Published:Updated:

`காதலனை நம்ப வைத்தால் திருமணம்’ - குழந்தை கடத்தல் விவகாரத்தில் திருப்பத்தூரைப் பதறவைத்த இளம்பெண்

மீட்கப்பட்ட குழந்தை
மீட்கப்பட்ட குழந்தை

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தையை இரண்டு மணி நேரத்துக்குள்ளாகக் காவல்துறையினர் மீட்டு தாயிடமே ஒப்படைத்தனர். 

திருப்பத்தூரை அடுத்த சிங்காரப்பேட்டை மொசலிக்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷெரீப். இவரின் மனைவி ரோசின் சுல்தானா (28), மூன்றாவது பிரசவத்திற்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் இரண்டு தினங்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டார். அப்போது, ஆரோக்கியமான முறையில் ஆண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் இரண்டு நாள்களாக மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்துவருகிறார்கள். நேற்று காலை 9 மணியளவில், பர்தா அணிந்திருந்த பெண் ஒருவர் சுல்தானா அனுமதிக்கப்பட்டிருந்த மகப்பேறு வார்டுக்குள் வந்தார்.

சிசிடிவி-யில் பதிவான காட்சி
சிசிடிவி-யில் பதிவான காட்சி

சுல்தானாவிடம் சென்று அந்தப் பெண் பேச்சுக் கொடுத்தார். ``என் அக்காவும் பிரசவத்திற்காக இதே மருத்துவமனையில் மேல் வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவளுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆண் குழந்தை பிறக்க வேண்டுமென்று அவள் ஆசைப்பட்டாள். உங்களின் குழந்தையை கொஞ்ச நேரம் கொடுத்தால் என் அக்காவிடம் காட்டிவிட்டு உடனே கொடுத்துவிடுகிறேன்’’ என்று வற்புறுத்தினார். அந்தப் பெண்ணின் பேச்சை நம்பி குழந்தையைக் கொடுத்து அனுப்பினார் சுல்தானா. நீண்ட நேரமாகியும் குழந்தையுடன் சென்ற பெண் திரும்பி வரவில்லை.

அதிர்ச்சியடைந்த சுல்தானா மருத்துவர்களிடமும் செவிலியர்களிடமும் நடந்ததைக் கூறி கதறி அழுதார். உடனடியாக திருப்பத்தூர் நகர போலீஸிலும் புகார் அளித்தார். எஸ்.பி விஜயகுமாரின் உத்தரவின் பேரில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டது. உள்ளூர் வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் பொதுமக்களிடம் தகவல் பரிமாறப்பட்டது. மருத்துவமனையிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளையும் போலீஸார் ஆய்வு செய்தனர்.

மீட்கப்பட்ட குழந்தை
மீட்கப்பட்ட குழந்தை

அதில், குழந்தையை தூக்கிச் செல்லும் பெண்ணின் முகம் பதிவாகியிருந்தது. விசாரணையில் அந்தப் பெண், திருப்பத்தூர் தேவாங்கர் நகரைச் சேர்ந்த நஹினா (25) என்பது தெரியவந்தது. போலீஸார் அவரின் வீட்டுக்கு விரைந்து சென்றனர். நஹினா வீட்டில் இருந்தார். போலீஸாரைக் கண்டதும் பதறினார். போலீஸார் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, துணிகளுக்கு அடியில் குழந்தை மறைத்து வைக்கப்பட்டிருந்தது. குழந்தையை மீட்ட போலீஸார் நஹினாவை கைதுசெய்து காவல் நிலையம் அழைத்துவந்தனர்.

கடத்தப்பட்ட குழந்தையை இரண்டு மணி நேரத்துக்குள் கண்டுபிடித்து தாயிடமே போலீஸார் ஒப்படைத்தனர். இதையடுத்து, பிடிபட்ட நஹினாவிடம் கிடுக்கிப்பிடியாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்தப் பெண் போலீஸாரிடம், ``நான் ஏற்கெனவே திருமணம் ஆனவள். கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கணவரைப் பிரிந்துவிட்டேன். அதன்பிறகு, நான் வசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் எனக்கு நட்பு ஏற்பட்டது. அவருடன்தான் இப்போது வாழ்ந்து வருகிறேன்.

காவல்துறையினரைப் பாராட்டிய எஸ்.பி விஜயகுமார்
காவல்துறையினரைப் பாராட்டிய எஸ்.பி விஜயகுமார்

நான் கர்ப்பமடையாத காரணத்தினால், அவர் என்னுடன் சண்டை போடுகிறார். சேர்ந்து வாழ மறுக்கிறார். ஏதாவது ஒரு குழந்தையைக் கடத்தி வந்து காதலனுக்குப் பிறந்தது என்று நம்பவைத்தால் அவர் என்னைத் திருமணம் செய்துகொள்வார் என்று திட்டமிட்டேன். அதற்காகக் கடந்த 6 மாதங்களுக்கு மேல் கர்ப்பமாக இருப்பதாகக் கூறி காதலனை நம்ப வைத்து ஏமாற்றிக் கொண்டிருந்தேன். பிரசவ வலி ஏற்பட்டதாகப் பொய் சொல்லி மருத்துவமனைக்கு வந்தேன். பிறந்து இரண்டு நாளே ஆன குழந்தையைப் பார்த்ததும் கடத்தி வந்து வளர்க்க முடிவுசெய்தேன்’’ என்று கூறியதாக காவல் துறையினர் தெரிவிக்கிறார்கள்.

எனினும், குழந்தை கடத்தல் தொடர்பாக போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்திவருகிறார்கள். இரண்டு மணி நேரத்துக்குள்ளாகக் குழந்தை மீட்ட போலீஸாரை, எஸ்.பி விஜயகுமாரும் பத்திரிகையாளர்களும் பாராட்டினர். இந்தச் சம்பவம் திருப்பத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு