Published:Updated:

`சீட்டாட்ட பகை டு அரிவாள் வெட்டு..!'- கோவையில் மோதிய பா.ஜ.க, இந்து முன்னணி கட்சியினர்

அரிவாள் வெட்டு
அரிவாள் வெட்டு

கோவையில் இந்து முன்னணி பிரமுகர்களை அரிவாளால் வெட்டிய பி.ஜே.பி பிரமுகரை போலீஸார் தேடி வருகின்றனர்.

கோவை கவுண்டம்பாளையம் அருகே ஒரு பெண் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, அங்கே வந்த ஒரு கார், அந்த இருசக்கர வாகனத்தில் மோதிவிட்டது. இதனால், பைக்கில் வந்த பெண்ணுக்கும் காரில் இருந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

கவுண்டம்பாளையம்
கவுண்டம்பாளையம்

அப்போது, கார்த்தி, ஜெரால்ட், ஹரீஷ் ஆகிய மூன்று பேர் அங்கு வந்து கார் ஓட்டி வந்தவர்களுக்கு ஆதரவாகப் பேசியுள்ளனர். இதையடுத்து, நடந்த விஷயத்தை அந்தப் பெண் தன் சகோதரர் செல்வாவிடம் தெரிவித்துள்ளார்.

செல்வா தன் நண்பர் அசோக்கிடம் தெரிவித்துள்ளார். அசோக் தன் நண்பர்கள் சிலரை அழைத்துக்கொண்டு சம்பவ இடத்துக்கு அருகே வந்து கார்த்தி மற்றும் அவரின் நண்பர்களிடம் பேசியுள்ளனர். இரண்டு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம், கைகலப்பாகியது.

ஒரு கட்டத்தில், அசோக் தரப்பினர் அரிவாளால் தாக்கியதில், கார்த்தி, ஜெரால்ட், ஹரீஷ் மூன்று பேரும் படுகாயமடைந்துள்ளனர்.

பி.ஜே.பி அசோக்
பி.ஜே.பி அசோக்

இதில், அசோக் பி.ஜே.பி இளைஞரணியைச் சேர்ந்தவர் என்றும் கார்த்தி மற்றும் ஜெரால்ட் ஆகியோர் இந்து முன்னணியைச் சேர்ந்தவர் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் மற்றும் போலீஸிடம் விசாரித்தபோது, இப்போது மோதிக்கொண்ட இரண்டு தரப்பினருக்கும் ஏற்கெனவே முன்பகை இருக்கிறது. இருவருமே சீட்டு ஆட்டத்தில் மூழ்கியவர்கள்.

அதனால் அடிக்கடி மோதல் வரும். அப்படி ஆரம்பித்த மோதல்தான் இப்போது அரிவாள் வெட்டு வரை சென்றுவிட்டது என்றனர். கார்த்தி, ஜெரால்ட், ஹரீஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அசோக், ராசு, சண்முகசுந்தரம், சச்சு, தியானேஸ், கிரண் ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் தேடி வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு