Published:Updated:

அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்... - மூன்றாம் இடத்தில் தமிழகம் - சிறுமிகள் பத்திரம்!

படத்தில் இருப்பவர் மாடலே...
பிரீமியம் ஸ்டோரி
படத்தில் இருப்பவர் மாடலே...

முதியவர்கள் பலரும் சிறுமிகளிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது.

அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்... - மூன்றாம் இடத்தில் தமிழகம் - சிறுமிகள் பத்திரம்!

முதியவர்கள் பலரும் சிறுமிகளிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது.

Published:Updated:
படத்தில் இருப்பவர் மாடலே...
பிரீமியம் ஸ்டோரி
படத்தில் இருப்பவர் மாடலே...

‘இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 126 குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலில் சிக்குகிறார்கள். அவர்களில் 22 சதவிகித குழந்தைகள் கடுமையான பாலியல் துன்புறுத்தல்களையும், 51 சதவிகித குழந்தைகள் ஏதாவது ஒருவகையில் பாலியல் தொந்தரவுகளையும் சந்திக்கிறார்கள்’ என்கிறது தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (என்.சி.ஆர்.பி) அறிக்கை. அதன்படி, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேச மாநிலங்களுக்கு அடுத்ததாக மூன்றாவது இடத்திலிருக்கிறது தமிழகம்! அதைப் பற்றி அலசுகிறது இந்தக் கட்டுரை...

15 நாள்கள்... 9 பேர் கைது!

தலைநகர் சென்னையில், பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியரே பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகார் தமிழகத்தை அதிரவைத்தது. பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டிய தாயே, தன் மகளை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவரிடம் தாரைவார்த்த சம்பவமும் சென்னையில் நடந்துள்ளது. ஜூன் 16 முதல் 30-ம் தேதி வரையிலான 15 நாள்களில் மட்டும் ஒன்பது பேரை போலீஸார் கைதுசெய்திருக்கிறார்கள். அவர்களில் இரண்டு பேர் முதியவர்கள்.

முதியவர்கள் பலரும் சிறுமிகளிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. குறிப்பாக, கொரோனாகால ஊரடங்கில் பள்ளிகள் செயல்படாமல் இருப்பதால், வீட்டிலுள்ள சிறுமிகளைக் குறிவைத்து பாலியல் சீண்டல்களில் முதியவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். சென்னை அடையாறிலுள்ள 6 வயது சிறுமி, வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக தன் தாயிடம் அழுதுகொண்டே சொல்ல, புகாரின் அடிப்படையில் ஜெகநாதன் என்ற 67 வயது முதியவரை போக்சோ சட்டத்தில் கைது செய்திருக்கிறார்கள்.

அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்... - மூன்றாம் இடத்தில் தமிழகம் - சிறுமிகள் பத்திரம்!

சென்னையில் நடந்த மற்றொரு சம்பவம்... கணவன், மனைவி இருவருமே பணிக்குச் செல்வதால் 6 வயது மகளும், மகனும் வீட்டில் தனியாக இருந்தார்கள். வேலை முடிந்து வீட்டுக்கு வந்த தாயிடம் 6 வயது மகள், முதியவர் ஒருவர் தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறினார். மாதவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்ததை அடுத்து பாலியல் தொல்லை கொடுத்த புழல் பகுதியைச் சேர்ந்த ஏசுதாஸ் என்ற 64 வயது முதியவரைக் கைதுசெய்தது போலீஸ்.

காரைக்குடியில், பெண் ஒருவர் தன் இரண்டு குழந்தைகளுடன் தனியாக வீட்டில் வசித்துவந்திருக்கிறார். பெண்ணின் 4 வயது மகள் மொட்டைமாடிக்குச் சென்று விளையாடுவது வழக்கம். கடந்த வாரம் அப்படி விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை வீட்டின் கீழ்ப்பகுதியில் வசிக்கும் அக்ரமும், அவனின் ஐந்து நண்பர்களும் சேர்ந்து பாலியல் துன்புறுத்தல் செய்திருக்கிறார்கள். சிறுமியைத் தேடி மொட்டைமாடிக்குச் சென்ற தாய், இந்தக் கொடுமையைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக சிறுமியை அந்தக் கும்பலிடமிருந்து மீட்டு, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆறு பேரையும் போலீஸார் கைதுசெய்திருக்கிறார்கள்.

தேவநேயன்
தேவநேயன்

கருத்தரிக்கும் சிறுமிகள்!

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகேயுள்ள பகுதியில், 13 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை தற்போது வெளியே வந்திருக்கிறது. சிறுமியின் அம்மா இறந்துவிட்டதால், தந்தையும் அவரைக் கவனிக்கவில்லை. அவரின் சித்திதான் சிறுமியை வளர்த்துவந்திருக்கிறார். சிறுமிக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தபோது, அவர் ஐந்து மாதம் கர்ப்பமாக இருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். காவல்துறை விசாரணையில், சிறுமியின் பெரியப்பா விஸ்வநாதன் என்பவர், கடந்த ஓராண்டாகச் சிறுமியைத் தன் கடைக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்திருக்கிறது. போக்சோ சட்டத்தின் கீழ் விஸ்வநாதன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சென்னை, அண்ணாநகர் பகுதியில் குடியிருக்கும் தம்பதியின் 15 வயது மகள், தொடர்ந்து வாந்தி எடுக்கவே, எழும்பூர் தாய் சேய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்திருக்கிறார்கள். அவர் நான்கு மாத கர்ப்பமாக இருப்பது தெரியவரவே, காவல்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது. விசாரணையில், சிறுமியின் உறவினரான 24 வயது கார்த்திக் குமார் என்பவர், காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி, கோயிலில்வைத்து திருமணமும் செய்து, சிறுமியிடம் பாலியல் இச்சையைத் தீர்த்துக்கொண்டிருக்கிறார்.

வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமியை, அவரின் உறவினரான 20 வயது சுபாஷ் காதலித்திருக்கிறார். தண்ணீர் கேன் சப்ளை செய்யும் வேலை செய்துவந்த சுபாஷ், சிறுமியின் வீட்டுக்கு அடிக்கடி சென்றிருக்கிறார். வீட்டில் யாருமில்லாத நேரத்தில், சிறுமியிடம் அத்துமீறியதில், அவர் கர்ப்பமாகியிருக்கிறார். இந்தத் தகவல் குடும்பத்தினருக்குத் தெரிந்ததும், சுபாஷுக்குச் சிறுமியைத் திருமணம் செய்து கொடுக்க முடிவெடுத்தார்கள். விஷயம் காவல்துறைக்குத் தெரியவே, திருமணத்தைத் தடுத்து நிறுத்தி, சுபாஷை போக்சோ சட்டத்தில் கைதுசெய்திருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு வந்த வழக்கு அதிர்ச்சி ரகம். 16 வயது அக்காவை 15 வயது தம்பி கர்ப்பமாக்கியதாக வந்த புகாரை விசாரித்து, சிறுவனை கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்திருக்கிறார்கள். அப்பா சென்னையில் வேலை பார்க்கிறார்; அம்மா மாற்றுத்திறனாளி. கொரோனா காலகட்டத்தில் வீட்டில் தனிமையில் இருந்தபோது அக்காவிடம் அத்துமீறியிருக்கிறான் தம்பி. இதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் மாமா உறவு முறையுள்ள ஒருவர், சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் அந்த மாவட்டத்தை அதிரவைத்திருக்கிறது. இப்படி குடும்ப உறவுகளுக்குள் சிறுமிகள் மீது நடக்கும் பாலியல் சீண்டல்களும் அதிகரித்துள்ளன.

விழிப்புணர்வு பணிக்குச் சென்றது தவறா?

வெளியேயும் சிறுமிகளுக்குப் பாதுகாப்பு இல்லை. சென்னை கொண்டித்தோப்பு பகுதியில் தடுப்பூசி போட்டுக்கொள்வது உள்ளிட்ட கொரோனா விழிப்புணர்வு பணிக்காக வீடு வீடாகச் சென்று 12-ம் வகுப்பு மாணவி ஒருவர் விளக்கம் அளித்துக்கொண்டிருந்தார். வாலாராம் என்பவரின் வீட்டுக்கு அந்த மாணவி சென்றபோது, அவரைக் கட்டிப்பிடித்து பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார் அவர். அதிர்ச்சியடைந்த மாணவி சத்தம் போட்டபடியே வெளியில் ஓடி வந்து, பூக்கடை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வாலாராம் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவுசெய்து கைதுசெய்தது போலீஸ்.

சென்னையில் மே மாதத்தில் மட்டுமே 13 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 13 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். ஜூன் மாதத்தில் 14 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஜூலை மாதத்தில் 5-ம் தேதி வரை இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் 103 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்... - மூன்றாம் இடத்தில் தமிழகம் - சிறுமிகள் பத்திரம்!

போக்சோவைக் கடுமையாக்க வேண்டும்!

“தமிழகத்தில் வழக்குகள் வருடக்கணக்கில் இழுத்தடிக்கப்படுகின்றன” என்று குற்றம்சாட்டும் சமூகநல மற்றும் குழந்தைகள்நல ஆர்வலர் தேவநேயன் இது தொடர்பான பல்வேறு தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்... ‘‘சென்னை தனியார் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்பில் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டு வெளியில் வந்தபோது, சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தன. ஆனால், 2012-ம் ஆண்டே பாலியல் குற்றச்சாட்டில் சிக்கும் ஆசிரியர்களின் சான்றிதழ்கள் ரத்து செய்யப்படுவதோடு, உடனடியாக அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதுவரை பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ஆசிரியர்கள் மீது அது போன்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

தமிழகத்தில் பதிவு செய்யப்படும் போக்சோ வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் எளிதில் தப்பிவிடுகிறார்கள். போக்சோ சட்டப்படி, ஆறு மாதங்களில் வழக்கு விசாரணை முடிக்கப்பட்டு, தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். ஆனால், பல வழக்குகள் வருடக்கணக்கில் இழுத்தடிக்கப்படுகின்றன. தேனி மகிளா நீதிமன்றத்தில் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த சிறுமி பாலியல் வழக்கில், மூன்று பேருக்கு 2018-ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டது. ஆனால், மேல்முறையீட்டில் அவர்கள் அடுத்த ஆண்டே விடுதலை செய்யப்பட்டார்கள். இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு நான் எடுத்துச் சென்றிருக்கிறேன்’’ என்றார்.

பாலியல் விழிப்புணர்வு கல்வி, பெற்றோரின் கண்காணிப்பு, சட்டங்களை வலுப்படுத்துதல் உள்ளிட்ட விஷயங்களில் ஒருசேர கவனம் செலுத்தினால் மட்டுமே இது போன்ற குற்றங்களைத் தடுக்க முடியும். பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டுவரும் தமிழக அரசு, இந்த விஷயத்திலும் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism