Published:Updated:

மதுரை: `கெட்டியாகப் பிடித்துக்கொண்ட பெண்; சிக்கிய பாதி சங்கிலி!’ - ஊரடங்கில் பதற வைத்த வழிப்பறி

சங்கிலியைப் பறிக்கும் திருடன்
சங்கிலியைப் பறிக்கும் திருடன்

முழு ஊரடங்கு நாளில் முகக்கவசம் அணிந்து சைக்கிளில் அமைதியாக வந்த மனிதர், யாருமற்ற சாலை ஓரத்தில் நடந்து செல்லும் பெண்மணியின் கழுத்தில் கிடந்த சங்கிலியைப் பறித்த சம்பவம் மதுரை மக்களை அதிர வைத்துள்ளது.

கொரோனா ஊரடங்கில் குற்றங்கள் அதிகரித்திருப்பதாக வேதனை தெரிவிக்கிறார்கள் மதுரை மக்கள். முழு ஊரடங்கு நாளில் தேவையில்லாமல் வாகனங்களில் செல்வோரைக் கண்காணித்து விசாரித்து அனுப்புகிறது காவல்துறை.

சங்கிலி பறிக்கும் திருடன்
சங்கிலி பறிக்கும் திருடன்

அப்படி விசாரிக்கும் காவல்துறைக்கு சந்தேகம் வராத அளவுக்கு வழிப்பறி திருடர்கள், தங்கள் கெட்டப்பை மாற்றி வருகிறார்கள் என்பதை நேற்று மதுரையில் நடந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

மதுரை திருமலை நாயக்கர் மகால் அருகில் ஆட்கள் யாருமற்ற பந்தடித் தெருவில் நடந்து சென்றுகொண்டிருந்தார் உமா என்ற 60 வயதுப் பெண்மணி. அப்போது, சாதாரண மனிதர்போல முகக்கவசம் அணிந்து மெதுவாக சைக்கிளை மிதித்தபடி வரும் அந்த மனிதர், அப்பெண்ணின் அருகே வந்து அவர் கழுத்திலுள்ள சங்கிலியைப் பிடித்து இழுத்திருக்கிறார்.

சங்கிலி பறிக்க வரும் திருடன்
சங்கிலி பறிக்க வரும் திருடன்

அதை சற்றும் எதிர்பாராத அப்பெண்மணி, சத்தம் போட்டபடி சங்கிலியைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு அவனிடமிருந்து தப்பித்து ஓடுகிறார். ஆனால், அப்போதும் கொஞ்சமும் பதற்றப்படாத அந்தத் திருடன், சாலையின் மறுபக்கம் வாகனங்கள் நின்றுகொண்டிருக்கும் பகுதியில் சென்ற அப்பெண்ணை தாக்கி சங்கிலியைப் பறிக்கிறார். அப்போது, அந்த வழியாக ஸ்கூட்டரில் சென்றவர்கள் கூட அதைக் கவனிக்காமல் செல்கிறார்கள்.

`காலையில் டிபன் கடை; மதியம் செயின் பறிப்பு!' -சென்னையில் கணவரின் தம்பியுடன் சிக்கிய இளம்பெண்

அப்பெண்மணி சங்கிலியை கெட்டியாகப் பிடித்துக்கொண்டதால் கையில் சிக்கிய பாதி சங்கிலியை கைப்பற்றிக்கொண்டு சாவகாசமாகத் திருடன் சைக்கிளில் செல்கிறான். எப்போதும் ஆள் நடமாட்டமுள்ள அந்தத் தெருவில் முழு ஊரடங்கு என்பதால் ஒரு ஆளும் எட்டிப்பார்க்கவில்லை. நடந்த சம்பவத்தை வீட்டுக்கு வந்து உறவினர்களிடம் தெரிவிக்க, அதன் பின்பு காவல்நிலையத்தில் புகார் அளித்தார்கள். காவல்துறை விசாரணைக்காக அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோதுதான், திருடன் சைக்கிளில் வந்து சாவகாசமாக சங்கிலியை அறுத்துச் சென்றது உறுதி செய்யப்பட்டது.

சங்கிலி பறிக்கும் திருடன்
சங்கிலி பறிக்கும் திருடன்

முக்கால் பவுன் மதிப்புடைய சங்கிலியுடன் தப்பித்துள்ள திருடனை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகிறார்கள். முழு ஊரடங்கு நடைமுறையில் இருப்பது திருடர்களுக்கு சாதகமாக உள்ளதா அல்லது ஊரடங்கு, புதிய திருடர்களை உருவாக்கியுள்ளதா என்று மக்கள் அச்சப்படுகிறார்கள்,

அடுத்த கட்டுரைக்கு