Published:Updated:

`கொரோனா வைரஸைவிட சாதிதான் பெரிதா?’ - ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

சாதி

``சமூகத்தில் ஏற்கெனவே விளிம்புநிலையில் இருக்கும் இந்த மக்களின் அன்றாட வாழ்க்கை கொரோனாவால் இன்னும் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையிலும் அவர்கள் மீது சாதிய தாக்குதல்கள் நடைபெறுகின்றன என்பது வருத்தமளிக்கின்றன”

`கொரோனா வைரஸைவிட சாதிதான் பெரிதா?’ - ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

``சமூகத்தில் ஏற்கெனவே விளிம்புநிலையில் இருக்கும் இந்த மக்களின் அன்றாட வாழ்க்கை கொரோனாவால் இன்னும் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையிலும் அவர்கள் மீது சாதிய தாக்குதல்கள் நடைபெறுகின்றன என்பது வருத்தமளிக்கின்றன”

Published:Updated:
சாதி

கொரோனா வைரஸ் காரணமாக உலகமே தனது இயல்புநிலையை இழந்து திண்டாடி வருகிறது. ஒவ்வொரு நாளும் அதிகமாகிக்கொண்டே வரும் இந்தக் கொரோனா வைரஸ் பாதிப்பால் பல நாடுகளில் உள்ள மக்களும் அன்றாட வாழ்க்கையை இழந்துள்ளனர். வைரஸ் பரவலைத் தடுக்க அமலில் உள்ள ஊரடங்கால் ஏற்படும் பொருளாதார நெருக்கடி, உணவுப் பற்றாக்குறை, வேலைவாய்ப்பின்மை தொடர்பான பிரச்னைகள் மக்களை துயரத்தில் ஆழ்த்தி வருகிறது.

மறுபக்கம் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதால் குடும்ப வன்முறைகள் அதிகரித்துள்ளதாகவும் காவல்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு மாதங்களாக தமிழகத்தில் தீண்டாமையும் சாதிய வன்முறைகளும் அதிகரித்திருப்பதாக எவிடென்ஸ் கதிர் வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஊரடங்கு
ஊரடங்கு

ஆய்வின் அடிப்படையில் எவிடென்ஸ் கதிர் வெளியிட்டுள்ள சம்பவங்களில் சில :

1) ஆரணி தாலுகா மொரப்பதாங்கல் கிராமத்தில் சுதாகர் என்ற இளைஞர் மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். சுதாகர் பட்டியலின சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால் அப்பெண்ணின் தந்தை மூர்த்தி மற்றும் அவரின் உறவினர் ஜெயகுமார் இணைந்து சுதாகரை கடந்த மார்ச் 29-ம் தேதி அடித்துக் கொலை செய்துள்ளனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து இருவரும் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

2) திருவண்னாமலையில் உள்ள கீழ் பாச்சர் கிராமத்தில் பட்டியலின மக்களின் பயன்பாட்டில் இருந்த நிலத்தை தங்களுக்குக் கொடுக்க வேண்டும் என மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மிரட்டியுள்ளனர். உயிருக்குப் பயந்து பட்டியலின மக்களும் ஊரடங்கு முடிந்தவுடன் எடுத்துக்கொள்ளுங்கள் என கூறியுள்ளனர். இந்த நிலையில், ஜே.சி.பி இயந்திரத்தைக் கொண்டு ஆக்கிரமிப்பு முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஏற்பட்ட பிரச்னையில் 15-க்கும் மேற்பட்டவர்கள் இணைந்து பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், 7 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை எடுத்து வருகின்றனர். குற்றவாளிகளில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

3) நிலக்கோட்டை அருகில் உள்ள கோட்டைப் பட்டி கிராமத்தில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் தமிழ்செல்வன் என்பவர் மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்துள்ளார். பெண்ணின் உறவினர்களால் ஆபத்து என்பதால் பெரியகுளம் பகுதியில் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு கடந்த ஏப்ரல் 22-ம் தேதி அன்று இரட்டை ஆண் குழந்தைகளும் பிறந்துள்ளன. ஊரடங்கால் குழந்தைகள் மற்றும் மனைவியுடன் கோட்டைப்பட்டிக்கு தமிழ்செல்வன் வந்துள்ளார். இதையறிந்த பெண்ணின் உறவினர்கள் சுமார் 50 பேர் பயங்கரமான ஆயுதங்களை எடுத்து பட்டியலின மக்கள் வாழும் பகுதிக்குள் சென்று தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 15 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுதொடர்பாக எவிடென்ஸ் கதிரிடம் பேசினோம். அப்போது அவர், ``தமிழ்நாடு முழுவதும் சாதாரண காலங்களில் 100 முதல் 120 வழக்குகள் எஸ்.சி.எஸ்.டி பிரிவின்கீழ் பதிவு செய்யப்படும். இதில் பெரும்பான்மையான வழக்குகள் சிறிய அளவிலான தாக்குதல்களாக இருக்கும். பெரிய அளவிலான தாக்குதல்கள் அவ்வளவாக இருக்காது. ஆனால், இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் 25-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் பெரிய அளவில் நிகழ்ந்துள்ளன.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கூட்டமாகச் சேரக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்தச் சம்பவங்களில் 40 பேர் 50 பேர் இணைந்துகொண்டு பட்டியலின மக்கள் மீதான தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளனர். உயிருக்கு உத்தரவாதம் இல்லாத இந்தச் சூழ்நிலையிலும் கொரோனாவைவிட சாதிதான் பெரியது என்று நினைக்கும் மனநிலை என்பது கீழான போக்கையே காட்டுகிறது. சமூகத்தில் ஏற்கெனவே விளிம்புநிலையில் இருக்கும் இந்த மக்களின் அன்றாட வாழ்க்கை கொரோனாவால் இன்னும் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையிலும் அவர்கள் மீது சாதிய தாக்குதல்கள் நடைபெறுகின்றன என்பது வருத்தமளிக்கின்றன” என்றார் வேதனையுடன்.

எவிடென்ஸ் கதிர்
எவிடென்ஸ் கதிர்

தொடர்ந்து பேசிய அவர், ``ஊரடங்கு தொடங்கிய கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பட்டியலின மக்களுக்கு எதிராக 25-க்கும் மேற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன. இந்தச் சம்பவங்கள் அனைத்துமே கொரோனா ஊரடங்கை ஒட்டி நடந்த சம்பவங்கள்தான். ஊரடங்கால் அனைவரும் அடங்கி இருப்பார்கள் என்ற எண்ணத்தில் வந்தவர்களையும் சாதிய மனப்பான்மை உள்ளவர்கள் விட்டு வைக்கவில்லை.

கொரோனா என்பது நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான சுகாதாரத் தீண்டாமை. ஆனால், இவர்கள் செய்வது சமூகத் தீண்டாமை. குடும்பத்தில் ஆண் என்ற திமிர் உள்ளவர்கள் அழுத்தத்தை பெண்களிடம் காட்டுவதுபோல சமூகத்தில் சிலர் பட்டியலின மக்கள் மீது காட்டுகிறார்கள். தெரிந்தே இவ்வளவு சம்பவங்கள் நடந்துள்ளன. தெரியாமல் பல சம்பவங்கள் நடந்திருக்கலாம். ஊரடங்கைக் காரணமாக வைத்து பல குற்றவாளிகள் கைது செய்யப்படாத நிலையில் இருப்பது இன்னும் கொடுமையான விஷயம்” என்றார் ஆதங்கத்துடன்.