ். அதாவது, வேலூரிலிருந்து அரக்கோணம் வழித்தடத்துக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த ஐந்து பேர் இறந்திருந்தால், அத்தனை உடல்களையும் ஒரே ஆம்புலன்ஸில் ஏற்றி ஒவ்வொன்றாக டெலிவரி செய்ய ஓட்டுநர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார் வெங்கடேசன். அதேசமயம், 5,000 ரூபாய் வரை கமிஷன் கொடுத்தவர்களுக்கு, ஒரு சடலத்துக்கு ஒரு ஆம்புலன்ஸை அனுப்பிவைத்திருக்கிறார்.

லஞ்சம்
லஞ்சம்

இறந்தவர்களின் உறவினர்கள் யாரேனும் கேள்வி கேட்டுவிட்டாலோ, பணம் கொடுக்க மறுத்துவிட்டாலோ அவர்களுக்கு ஆம்புலன்ஸ் கிடைப்பதிலும், உடல்களை ஒப்படைப்பதிலும் தாமதம் ஏற்படுத்தியதாகவும் சுகாதார ஆய்வாளர் வெங்கடேசன் மீது புகார்கள் குவிந்துள்ளன. இது குறித்து, மாவட்ட நிர்வாகத்துக்குப் புகார் செல்லவே, சுகாதார ஆய்வாளர் வெங்கடேசன் கே.வி.குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்தநிலையில், உடல்களை வழங்கியதில் லஞ்சம் பெற்றது உறுதியாகியிருப்பதால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் வெங்கடேசனிடம் தொடர்ந்து விசாரணையும் நடத்திவருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு