Published:Updated:

`நண்டு பண்ணை; இரட்டிப்பு பணம்; ரூ.25 கோடி மோசடி!’ -வேலூருக்கு அதிர்ச்சி கொடுத்த சென்னைக் கும்பல்

பணம் கொடுத்து ஏமாந்த மக்கள்
பணம் கொடுத்து ஏமாந்த மக்கள்

நண்டு பண்ணையில் முதலீடு செய்தால், இரட்டிப்பு பணம் வழங்கப்படும் என்று விளம்பரப்படுத்தி, 500-க்கும் மேற்பட்டோரிடம் 25 கோடி ரூபாயை மோசடி செய்துவிட்டு தலைமறைவாகியிருக்கிறது, சென்னையைச் சேர்ந்த கும்பல்.

தமிழகத்தில் அவ்வப்போது எம்.எல்.எம் என்ற பெயரில் புதிது புதிதாக நிறுவனங்கள் முளைப்பதும், அவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் காவல்நிலையத்தில் புகார் கொடுப்பதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. காந்தப் படுக்கையில் தொடங்கி ஈமு கோழி மோசடி வரையில் பலவற்றைத் தமிழக மக்கள் பார்த்துவிட்டார்கள். இதில் புதுரக மோசடியாக வெளியில் வந்திருக்கிறது நண்டு பண்ணை வியாபாரம்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் புதுப்பேட்டை பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவரின் மகன் தண்டபாணி (38). தலைமுடி வியாபாரம் செய்து வருகிறார். தண்டபாணிக்கு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருவண்ணாமலையைச் சேர்ந்த சம்பத் மற்றும் ரேணுகா ஆகியோர் அறிமுகமாகினர். முடி வியாபாரம் மூலம் தண்டபாணியிடம் அதிக பணப் புழக்கம் இருந்ததைத் தெரிந்துகொண்ட அவர்கள், `சென்னை வடபழனியில் யூனிடாப் குளோபல் ஹோல்டிங்ஸ் லிமிடெட் என்ற தனியார் ஏற்றுமதி நிறுவனம் உள்ளது. 

நண்டு பண்ணை விளம்பரம்
நண்டு பண்ணை விளம்பரம்

அதில், 1 லட்சம் ரூபாயை வைப்புத்தொகையாகச் செலுத்தினால், 10 மாதங்களில் உங்களது பணம் இரட்டிப்பாகக் கிடைக்கும்’ என்று ஆசைகாட்டியுள்ளனர். அதையடுத்து, ஏற்றுமதி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் என்றுகூறி வேலூர் மாவட்டம் பனப்பாக்கத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்பவரையும் அலுவலகப் பொறுப்பாளராக தூத்துக்குடியைச் சேர்ந்த ஆதித்திய குமரன், ஏஜன்ட்டுகளாக சென்னையைச் சேர்ந்த வெங்கட் உட்பட மேலும் சிலரையும் தண்டபாணிக்கு அறிமுகம் செய்துவைத்தனர். 

சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தண்டபாணியை வரவழைத்துச் சந்தித்த அந்தக் கும்பல், `சென்னை, மாமல்லபுரம், ஆந்திர மாநிலம் பீமாவரம், கேரளா, இலங்கை ஆகிய பகுதிகளில் எங்களுக்கு ஆயிரக்கணக்கான ஏக்கரில் நண்டு வளர்க்கும் பண்ணைகள் உள்ளன. இங்கு வளர்க்கப்படும் நண்டுகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தத் தொழிலை விரிவுபடுத்த உள்ளோம். இதில் முதலீடு செய்பவர்களுக்கு 10 மாதத்தில் இரட்டிப்புத் தொகையை வழங்குகிறோம். 

பரிசுப் பொருள் வழங்கியபோது
பரிசுப் பொருள் வழங்கியபோது

அதைத்தவிர, எங்களின் மற்றொரு திட்டத்தில் 1 லட்சம் ரூபாய் செலுத்தினால், வாரத்துக்கு எட்டாயிரம் வீதம் 30 வாரங்களுக்கு ரெண்டு லட்சத்து நாற்பதாயிரமும் கடைசியில் அசல் தொகையும் வழங்கப்படும்’ எனக் கூறியுள்ளனர். அவர்களை முழுமையாக நம்பிய தண்டபாணி தன் மனைவியின் பெயரில் ஆறு கோடியே அறுபத்திரெண்டு லட்சம் ரூபாயை அந்தக் கும்பலின் வங்கிக் கணக்கில் முதலீடு செய்தார். இதுபற்றி தனக்கு தெரிந்த நண்பர்கள் பலரிடமும் தண்டபாணி கூறினார். 

அவர்களும் இரட்டிப்புப் பணத்துக்கு ஆசைப்பட்டு லட்சக்கணக்கில் பணம் செலுத்தினர். யாருக்கும் சந்தேகம் வராதபடி, முதலில் பணம் செலுத்திய ஒரு சிலருக்கு மட்டும் இரட்டிப்புத் தொகையை வழங்கியுள்ளனர். இத்திட்டம் குறித்து வாடிக்கையாளர்களுக்கு விளக்கும் வகையில் வேலூர், குடியாத்தம் பகுதியில், அந்தக் கும்பல் அடிக்கடி கூட்டம் நடத்தியது. அப்போது, வாடிக்கையாளர்களுக்கு உயர்தர உணவுகள், பரிசுப் பொருள்கள், பயணக் கட்டணம் என நிறுவனம் தரப்பில் வழங்கி மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர். 

பணம் கொடுத்து ஏமாந்த மக்கள்
பணம் கொடுத்து ஏமாந்த மக்கள்

இதையெல்லாம் பார்த்து, வேலூர் மாவட்டத்தில் மட்டும் 500-க்கும் மேற்பட்டோர் வீடு, நிலம், நகைகளை அடகு வைத்து சுமார் 25 கோடி ரூபாயைச் செலுத்தியிருக்கிறார்கள். அதன்பிறகு, அந்தக் கும்பல் திடீரென மாயமாகிவிட்டது. பணம் குறித்து எந்தவித தகவலும் வரவில்லை. இதனால், பணம் செலுத்தியவர்கள் அதிர்ச்சியடைந்து குடியாத்தம் டி.எஸ்.பி சரவணனிடம் புகார் அளித்தனர். டி.எஸ்.பி-யின் பரிந்துரையின் பேரில், வேலூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்திவருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு