Published:Updated:

கோவை இந்து முன்னணி பிரமுகர் தாக்குதல்.. மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

இந்து முன்னணி ஆனந்தன்
இந்து முன்னணி ஆனந்தன்

கோவையில் இந்து முன்னணி பிரமுகரை தாக்கிய மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

கோவையில், சி.ஏ.ஏ-வுக்கு எதிராக ஆத்துப்பாலத்திலும், சி.ஏ.ஏ-வுக்கு ஆதரவாக காந்திபுரத்திலும் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. கோவையில், சி.ஏ.ஏ-வுக்கு எதிராக இஸ்லாமியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு பி.ஜே.பி மற்றும் இந்து முன்னணி உள்ளிட்டோர் காந்திபுரம் தமிழ்நாடு உணவகம் முன்பு சி.ஏ.ஏ-வுக்கு ஆதரவாக தொடர் போராட்டத்தைத் தொடங்கினார்கள்.

இஸ்லாமியர்கள் போராட்டம்
இஸ்லாமியர்கள் போராட்டம்

அப்போது, அங்கு இஸ்லாமியர் மற்றும் இந்து தரப்பினரிடைய மோதல் ஏற்பட்டது. போலீஸார் உடனடியாக வந்து நடவடிக்கை எடுப்பதாகச் சொன்னதையடுத்து இருதரப்பினரும் சமாதானமாகினர்.

இதனிடையே, காந்திபுரத்தில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். இதில், இந்து முன்னணி மதுக்கரை ஒன்றிய செயலாளர் ஆனந்தன் என்பவரும் கலந்துகொண்டு பேசினார்.

இந்துகள் போராட்டம்
இந்துகள் போராட்டம்

போராட்டம் முடிந்து இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஆனந்தனை, நேற்று இரவு நஞ்சுண்டாபுரம் பாலம் அருகே மர்மநபர்கள் தாக்கிவிட்டுச் சென்றுவிட்டனர். இதையடுத்து, ஆனந்தன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனந்தன் தாக்கப்பட்ட தகவல் தெரிந்து, இந்து முன்னணி, பி.ஜே.பி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கோவை அரசு மருத்துவமனை முன்பு குவிந்துவிட்டனர். இதைத்தொடர்ந்து எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருப்பதற்காக, போலீஸார் குவிக்கப்பட்டனர்.

ஆனந்தன்
ஆனந்தன்

கோவை அரசு மருத்துவமனையில், ஆனந்தனுக்கு முதல்கட்ட சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக அவர் அவிநாசி சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து இந்து முன்னணி பிரமுகர்கள், ``ஆனந்தனை பின்தொடர்ந்து சென்று இரும்பு ராடால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். ஆகவே, இது திட்டமிடப்பட்ட தாக்குதல். கோவையில் கடந்த சில மாதங்களாக இப்படியான ஒரு சூழ்நிலைதான் நிலவி வருகிறது.

ஆனந்தன்
ஆனந்தன்

காவல்துறை உடனடியாக ஆனந்தனைத் தாக்கியவர்களைப் பிடித்து நடவடிக்கை எடுக்காவிடின், நாங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்று கூறியுள்ளனர்.

``சிசிடிவி கேமரா உதவியுடன் மர்மநபர்களைப் பிடிக்க முயற்சி செய்து வருகிறோம்” என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

இதற்கிடையே, கோவை கணபதி அருகே உள்ள மசூதியில் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு