Published:Updated:

சென்னை: 24 மணிநேரத்தில் பாதிக்கப்பட்ட 3 சிறுமிகள்! - அதிர்ச்சி கொடுத்த பாலியல் சம்பவங்கள்

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை ( மாதிரிப் படம் )

சென்னையில் 24 மணிநேரத்தில் 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வில்லிவாக்கம்

சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் ரோஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் தன்னுடைய 5 வயது மகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சாமிநாதன் (34) என்பவர் ரோஜாவின் வீட்டுக்குள் நுழைந்தார். பின்னர் 5 வயது குழந்தையை அவர் தூக்கிச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். குழந்தையின் அழுகைக் குரல் கேட்டு ரோஜா கண்விழித்தார். அப்போது தன் அருகில் படுத்திருந்த குழந்தையைக் காணாமல் அவர் பதற்றமடைந்தார். பின்னர் குழந்தையின் அழுகைக் குரல் கேட்கும் இடத்துக்கு ரோஜா சென்றார். அப்போது குழந்தையை விட்டுவிட்டு சாமிநாதன் ஓட்டம் பிடித்தார். குழந்தையிடம் கேட்டபோது மழலை குரலில் நடந்த விவரத்தைக் குழந்தை கூறியதும் ரோஜா அதிர்ச்சியடைந்தார்.

சிறுமி
சிறுமி

இதுகுறித்து ரோஜா வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாமகேஷ்வரி தலைமையிலான போலீஸார் சாமிநாதனிடம் விசாரித்தனர். அப்போது அவர், உண்மையை ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார் சாமிநாதனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஐடிஐ மாணவன்:

சென்னை, தரமணி பகுதியைச் சேர்ந்த 9 வயதுச் சிறுமியுடன் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதாகும் ஐ.டி.ஐ படிக்கும் மாணவன் முதலில் நட்பாகப் பழகியுள்ளார். பின்னர் சிறுமியைக் காதலிப்பதாகக் கூறியுள்ளார். அதன்பிறகு சிறுமிக்கு மாணவன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். பாதிக்கப்பட்ட சிறுமி, தன்னுடைய பெற்றோரிடம் நடந்த விவரத்தைக் கூறி கதறி அழுதுள்ளார்.

சிறுமி பாலியல் வன்கொடுமை
சிறுமி பாலியல் வன்கொடுமை
representational image

உடனே சிறுமியின் பெற்றோர் கிண்டி மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் போலீஸார் மாணவனிடம் விசாரித்தனர். அப்போது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை எனத் தெரியவந்தது. உடனே மாணவன் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்து அவனைக் கைது செய்த கெல்லீஸ் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.

அயனாவரம் சிறுமி

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமி, வீட்டை விட்டு வெளியேறி பெரம்பூர் ரயில் நிலையத்துக்கு மார்ச் மாதம் சென்றார். அப்போது அவரிடம் அன்பாகப் பேசிய திருத்தணியைச் சேர்ந்த வெங்கடேசன், சிறுமியை தன்னுடன் அழைத்துச் சென்றார். அங்கு 3 மாதங்களுக்கு மேல் சிறுமியை வீட்டிலேயே அடைத்து வைத்து அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமியை மீட்ட தலைமைச் செயலக காலனி அனைத்து மகளிர் போலீஸார், வெங்கடேசன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் வெங்கடேசனை போலீஸார் தேடிவருகின்றனர்.

சிறுமி வதை  -
சிறுமி வதை -
விகடன்
சென்னை அதிர்ச்சி: சிறுமியை ஏமாற்றிய தொழிலாளி! - மாதக்கணக்கில் பாலியல் கொடுமை

கடந்த 2 நாள்களுக்கு முன், சென்னை கிழக்கு தாம்பரம், காந்தி நகரை சேர்ந்த கூலித் தொழிலாளியின் 5 வயதுப் பெண் குழந்தையை, அதே பகுதியைச் சேர்ந்த உதயகுமார் (30) கழிவறைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பின்னர் சிறுமி நடந்த சம்பவத்தை தன்னுடைய அம்மாவிடம் கூறி அழுதுள்ளார். இதையடுத்து சிறுமியின் அம்மா தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் விசாரித்து உதயகுமார் என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

பாலியல் தொல்லை

திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில்தான் தொடர்ந்து சிறுமிகள் பாலியல் தொல்லைக்குள்ளாகி கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் நடந்தன. புதுக்கோட்டை சிறுமி வழக்கில் பக்கத்துக்கு வீட்டைச் சேர்ந்த பூ வியாபாரி கைது செய்யப்பட்டார். சேரமரசன்பேட்டை காவல்நிலைய வழக்கில் சிறுமி எரிந்த நிலையில் சடலமாகக் கிடந்தார். வையம்பட்டி காவல்நிலைய வழக்கில் 17 வயது கர்ப்பிணி சிறுமி தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் சிறுமியின் உறவினர் ராம்கியை போலீஸார் கைது செய்தனர். திருச்சி, புதுக்கோட்டை சம்பவங்கள் விஞ்சும் வகையில் சென்னையிலும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸ்
போலீஸ்
திருச்சி: `மாணவியின் பெயரை பச்சை குத்தியிருந்த வாலிபர்’  -சிறுமி மரணத்தில் திருப்பம்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றதடுப்பு போலீஸார் கூறுகையில், ``கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் குடும்ப வன்முறை சம்பவங்கள் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளன. ஆன்லைனில் வரும் புகார்களுக்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. 24 மணிநேரத்தில் 3 சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்துள்ளோம்" என்றனர்.

குழந்தைகள் நல ஆர்வலர்களிடம் கேட்டபோது, ``குழந்தைகள் மீதான வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பதற்கு சிறார் வதை வீடியோக்களை பார்ப்பதுதான் முக்கிய காரணம். சிறார் வதை வீடியோக்களை பார்த்தவர்கள் மீது தமிழக காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். கொரோனா ஊரடங்கால் நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கால் வீட்டுக்குள்ளேயே அனைவரும் இருப்பதாலும் குடும்ப வன்முறை சம்பவங்கள் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. தண்டனையோடு கவுன்சலிங்கும் அளிக்கப்பட வேண்டும். குழந்தைகளுக்கும் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு