டி.வி.கேபிள் இணைப்பைத் துண்டித்த பெற்றோர்! - சென்னையில் 8-ம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு

பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த இரண்டு மாணவர்களும் தொலைக்காட்சி கேபிள் துண்டிக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சென்னையில் ஒரு தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்புப் படித்து வந்த 14-வயது மாணவன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, பீர்க்கன்கரணைப் பகுதியில் வசித்து வரும் கொளஞ்சிநாதன்-சங்கீதா தம்பதிக்கு இரண்டு மகன்கள். இதில் மூத்த மகன் அரவிந்த கிருஷ்ணன் பத்தாம் வகுப்பும், இளைய மகன் அமுதீஸ்வரன் எட்டாம் வகுப்பும் படித்துவந்தனர்.
தற்போது மத்திய அரசு 8-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு கொண்டு வந்துள்ள நிலையில், தன் மகன்கள் இருவரும் பொதுத்தேர்வு எழுத உள்ளதை மனதில்கொண்டு கொளஞ்சிநாதன் தன் வீட்டுத் தொலைக்காட்சி கேபிள் இணைப்பைத் துண்டிப்பது பற்றி வீட்டில் பேசியுள்ளார்.

ஆனால், இதற்கு மகன்கள் இருவரிடமிருந்தும் எதிர்ப்பு வந்துள்ளது. எனவே, கடந்த வியாழன் அன்று தங்கள் பிள்ளைகள் பள்ளி சென்ற பிறகு, பெற்றோர் தங்கள் வீட்டுத் தொலைக்காட்சி கேபிள் இணைப்பைத் துண்டித்துள்ளனர். பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த இரண்டு மாணவர்களும் தொலைக்காட்சி கேபிள் துண்டிக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இதில் 8-ம் வகுப்பு மாணவனான அமுதீஸ்வரன் அழுதுகொண்டே ஓர் அறைக்குள் சென்று பூட்டிக்கொண்டான்.
வேலை முடிந்து இரவு வீடு திரும்பிய பெற்றோர், எவ்வளவு சொல்லியும் மகன் கதவைத் திறக்காததால் அருகில் உள்ளவர்களின் உதவியுடன் கதவை உடைத்துப் பார்க்க, அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அமுதீஸ்வரன் அந்த அறையில் சால்வையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்துள்ளது. மாணவனின் உடலை மீட்ட போலீஸார், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தங்கள் மகன்கள் படிப்பில் கவனம் சிதறக் கூடாது என்பதற்காகச் செய்த செயல் ஒரு பிள்ளையின் உயிரையே பறித்துவிட்டதே என்று, இறந்த மாணவனின் பெற்றோர் கதறி அழுதது அனைவரையும் உருக்கியது.