Published:Updated:

‘காலில் விழுந்து மன்னிப்பு கேட்கட்டும்!’ - நூலகரின் அத்துமீறலால் கொந்தளித்த வேலூர் மாணவிகள்

தர்ணாவில் ஈடுபட்ட மாணவர்கள்
தர்ணாவில் ஈடுபட்ட மாணவர்கள்

``போலீஸார் எதையோ எதிர்பார்த்து புகாரைப் பெற மறுக்கிறார்கள். நூலகர் தாமோதரன் செய்த தவறுக்கு எங்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்று கொந்தளிக்கிறார்கள், வேலூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகள்.

வேலூர் தொரப்பாடியில் உள்ள தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில், தாமோதரன் என்பவர் நூலகராகப் பணியாற்றிவருகிறார். இவர், நூலகத்துக்கு வரும் மாணவிகளிடம் தவறான நோக்கத்துடன் தொட்டுப் பேசுவதாகப் புகார் சொல்கிறார்கள். சமீபத்தில், 17 வயதுடைய மாணவி ஒருவரை நூலகத்தைப் பெருக்கிச் சுத்தம் செய்ய அழைத்துள்ளார் தாமோதரன். அந்த மாணவி வந்தபோது, பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

அரசு பாலிடெக்னிக் கல்லூரி
அரசு பாலிடெக்னிக் கல்லூரி

அதேபோல், 20 வயதுடைய மேலும் இரண்டு மாணவிகளும் தாமோதரனின் அநாகரிகச் செயல் குறித்து கல்லூரி முதல்வரிடம் முறையிட்டுள்ளனர். கல்லூரி நிர்வாகம் கண்டுகொள்ளாத காரணத்தினால், வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குச் சென்று புகார் கொடுத்தனர். போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. அதையடுத்து, வேலூர் எஸ்.பி அலுவலகம் சென்று பாதிக்கப்பட்ட மூன்று மாணவிகளும் புகார் மனு அளித்தனர்.

இந்த மனு அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாணவிகளைக் காவல் நிலையம் அழைத்த போலீஸார் கடுமையாக எச்சரித்துள்ளனர். சிலரின் தூண்டுதலின் பேரில், நூலகர் மீது பொய்ப் புகார் கொடுத்ததாக மிரட்டி எழுதி வாங்கிக்கொண்டு மாணவிகளை அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் மளமளவெனப் பரவியது. பாலியல் புகாரிலிருந்து தப்பித்த அந்த நூலகரின் அநாகரிகச் செயல் தொடர்ந்துள்ளது.

வேலூர் மகளிர் காவல் நிலையம்
வேலூர் மகளிர் காவல் நிலையம்

இதனால், ஆத்திரமடைந்த மாணவிகள் சக மாணவர்களின் ஒத்துழைப்புடன் இன்று கல்லூரி வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘கொரோனா’ வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாகக் கல்லூரிகளுக்குத் தமிழக அரசு வரும் 31-ம் தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளது. ஆனாலும், பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு ஆதரவாக நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களும் மாணவிகளும் கல்லூரியில் குவிந்து நூலகரைக் கைது செய்யக் கோரி வலியுறுத்தினர்.

தகவலறிந்ததும், மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் கல்லூரிக்குச் சென்று மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். அதையடுத்து, அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாணவர்கள் திரண்டு சென்று மீண்டும் புகார் மனு அளித்தனர். பாதிக்கப்பட்ட மாணவிகளை முறைத்த போலீஸார், மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது. மாணவர்கள் திரண்டதால், வேறு வழியின்றிப் புகார் மனுவை ஏற்றுக் கொண்டனர். புகாருக்குள்ளான நூலகர் தாமோதரனையும் காவல் நிலையம் அழைத்துவந்து விசாரணை நடத்திவருகிறார்கள்.

தர்ணாவில் ஈடுபட்ட மாணவர்கள்
தர்ணாவில் ஈடுபட்ட மாணவர்கள்

இதுகுறித்து மாணவிகள் கூறுகையில், ‘‘நூலகர் தாமோதரன் பல மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்டார். அவர் மீது புகார் கொடுத்தும் போலீஸார் நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள். அவரிடம் போலீஸார் எதையோ எதிர்பார்த்து எங்களை விரட்டுகிறார்கள். நூலகர் தாமோதரன் செய்த தவறுக்கு எங்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்றனர் கொதிப்புடன்.

இது சம்பந்தமாகக் காவல் நிலையத்துக்கு வந்த கல்லூரி முதல்வரிடம் பேச முயன்றோம். அவர் பதிலளிக்க விரும்பவில்லை. நூலகர் தாமோதரனின் மனைவி அரசுப் பணியில் உயரதிகாரியாக இருப்பதாகச் சொல்கிறார்கள். அதன் காரணமாகவே, காவல் துறையினர் நூலகருக்குச் சாதகமாகப் பேசி மாணவிகளை மிரட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தால், வேலூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு