Published:Updated:

திண்டுக்கல்: சிறார் வதை வீடியோ பதிவுகள்... சுமார் 9 மணி நேரம் நீடித்த சி.பி.ஐ ரெய்டு, விசாரணை!

சென்னை, கோவை, நாமக்கல், திருவண்ணாமலை, சேலம், திண்டுக்கல் ஆகிய இடங்களைச் சேர்ந்த ஆறு பேரின் வீடுகளில் ரெய்டு நடத்தத் திட்டமிட்டு செவ்வாய்க்கிழமை ஒரே நேரத்தில் சி.பி.ஐ ரெய்டு நடத்தியது.

சிறார் வதை, சித்ரவதை வீடியோக்கள், புகைப்படங்களை வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சிலர் வெளிநாடுகளில் உள்ளவர்களுடன் இணைந்து இந்தியாவில் தொடர்ச்சியாகப் பரப்பிவருவதாகவும், இவர்களுக்கென தனியாக வாட்ஸ்அப் குழு வைத்து செயல்பட்டுவருவதாகவும் சி.பி.ஐ-க்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

சி.பி.ஐ
சி.பி.ஐ

அதனடிப்படையில், நாட்டில் 14 மாநிலங்களைச் சேர்ந்த 83 பேர் மீது வழக்கு பதிவு செய்தது சி.பி.ஐ. மேலும் இதில் தொடர்புடைய சென்னை, கோவை, நாமக்கல், திருவண்ணாமலை, சேலம், திண்டுக்கல் ஆகிய இடங்களைச் சேர்ந்த ஆறு பேரின் வீடுகளில் ரெய்டு நடத்தத் திட்டமிட்டு, செவ்வாய்க்கிழமை ஒரே நேரத்தில் ரெய்டு நடத்தினர்.

அதன்படி, திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் ரெய்டு நடத்தப்பட்டது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் சிறார் வதை வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, அவர் வீட்டில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் இரவு 7:45 மணி வரை சோதனை நடத்தினர். அவருக்குச் சொந்தமான மெமரி கார்டுகள், ஹார்ட் டிஸ்க், லேப்டாப் ஆகியவற்றை சி.பி.ஐ அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.

அதிகாரிகள்
அதிகாரிகள்

இது குறித்து திண்டுக்கல் போலீஸாரிடம் விசாரித்தபோது, ``சி.பி.ஐ தனிப்பிரிவு அதிகாரிகள் ரெய்டுக்கு வந்த பிறகுதான் எங்களுக்குத் தகவல் தெரியும். பொதுவாக சி.பி.ஐ அதிகாரிகள் சிறார் வதை போன்ற வழக்குகளில் விசாரணை நடத்த மாட்டார்கள். ஆனால் இதில் வெளிநாட்டினரின் தொடர்பும் இருப்பதால் சி.பி.ஐ தனிப்பிரிவு தலையிட்டிருக்கிறது. குறிப்பிட்ட அந்த நபர் டெல்லியில் ஐந்து மாதங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அவருடைய செல்போனை தொலைத்ததாகவும், அதில் சிறார் வதை வீடியோக்கள் இருந்திருப்பதாகவும் தெரிகிறது. அதனடிப்படையில்தான் சி.பி.ஐ ரெய்டு வந்திருக்கின்றனர். மேலும் எட்டே முக்கால் மணி நேரம் சோதனை, விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், அவரை இரண்டு நாள்களில் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனக் கூறிச் சென்றிருக்கிறார்கள்'' என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு