Published:Updated:

லஞ்சம்... போதை... வன்முறை! - சீரழியும் தமிழகம்

சீரழியும் தமிழகம்
பிரீமியம் ஸ்டோரி
சீரழியும் தமிழகம்

தமிழகத்தில் கொலை, கொள்ளை என வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் போதைக்காகக் கத்தியைத் தூக்கியிருப்பார்கள் அல்லது போதையில் கத்தியைத் தூக்கியிருப்பார்கள்.

லஞ்சம்... போதை... வன்முறை! - சீரழியும் தமிழகம்

தமிழகத்தில் கொலை, கொள்ளை என வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் போதைக்காகக் கத்தியைத் தூக்கியிருப்பார்கள் அல்லது போதையில் கத்தியைத் தூக்கியிருப்பார்கள்.

Published:Updated:
சீரழியும் தமிழகம்
பிரீமியம் ஸ்டோரி
சீரழியும் தமிழகம்
சமீபத்தில் காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் மோசஸ் என்பவரைத் துள்ளத்துடிக்க வெட்டிக் கொலை செய்திருக்கிறது கொலைவெறிக் கும்பல் ஒன்று. கஞ்சா மாஃபியாவின் அட்டூழியங்களை அம்பலப் படுத்தியதால் நடத்தப்பட்ட கொலை இது. கொலையாளிகள் அத்தனை பேரும் 17 முதல் 23 வயதுக்கு உட்பட்டவர்கள்... கடும் கஞ்சா போதையை ஏற்றிக்கொண்டே இந்தக் கொடூரத்தைச் செய்திருக்கிறார்கள் அவர்கள். டாஸ்மாக் மதுபான போதை போதாதென்று கஞ்சா, அபின், ஹெராயின், கலர் கலரான மாத்திரைகள் என விபரீதப் பாதையில் பயணிக்கிறது தமிழகத்தின் போதைக் கலாசாரம். இதையெல்லாம் கட்டுப்படுத்த வேண்டிய முதல்வர் பழனிசாமி அரசோ, பதிவுத்துறை தொடங்கி வேளாண்மைத்துறை வரை லஞ்சங்களில் திளைக்கிறது. இன்னொரு பக்கம், ஆட்சியாளர்களைப்போலவே காவல்துறையும் இரட்டைக் குதிரையில் சவாரி செய்வதால், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வன்முறை தலைவிரித்தாடுகிறது!
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தமிழகத்தில் கொலை, கொள்ளை என வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் போதைக்காகக் கத்தியைத் தூக்கியிருப்பார்கள் அல்லது போதையில் கத்தியைத் தூக்கியிருப்பார்கள். சமீபத்திய நாள்களில் இது அதிகரித்துவிட்டது. என்னதான் செய்துகொண்டிருக்கிறது அரசு இயந்திரம்? இது தொடர்பாக நார்கோட்டிக்ஸ் இன்டெலிஜென்ஸ் பீரோவின் முன்னாள், இந்நாள் அதிகாரிகள் எனச் சிலரிடம் பேசினோம்.

“மெரினா பீச், மெட்ரோ ரயில், கிண்டி பூங்கா என்று சென்னையின் அழகான முகத்தை மட்டுமே அறிந்தவர்களுக்கு, சென்னையின் இன்னொரு முகம் தெரியாது. கடந்த சில மாதங்களாக சர்வதேச போதை மருந்து கடத்தல் உலகில் தவிர்க்க முடியாத நகரங்களில் ஒன்றாகிவருகிறது சென்னை. கடத்தல் உலகில் இரண்டு பெயர்கள் பிரபலம். ஒன்று, `தங்கப் பிறை.’ மற்றொன்று, `தங்க முக்கோணம்.’ தென்மேற்கு ஆசியாவின் ஈரான், பாகிஸ்தான், கிர்கிஸ்தான், தஜகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பிறை வடிவ பிராந்தியமே தங்கப் பிறை. இதற்கு மறுகோடியான தென்கிழக்கில் லாவோஸ், ஹனாய், தாய்லாந்து, மியான்மர், ஹாங்காங், தாய்வான், பிலிப்பைன்ஸ், வியட்நாம், கம்போடியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பிராந்தியமே தங்க முக்கோணம். பிறையையும் முக்கோணத்தையும் இணைக்கும் முக்கிய நகரங்களில் ஒன்றாகியிருக்கிறது சென்னை. இரு பிராந்தியங்களிலிருந்தும் தரை, கடல், வான் என மூன்றுF மார்க்கங்களிலும் சென்னைக்கு வருகின்றன போதைப் பொருள்கள்.

இவை தவிர, பார்மாசூட்டிக்கல் போதை மருந்து தனி. மும்பையில் மட்டுமே சுமார் நான்காயிரம் பார்மாசூட்டிக்கல் போதை மருந்து தொழிற்சாலைகள் இயங்குகின்றன. அங்கிருந்து சிந்தெடிக் போதை மருந்துகள் சென்னைக்கு வருகின்றன. அரை மணி நேரம் போதை தொடங்கி ஒரு வாரம் போதை வரை மெயின்டெயின் செய்யும் சமாசாரங்கள் இவை. சென்னையின் பொன்னேரி, கவரப்பேட்டை, கும்மிடிப்பூண்டி, செங்குன்றம், பாடியநல்லூர், சோழவரம், காரனோடை, ஜெகநாதபுரம் சுற்றுவட்டார ஊர்கள்தான் போதைப்பொருள்களின் மொத்த வியாபாரப் பதுக்கல் ஏரியாக்கள்.

லஞ்சம்... போதை... வன்முறை! - சீரழியும் தமிழகம்

போதைக்குப் பச்சை... செக்ஸுக்கு ஆரஞ்சு

இதில் லேட்டஸ்ட் வரவு போதை ‘ஸ்டாம்ப்.’ இதை, பிளாட்டிங் பேப்பரில் ஊற வைத்து ஸ்டாம்ப்பைத் தயாரிக்கிறார்கள். இதை வாய்க்குள் மேலண்ணத்திலோ நாக்குக்கு அடியிலோ ஒட்டிக்கொண்டால் நாள் முழுவதும் மிதப்பதுபோல இருக்கும்.

கடந்த ஜூலை மாதம் நெதர்லாந்திலிருந்து வந்த அவசரகால சர்வதேச விமானத்தில் 490 பச்சை நிற மாத்திரைகளும், 50 ஆரஞ்சு நிற மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டன. இவை போதையின் பரவசநிலை எனப்படும் ‘எக்ஸ்டஸி’ வகையைச் சேர்ந்தவை. சில இடங்களில் ‘ஸ்லீப் டு டெத்’ என்றும் அழைக்கிறார்கள். பச்சை நிறத்திலிருக்கும் மாத்திரையை விழுங்கிய சில நொடிகளில் ராக்கெட்டில் பறப்பது போன்ற அதிவேகமான மனநிலை ஏற்படும். மூளையிலுள்ள சில செல்களைத் தூண்டிவிட்டு, இதயத்துடிப்பை அதிகரிக்கச் செய்கிறது இந்த மாத்திரை. இதன் போதைக்கு வசதியான இளைஞர்கள் பலரும் அடிமையாகி, மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கிறார்கள்.

ஆரஞ்சு நிறத்திலிருக்கும் மாத்திரை குரூப் செக்ஸ் வட்டாரத்தில் பிரபலம். பல பெண்களுடன் ஒரே நேரத்தில் செக்ஸ் வைத்துக்கொள்ள விரும்புபவர்கள், இதை அதிகம் பயன்படுத்து கிறார்கள். செக்ஸில் உச்சநிலையை அடையும்போதே உயிர் பிரிந்துவிடும் சம்பவங்களும் நடக்கின்றன. அரசியல், சினிமா துறை என்று இவையெல்லாம் பெரிய இடங்களில் நடப்பதால் விஷயம் அமுக்கப்பட்டுவிடுகிறது.

சமீபத்தில், சென்னை விமான நிலைய பன்னாட்டு தபால் சரக்குப் பிரிவுக்கு, பெல்ஜியத்திலிருந்து இரண்டு பார்சல்கள் வந்தன. `அலங்காரப் பொருள்கள்’ என்று பெயரிடப்பட்ட ஒன்றில் 1.20 கோடி ரூபாய் மதிப்புள்ள 4,060 ‘எக்ஸ்டஸி’ போதை மாத்திரைகள் இருந்தன. ‘உணவுப்பொருள்’ என்று குறிப்பிடப்பட்ட இன்னொரு பார்சலில் போதை மாத்திரைகளுடன் ‘மெத்’ என்ற போதை பவுடரும் இருந்தது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் எட்டு முறை போதை மாத்திரைகள் சென்னை விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. சமீபத்தில் வேளாங்கண்ணி அருகே, செருதூர் கடற்கரையோரம் மிதந்துவந்த மரப்பெட்டியிலிருந்து 15 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு 15 கோடி ரூபாய். இவை தவிர கஞ்சா. தமிழகத்தில் ஒருநாள் சராசரி கஞ்சா விற்பனை 1,200 கிலோ. இதில் சென்னையில் மட்டுமே சுமார் 400 கிலோ விற்பனையாகிறது” என்று அதிரவைத்தவர்கள், போதை நெட்வொர்க் ஆசாமிகள் குறித்த தகவல்களையும் விவரித்தார்கள்.

“சென்னை சேத்துப்பட்டு ஏரியாவைச் சேர்ந்த போதைப்பொருள் விற்பனை ஆசாமி ஒருவர், தனது பாதுகாப்புக்காக சமீபத்தில் தேசியக் கட்சி ஒன்றில் இணைந்தார். சென்னையில் ஹெராயின் விற்பனையில் சக்கைபோடு போடுகிறார் அவர். பெரியமேடு ஏரியாவைச் சேர்ந்த ஒருவர் ஆன்லைன் மூலமாக கஞ்சா, அபின் சப்ளை செய்கிறார். இவரது வீட்டில் மிகவும் அபாயகரமான ‘ராட்வில்லர்’ ரக நாய்கள் குறைந்தது 20 இருக்கின்றன. போலீஸ் வாகனம் வந்தாலே, நாய்களை அவிழ்த்து விட்டுவிட்டுத் தப்பிவிடுவார். சில மாதங்களுக்கு முன்னர் வெடிகுண்டு வீச்சில் உயிர் பிழைத்த இரண்டு ரெளடிகளின் கண்ணசைவு இல்லாமல் சென்னை நகருக்குள் ‘மாத்திரை’ சப்ளை ஆகாது. வடசென்னையில் ‘பவுடர்’ ரவி என்பவரும், கிருஷ்ணவேணியின் குடும்பத்தினரும் கஞ்சா விற்பனையில் நம்பர் ஒன். படப்பை, தாம்பரம், செங்கல்பட்டு சுற்றுவட்டாரங்களில் இரண்டெழுத்து ரெளடியைத் தாண்டி பெரிய கன்செயின்மென்ட்டாக கஞ்சா நுழைய முடியாது. கோவை, மதுரை, சேலம் ஆகிய நகரங்களிலும் இவர்களின் ஆட்களே கோலோச்சுகிறார்கள். திருச்சியில் கமல், கிருஷ்ணன், மதன் என மூவர் அணி மொத்த போதை வஸ்துகளையும் குத்தகைக்கு எடுத்திருக்கிறது. இவர்கள்மீதெல்லாம் அவ்வளவு சுலபத்தில் கைவைக்க முடியாது. அரசியல் கட்சிகளின் ஆதரவும் இவர்களுக்கு அமோகம். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று இரு தரப்பிலிருந்தும் போனைப் போட்டு டார்ச்சர் செய்துவிடுவார்கள்” என்றார்கள்!

அடியாழம்வரை வேர்விட்ட லஞ்சம்!

போதை ஒருபக்கம் என்றால், தமிழக அரசின் பல்வேறு துறைகளிலும் அடியாழம்வரை வேர்விட்டு மொத்த தமிழகத்தையும் உலுக்கியெடுக் கிறது லஞ்சம். கடந்த அக்டோபர் 28-ம் தேதி தொடங்கி நவம்பர் 2-ம் தேதி வரை அரசு அலுவலகங்களில் ‘லஞ்ச ஒழிப்பு வாரம்’ கடைப்பிடிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு நடத்தினார்கள். இதில் சிக்கியவை எல்லாம் சிறு மீன்கள்தான். பெரும் திமிங்கிலங்கள் தப்பிவிட்டன.

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை வெளியிட்டிருக்கும் தகவலின்படி, அக்டோபர் 1-ம் தேதி முதல் நவம்பர் 6-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 54 அரசு அலுவலகங்களில் 4.29 கோடி ரூபாயும், 519 சவரன் தங்கமும், 6.5 கிலோ வெள்ளியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சம்பிரதாயத்துக்கு நடத்தப்பட்ட சாம்பிள் சோதனையிலேயே இவ்வளவு என்றால் உண்மையாகவே லஞ்ச ஒழிப்புத்துறை சீறிப் பாய்ந்தால் எவ்வளவு சிக்கும்?

வேலூர் மாசுக்கட்டுப்பாடு வாரிய மண்டல அலுவலர் பன்னீர்செல்வத்தின் வீடு மற்றும் அலுவலகத்தில் அக்டோபர் 13-ம் தேதி சோதனையிட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார், 3.25 கோடி ரூபாயையும் 450 சவரன் தங்கம், ஆறரை கிலோ வெள்ளியையும் பறிமுதல் செய்தார்கள். சேலம் பத்திரப்பதிவுத்துறையில் டி.ஐ.ஜி-யாக பணியாற்றிய ஆனந்த்திடமிருந்து, 34 சவரன் தங்கத்தையும், கணக்கில் வராத லட்சக்கணக்கான பணத்தையும், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்களையும் அள்ளியிருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை. மேற்கண்ட இருவருமே மாவட்ட மற்றும் மண்டல அளவிலான அதிகாரிகள் மட்டுமே. அப்படியென்றால், இவர்களுக்கும் மேலிடத்தில் இருப்பவர்களிடம் எவ்வளவு லஞ்சப் பணம், சொத்துகள் குவிந்திருக்கும்?!

பத்திரப்பதிவு, நகராட்சித்துறைகளைக் கூர்ந்து கவனிக்கும் சமூக ஆர்வலர்கள் சிலர், “பெயர் வேண்டாம்” என்கிற கோரிக்கையுடன் நம்மிடம் பேசினார்கள். “பத்திரப்பதிவுத்துறையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட சில இடங்களுக்கு கடும் டிமாண்ட் நிலவுகிறது. உதாரணமாக, சென்னையின் சைதாப்பேட்டை மாவட்டப் பதிவாளர் பணியிடம். இந்த இடத்துக்குக் கோடிகளில் பேரம் நடப்பதால் பேரம் படியாமல் கடந்த ஓராண்டாகப் பொறுப்பு அதிகாரியைக் கொண்டே ஓட்டுகிறார்கள். பல்லாவரம் நகராட்சி அலுவலகத்தில் நகரமைப்பு பிரிவில் விஜிலென்ஸ் போலீஸார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத இரண்டு லட்சம் ரூபாய் சிக்கியது. தங்கக்காசுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால், இந்த அலுவலகத்தில் உயரதிகாரி ஒருவர் தப்பிவிட்டார். மாவட்டப் பதிவாளராக பதவி உயர்வு பெறுபவர்களை நிர்வாகம், தணிக்கை, பதிவு என்று மூன்று இடங்களில் சுழற்சி முறையில் பணியமர்த்த வேண்டும். இந்த விதி பின்பற்றப்படுவதே இல்லை” என்றனர்.

கொரோனா ஊரடங்கால் தமிழகம் மிகப்பெரிய நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. ஆனால், இப்போதும் பல ஆயிரம் கோடி மதிப்பிலான டெண்டர் அறிவிப்புகள் வருகின்றன. எடப்பாடியின் இந்த அறிவிப்பும் பல்வேறு லஞ்ச சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, “கொரோனாவிலிருந்து நாம் மீளாத நிலையில், தமிழக அரசின் நிதி நிலைமை கடன் சுமையில் இருக்கும்போது, 12,000 கோடி ரூபாயில் நெடுஞ்சாலைத் திட்டம் தேவையா? இதன் மூலம் ஏதோ ஒரு வகையில் ஆதாயம் பெறுவதற்கான முயற்சியில் அ.தி.மு.க அரசு ஈடுபட்டிருக்கிறது’ என்று காட்டமாகக் கூறியிருந்தார். இதற்கெல்லாம் அசைந்து கொடுப்பவரா எடப்பாடி? நெடுஞ்சாலைத்துறை மட்டுமல்லாமல், சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை, மின்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய புதிய டெண்டர்கள் முளைக்கின்றன.

லஞ்சம்... போதை... வன்முறை! - சீரழியும் தமிழகம்

மரணப் படுக்கையிலும் லஞ்சம்!

வேளாண்மைத்துறை அமைச்சராக இருந்த துரைக்கண்ணு அக்டோபர் 31-ம் தேதி மறைந்தார். அவர் மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருந்தபோது, அக்டோபர் 28-ம் தேதி வேளாண்மைத்துறையிலிருந்து கோவையிலிருக்கும் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று அலுவலகத்துக்குக் கடிதம் ஒன்று அனுப்பப் பட்டுள்ளது. அதில், ‘உங்கள் துறையில் நான்கு ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் வேளாண்மை அலுவலர்களை, மீண்டும் வேளாண்மைத்துறைக்கு ஒப்படைக்கவும். அவ்வாறு ஒப்படைக்கப்படும் அலுவலர்களால் ஏற்படும் காலிப் பணியிடங்களை வேளாண்மைத்துறையில் பணிபுரியும் அலுவலர்களைக்கொண்டு விரைவில் நிரப்பப்படும்’ என்று கூறப்பட்டிருக்கிறது.

இது குறித்து நம்மிடம் பேசிய அதிகாரிகள் சிலர், “வேளாண்மைத்துறையில் இருப்பதைவிட, விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறையில் பணிபுரிபவர்களுக்கு வேலை அழுத்தம் குறைவு, சம்பளமும் கணிசமானது என்பதால், இந்தத் துறைக்கு பணியிட மாறுதல் பெறுவதற்குக் கடும் போட்டி நடக்கிறது. மாவட்டத்துக்குச் சராசரியாக பத்துப் பேர் வீதம், தமிழகம் முழுவதும் 300-க்கும் அதிகமானோர் இந்தத் துறையில் பணிபுரிகிறார்கள். மேற்கண்ட கடிதத்தின்படி, சுமார் 200 பேர் பணியிட மாறுதல் பெற வேண்டியிருக்கும். ஒரு பணியிட மாறுதலுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை பேரம் நடக்கிறது. சுமார் பத்து கோடி ரூபாய் லஞ்சம். இவ்வளவுக்கும் ‘கொரோனா காலத்தில் பணியிட மாறுதல் செய்யக் கூடாது’ என்று தலைமைச் செயலாளர் வெளியிட்ட அரசாணையி லிருந்து விலக்கு பெற்று இதை அனுப்பியிருக் கிறது வேளாண்மைத்துறை. அமைச்சர் துரைக்கண்ணுவின் உயிர் மருத்துவமனையில் ஊசலாடிக்கொண்டிருந்த நேரத்தில், இதைச் செய்ய வேண்டிய அவசியம் என்ன? மரணப்படுக்கையில் அமைச்சர் இருந்தபோதும் வசூல் வேட்டையை நடத்துகிறார்கள்’’ என்றார்கள்.

இரட்டைத் தலைமை... அதிகரித்த வன்முறை!

போதை, லஞ்சம் ஒருபக்கம் என்றால் தமிழகம் முழுவதிலுமே சமீப நாள்களில் வன்முறைகளும் அதிகரித்துவிட்டன. நவம்பர் 1-ம் தேதி சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரை வெட்டிச் சாய்த்தது மர்மக் கும்பல் ஒன்று. நவம்பர் 11-ம் தேதி சென்னை செளகார்பேட்டையில் ஃபைனான்ஸியர் தலில்சந்த், அவரின் மனைவி புஷ்பாபாய், மகன் சீத்தல் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். சென்னை செளகார்பேட்டையில் இப்படி துப்பாக்கிச் சத்தம் கேட்பது இது மூன்றாவது முறை. தீபாவளி நெருக்கத்தில் வில்லிவாக்கத்தில் பாலாஜி என்கிற ரெளடியும், அயனாவரத்தில் மதன் என்கிற ரெளடியும் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோன்று ஈரோடு அருகே கொடுமுடியைச் சேர்ந்த பெருமாள் - மேனகா தம்பதியினர் தங்கள் மகன் வைரமூர்த்தியுடன் தீபாவளியைக் கொண்டாடுவதற்காக, நவம்பர் 13-ம் தேதி இரவு கொடுமுடி அருகேயுள்ள மேனகாவின் தந்தை வீட்டுக்கு பைக்கில் சென்றுள்ளனர். வழியில் மதுசூதனன் என்பவன் தன் நண்பர்களுடன் மதுபோதையில் இவர்களை கேலி செய்திருக்கிறான். இதை மேனகாவின் தந்தை ராமசாமியும், தாய் அருக்காணியும் தட்டிக் கேட்டுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த அந்தக் கும்பல் நள்ளிரவில் ராமசாமியின் வீட்டுக்குள் புகுந்து, தூங்கிக்கொண்டிருந்த ராமசாமியையும் அவரின் மனைவி அருக்காணியையும் அரிவாளால் வெட்டி கொலை செய்திருக்கிறது. குடிபோதையில் கலாட்டா செய்தவர்களை தட்டிக் கேட்டதற்கு, உயிரையே காவு வாங்கிவிட்டார்கள் போதைக் கொடூரர்கள். ‘சட்டம் ஒழுங்கு என்பது தமிழகத்தில் இருக்கிறதா, இல்லையா?’ என்று மக்கள் கேட்கும் அளவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது இந்தச் சம்பவம்.

நவம்பர் 15-ம் தேதி எம்.ஜி.ஆர் நகரில் செல்வரத்தினம் என்கிற டி.வி சீரியல் நடிகர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அதேநாள் இரவு மணி என்பவர், நண்பர்களால் கொலை செய்யப்பட்டார். நவம்பர் 16-ம் தேதி பழநியில் சினிமா தியேட்டர் அதிபர் நடராஜ் என்பவர் துப்பாக்கியால் சுட்டதில் பழனிச்சாமி மற்றும் சுப்பிரமணி ஆகியோர் காயமடைந்திருக்கிறார்கள்.

“தமிழக ஆட்சியாளர்களைப்போல தமிழகக் காவல்துறையும் இரட்டைத் தலைமையுடன் செயல்படுவதால்தான் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது” என்று புலம்புகிறார்கள் நேர்மையான காவல்துறை அதிகாரிகள். அவர்கள் நம்மிடம், “தமிழக காவல்துறையில் சட்டம் ஒழுங்கைக் கட்டுப்படுத்த டி.ஜி.பி-க்கள் அந்தஸ்தில் திரிபாதி மற்றும் ராஜேஷ்தாஸ் என இரண்டு ஐ.பி.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக் கிறார்கள். இவர்களிடையே நிலவும் ஈகோ மோதலால் சட்டம் ஒழுங்கைக் கோட்டை விட்டுவிட்டார்கள்.

உதாரணமாக, துப்பாக்கி லைசென்ஸ் வழங்கும் விவகாரம். முன்பெல்லாம் வி.ஐ.பி-க்களுக்கு மட்டுமே துப்பாக்கி லைசென்ஸ் வழங்கப்படும். ஆனால் சமீபகாலமாக சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் சரமாரியாக துப்பாக்கி லைசென்ஸ் வழங்குகிறார்கள். ‘எதற்காக லைசென்ஸ் வேண்டும்?’ என்கிற காரணத்தைக்கூடக் கேட்பதில்லை. இந்த விவகாரத்தில் பெருமளவில் பணம் விளையாடுகிறது. துப்பாக்கி உரிமம் பெற்றுத் தருவதற்கென்றே புரோக்கர்கள் இருக்கிறார்கள். இன்னொரு பக்கம், வட மாநிலங்களிலிருந்து கள்ளத்துப்பாக்கியும் தமிழகத்துக்கு வந்துவிட்டது. ஒரு லட்சம் ரூபாய்க்குக் கைத்துப்பாக்கி கள்ள மார்க்கெட்டில் கிடைக்கிறது” என்று பீதியைக் கிளப்பினார்கள்!

இந்த ஆட்சி நிறைவடைய இன்னும் ஆறு மாதங்களே இருக்கின்றன. அதற்குள் எரிகிற வீட்டில் பிடுங்கியதுவரை லாபம் என்று கொரோனா காலத்திலும் கொள்ளையடிக் கிறது பழனிசாமி அண்ட் கோ. அதிகரிக்கும் போதை மற்றும் வன்முறைக் கலாசாரம் எதுவுமே அந்த அரசியல் வியாபாரிகளின் கண்களுக்குத் தட்டுப்படுவதில்லை. அரசன் எவ்வழியோ அவ்வழியே அதிகாரிகளும் கொழிக்கிறார்கள். வயிறெரிந்து சபிக்கிறார்கள் மக்கள்!