Published:Updated:

`கழுத்தை நெரித்த கடன், கைவிட்ட பிள்ளைகள்!'- கிணற்றில் விழுந்த மனைவியால் கணவர் எடுத்த விபரீத முடிவு

குருபிரசாத்

கோவையில் மனைவியின் சடலத்தைப் பார்த்த, முதியவரும் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணன், சாரதா
கிருஷ்ணன், சாரதா

கோவை, இருகூரில் வசித்து வந்த தம்பதியினர் கிருஷ்ணன் (75), சாரதா (70). இருவரும் சாலையோரத்தில் கம்பங்கூழ் விற்பனை செய்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் என்று மொத்தம் மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர். அவர்கள், அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

கிணறு
கிணறு

இந்நிலையில், கடந்த சில நாள்களாகக் கடன் பிரச்னை, பிள்ளைகள் சரிவர கவனிக்காதது என்று பல விஷயங்களால் இந்த முதிய தம்பதியினர் சோகத்தில் இருந்து வந்துள்ளனர்.

``ஒரு கட்டத்தில் தற்கொலை பண்ணிக்கலாமானு நினைச்சேன்..!'' - கலங்கும் மோகன் வைத்யா

இதையடுத்து, 26-ம் தேதி முதல் சாரதாவைக் காணவில்லை என்று சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வீட்டின் அருகிலுள்ள கிணற்றில் சாரதா சடலமாகக் கிடப்பதாக அவரின் கணவர் கிருஷ்ணனுக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

சாரதா சடலமாக
சாரதா சடலமாக

உடனே வீட்டுக்கு வந்த கிருஷ்ணன், சடலத்திலிருந்த புடவை தன் மனைவியுடையது என்று தெரிந்து மனமுடைந்து கிணற்றில் குதித்துள்ளார்.

அருகில் ஆள்கள் இருந்தும், கிருஷ்ணன் திடீரென விழுந்ததால் என்ன செய்வதென்று தெரியாமல் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இதைத்தொடர்ந்து, தகவல் அறிந்துவந்த காவல்துறையினர், கிணற்றில் இருந்த சாரதா உடல் மற்றும் கிருஷ்ணனை மீட்டுள்ளனர்.

கிருஷ்ணன் உடல்
கிருஷ்ணன் உடல்

பாறையில் தலை அடிபட்டு விழுந்ததில், கிருஷ்ணன் உயிரிழந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். சாரதாவும் குடும்பப் பிரச்னை காரணமாகத் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இருவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, சிங்காநல்லூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.