Published:Updated:

கிருஷ்ணகிரி: `9 மாதங்களில் 728 சிறுமிகள் கர்ப்பம் - அதிர்ச்சி அளிக்கும் ஆர்.டி.ஐ தகவல்கள்!'

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கர்ப்பம்
கர்ப்பம் ( சித்திரிப்புப் படம் )

குழந்தைத் திருமணம், இளம் வயதில் கருத்தரித்தல் போன்றவையும் கடுமையான பாலியல் குற்றங்களே

தமிழகத்தில், 14 வயது முதல் 19 வயதுக்கு உட்பட்ட பதின்பருவச் சிறுமிகள் 'திருமணம்' என்ற பெயரில் கட்டாயப் பாலியல் உறவுகளுக்குள் தள்ளப்படும் கொடுமை எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்திருக்கிறது. இதில், குற்றம்சாட்டப்படும் இடத்தில் குடும்பத்தினரே இருப்பதுதான் வேதனையின் உச்சம். இது தொடர்பாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், 17.10.2021 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில், `குழந்தைத் திருமணம் எனும் பாலியல் கொடுமை‘ என்ற தலைப்பில் விரிவான கட்டுரை வெளியிட்டிருந்தோம். அந்தக் கட்டுரை தொடர்பாக, கர்ப்பம் தரித்த சிறுமிகளின் எண்ணிக்கையை மாவட்டவாரியாக ஆர்.டி.ஐ மூலம் கேட்டபோது, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் விவரங்களை மட்டுமே கொடுத்திருந்தது பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை

குழந்தைத் திருமணம்
குழந்தைத் திருமணம்
சித்தரிப்புப் படம்

2015-2020 வரையிலான ஆறு ஆண்டுகளுக்குள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திருமண வயதை எட்டாத 3,326 சிறுமிகள் கர்ப்பமடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 2015-ல் 246 பேரும், 2016-ல் 352 பேரும், 2017-ல் 572 பேரும், 2018-ல் 676 பேரும், 2019-ல் 650 பேரும், 2020-ல் 830 பேரும் கருத்தரித்திருக்கிறார்கள் என்ற தகவல்கள் அதிர்ச்சிகரமாக இருந்தன. இது தொடர்பான விவரங்களை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவனிடம் தெரிவித்து, விளக்கம் கேட்டிருந்தோம். ``நவம்பர் முதல் வாரம் கிருஷ்ணகிரி மாவட்ட கிராமங்களில் ஆரம்பித்து தமிழகம் முழுவதும் குழந்தைத் திருமணம் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைப் பெரிய இயக்கமாக நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம்" என்று அமைச்சர் கீதா ஜீவன் சொன்ன விளக்கத்தையும் ஜூ.வி கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம்.

Vikatan

கட்டுரை வெளியானதை அடுத்து, உடனடி ரியாக்‌ஷன் காட்டியது தமிழக அரசு. முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவுக்கிணங்க, கிருஷ்ணகிரியில் குழந்தைத் திருமணம் தடுப்பு குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்தையும், இளம் வயது கர்ப்பத்தால் ஏற்படும் தீமைகள் குறித்த பயிற்சிக் கூட்டத்தையும் நடத்தினார் அமைச்சர் கீதா ஜீவன்.

இந்த நிலையில், இளம் வயதில் கருத்தரித்தல் தொடர்பான 2015-2020 வரையிலான புள்ளிவிவரங்களை ஏற்கெனவே வெளியிட்டிருந்த நிலையில், நடப்பு ஆண்டுக்கான கிருஷ்ணகிரி மாவட்ட விவரங்களை ஆர்.டி.ஐ-யின் கீழ் பெற்றிருக்கிறார் சென்னை வண்டலூரைச் சேர்ந்த பிரபாகர். இந்தப் பட்டியலில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மகப்பேறு சிகிச்சை எடுத்துக்கொண்ட சிறுமிகளின் எண்ணிக்கை மட்டுமே தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.

வண்டலூர் பிரபாகர் - அமைச்சர் கீதா ஜீவன்
வண்டலூர் பிரபாகர் - அமைச்சர் கீதா ஜீவன்

ஜனவரி 1-ம் தேதியிலிருந்து செப்டம்பர் 30-ம் தேதி வரையிலான 9 மாதங்களில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 23,347 பேர் மகப்பேறு சிகிச்சை மேற்கொண்டிருக்கின்றனர். இதில், 728 பேர் 18 வயதுக்குட்பட்ட பதின்பருவச் சிறுமிகள் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஜனவரி மாதம்-58, பிப்ரவரி-66, மார்ச்-86, ஏப்ரல்-105, மே-101, ஜுன்-102, ஜூலை-96, ஆகஸ்ட்-76, செப்டம்பர் மாதம்-38 சிறுமிகளும் கருத்தரித்திருக்கிறார்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருக்கும் காவேரிப்பட்டினம் ஒன்றியத்தில்தான் அதிக அளவிலான சிறுமிகள் கருத்தரித்திருப்பதாகவும், ஆர்.டி.ஐ மூலம் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. ஒன்பது மாதங்களில், காவேரிப்பட்டினம் ஒன்றியத்தில் 132 சிறுமிகள் கர்ப்பமடைந்திருக்கிறார்கள். ஓசூர் நகர்ப்புறத்தில் 41, ஓசூர் ஒன்றியப் பகுதியில் 28, கிருஷ்ணகிரி நகர்ப்புறத்தில் 9, கிருஷ்ணகிரி ஒன்றியப் பகுதியில் 88 சிறுமிகள் கருத்தரித்திருக்கின்றனர். அதேபோல, தளி ஒன்றியத்தில்-30, ஊத்தங்கரை ஒன்றியத்தில்-73, மத்தூர் ஒன்றியத்தில்-81, கெலமங்கலம் ஒன்றியத்தில்-75, பர்கூர் ஒன்றியத்தில்-59, சூளகிரி ஒன்றியத்தில்-79, வேப்பனஹள்ளி ஒன்றியத்தில் 33 சிறுமிகள் கருத்தரித்திருக்கிறார்கள்.

``குழந்தைத் திருமணம், இளம் வயதில் கருத்தரித்தல் போன்றவையும் கடுமையான பாலியல் குற்றங்களே என்பதைப் பெற்றோருக்கு உணர்த்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் விழிப்புணர்வை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும்" என்கிறார்கள் குழந்தைகள்நல ஆர்வலர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு