Published:Updated:

`அம்மா பாசம்; தந்தையின் ஆத்திரம்' - குடும்ப பிரச்னையால் 9 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த துயரம்!

கீழே விழுந்து வலி தாங்காமல் துடித்த மகளை டியூப் லைட்டால் தாக்கி கொடுமைப்படுத்தியுள்ளார் அவரின் தந்தை.

குழந்தை மீது தாக்குதல்
குழந்தை மீது தாக்குதல்

குழந்தைகள் தினத்தன்று மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தன் 9 வயது மகளை துரத்தித் துரத்தி கடுமையாகத் தாக்கி கொலை செய்ய முயன்ற தந்தையைக் காவல்துறையினர் கைது செய்த பின்புதான் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். திருமங்கலம் கொடிமரத்தெருவில் வசித்து வரும் அப்துல் சமது தன் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்கிறார். 9 வயது மகள் தந்தையுடன் வசித்து வந்தார்.

கடந்த 14-ம் தேதி பக்கத்துத் தெருவில் வசிக்கும் தன் தாயைப் பார்த்துவிட்டு வந்திருக்கிறாள் அந்தச் சிறுமி. இதைப் பார்த்துவிட்ட அப்துல் சமது, மகளென்றும் பாராமல் தெருவில் எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்கும்போதே கடுமையாகத் தாக்கியிருக்கிறார்.

அப்துல் சமது
அப்துல் சமது

அதில் கீழே விழுந்து வலி தாங்காமல் துடித்த மகளை டியூப் லைட்டால் தாக்கியது மட்டுமல்லாமல் கழுத்தில் காலை வைத்து மிதித்து கொலை செய்ய முயன்றிருக்கிறார். இதை அப்பகுதியிலிருந்த மக்கள் கண்டித்தபோது அவர்களை மிரட்டியிருக்கிறார்.

ஒருகட்டத்தில் இதைப்பார்த்து பொறுக்க முடியாமல் அப்துல் சமதுவை தாக்கி அச்சிறுமியை மீட்டனர் மக்கள். அதற்குள் அப்துல் சமது அங்கிருந்து தப்பித்துவிட்டார். பின்பு, அச்சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இத்தகவல் காவல் துறைக்குத் தெரிவிக்கப்பட்டதும், தலைமறைவான அப்துல் சமதுவை கைது செய்தனர். `பிரிந்து சென்ற மனைவியைத் தனக்குத் தெரியாமல் மகள் பார்க்கச் சென்றதால் ஆத்திரத்தில் தாக்கினேன்' என்று கூறியுள்ளார். அவர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.