Published:Updated:

`தூக்க மருந்து கொடுத்த காதலி; கழுத்தை நெரித்த கூட்டாளிகள்!’ - சேலத்தில் அரங்கேறிய கொடூரம்

கொலை
கொலை

`காய்ச்சலால் இறந்துவிட்டார் எனச் சொன்னால், உறவினர்கள் நம்பிவிடுவார்கள். யாரும் அருகே வர மாட்டார்கள்' என நினைத்திருக்கின்றனர். ஆனால், கழுத்திலிருந்த காயங்கள் ஏதோ நடந்திருக்கிறது என்பதைக் காட்டிவிட்டன!

சேலம் அருகேயுள்ள தளவாய்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (49). தனியார் பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்துவந்தவர், மனைவியைப் பிரிந்து தனியாக வாழ்ந்துவந்திருக்கிறார். இவருக்கும் கணவரைப் பிரிந்து வாழ்ந்துவந்த சேலம் இரும்பாலைப் பகுதியைச் சேர்ந்த சர்வேஸ்வரி என்ற பெண்ணுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. இந்தத் தொடர்பு இருவரும் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. இந்தநிலையில், விழுப்புரத்தில் வசித்துவந்த சர்வேஸ்வரியின் சகோதரியான உமா மகேஸ்வரி, கணவருடனான கருத்து வேறுபாடு காரணமாக சேலத்திலுள்ள தாயார் வீட்டுக்கு வந்திருக்கிறார்.

உமா மகேஸ்வரி
உமா மகேஸ்வரி

இதற்கிடையே சுப்பிரமணிக்கும் உமா மகேஸ்வரிக்கும் இடையே காதல் துளிர்விட்டு, தனியே வீடு எடுத்து வசித்துவந்திருக்கின்றனர். இது சர்வேஸ்வரிக்குப் பிடிக்காமல் போக, சுப்ரமணியைப் பிரிந்து சென்றிருக்கிறார். இந்தநிலையில் ஜூன் 12-ம் தேதி இரவு சுப்பிரமணி வீட்டிலிருந்த கட்டிலில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்திருக்கிறார். அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் தகவல் கொடுத்ததன் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டிருக்கின்றனர்.

‘டெங்கு காய்ச்சல் வந்ததால் அவருக்கு உடம்புல வெள்ளை அணுக்கள் கம்மியா இருக்குன்னு டாக்டர் சொன்னாங்க. அதுக்காக 10 நாளா சாத்துக்குடி ஜூஸ் போட்டுக் கொடுத்து பக்கதுலேயே இருந்து கவனிச்சுக்கிட்டு இருந்தேன். ராத்திரி 8 மணிக்கு அவரோட ஃபிரெண்ட் ஒருத்தர் வந்து அவரைப் பார்க்கணும்னு சொன்னாரு. அவருக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லித் திருப்பி அனுப்பிட்டேன். வீட்டு வேலையெல்லாம் முடிச்சுட்டு திரும்பி வந்து பார்க்கையில, என் வீட்டுக்காரரு பேச்சு மூச்சில்லாம கெடந்தாரு. என்ன நடந்துச்சுன்னே தெரியலை’ என உமா மகேஸ்வரி கண்ணீர் வடித்திருக்கிறார்.

உமா மகேஸ்வரிக்கு உதவிய நாகராஜன் - கண்ணன்
உமா மகேஸ்வரிக்கு உதவிய நாகராஜன் - கண்ணன்

பக்கத்து வீட்டிலிருந்த சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வுசெய்தபோது, கொலையான சுப்பிரமணி வீட்டுக்கு இர்ண்டு ஆண்கள், உமா மகேஸ்வரியுடன் வந்து சென்றது தெரியவந்திருக்கிறது. இதையடுத்து உமா மகேஸ்வரியைப் பிடித்து விசாரணை செய்த போலீஸார் ‘7:45-லிருந்து 10:40 வரைக்கும் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் வீட்டுக்குள்ள இருந்த அந்த இரண்டு பேரும் யார்... என்ன நடந்தது?’ என சிசிடிவி காட்சிகளைக் காட்டி கிடுக்குப்பிடி போட, அதன் பின்னரே உமா மகேஸ்வரி அதிரவைக்கும் அந்தக் கொலைச் சம்பவத்தை விவரித்திருக்கிறார்.

``சுப்பிரமணிக்கும் எனக்கும் தொடர்பு உண்டாகி ரெண்டு பேரும் ஒண்ணா குடும்பம் நடத்திக்கிட்டு வந்தோம். இதுக்கிடையில எனக்கு ஒரு சில நபர்களுடன் பழக்கம் உண்டாச்சு. இது சுப்பிரமணிக்குத் தெரிஞ்சதும் என்னை ரொம்ப தொந்தரவு செய்ய ஆரம்பிச்சாரு. என்னை அசிங்கமாப் பேசி, அடிச்சு துன்புறுத்தனதோட, ‘என்னைவிட்டுட்டு தேவையில்லாத வேலை செஞ்சா ஆசிட் அடிச்சி கொன்னுடுவேன்’னு மிரட்டுனாரு. இதுக்கு மேல இந்த ஆளோட வாழ்ந்தா நமக்கு நிம்மதி இருக்காதுன்னு அவரைக் கொன்னுடலாம்னு முடிவு பண்ணினேன். 11-ம் தேதி ராத்திரி சாத்துக்குடி ஜூஸ்ல தூக்க மாத்திரையைக் கலந்து கொடுத்தேன். கொஞ்ச நேரத்துலயே மயக்கம் போட்டுட்டாரு. நான் ஏற்கெனவே செட் பண்ணிவெச்சிருந்த என்னோட கூட்டாளிகளான நாகராஜன், கண்ணன் ரெண்டு பேரையும் வீட்டுக்குள்ள கூப்பிட்டேன். கழுத்தை நெரிச்சு கொலை செஞ்சோம். அதுக்கப்புறம் எதுவும் தெரியாத மாதிரி அவங்க வீட்டுக்குத் தகவல் கொடுத்தோம்’ என உமா மகேஸ்வரி சொல்லியிருக்கிறார். அதையடுத்து உமா மகேஸ்வரி மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த அவருடைய கூட்டாளிகள் இருவரையும் போலீஸார் கைதுசெய்து, சிறையில் அடைத்திருக்கின்றனர்.

 கொலை
கொலை

இந்தச் சம்பவம் குறித்து விஷயமறிந்த காவலர் ஒருவரிடம் பேசினோம். “கொலைக்கு உடந்தையாக இருந்த நாகராஜன், கண்ணன் இருவருடனும் உமா மகேஸ்வரி தொடர்பில் இருந்திருக்கிறார். மூவரும் திட்டமிட்டுத்தான் சுப்பிரமணியைக் கொலை செய்திருக்கின்றனர். காய்ச்சலால் இறந்துவிட்டார் எனச் சொன்னால், உறவினர்கள் நம்பிவிடுவார்கள், யாரும் அருகே வர மாட்டார்கள் என நினைத்திருக்கின்றனர். ஆனால், கழுத்திலிருந்த காயங்கள் ஏதோ நடந்திருக்கிறது என்பதைக் காட்டிவிட்டன. சுப்பிரமணியனின் பிறப்புறுப்பிலும் கடுமையாகத் தாக்கியிருக்கின்றனர்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு