Published:Updated:

குழந்தை விற்பனையில் தகராறு; மக்களிடம் சிக்கிய கும்பல்! - கோவை அதிர்ச்சி

குழந்தை விற்பனை
குழந்தை விற்பனை

கோவை, கருமத்தம்பட்டியில் குழந்தை விற்பனையில் ஈடுப்பட்டவரையும் குழந்தையை வாங்க வந்தவரையும் மக்கள் பிடித்து, போலீஸில் ஒப்படைத்துள்ளனர்.

கோவை மதுக்கரையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஜாகீர். இவர், தனக்கு ஒரு குழந்தை தேவை என்று, ஏற்கெனவே நாமக்கல் ராசிபுரம் பகுதிகளில் குழந்தை விற்பனையில் ஈடுபட்டு கைதான ஹசீனா மற்றும் அவரது தோழி கல்யாணி ஆகியோரை தொடர்பு கொண்டுள்ளார். இதற்காக, அவர்கள் ரூ.2 லட்ச பெற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

குழந்தை விற்பனை
குழந்தை விற்பனை

இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த கண்ணன் - ஜோதி என்ற தம்பதியரை ஆண் குழந்தையுடன் கோவை கருமத்தம்பட்டி அழைத்து வந்த ஹசீனா மற்றும் கல்யாணி, ஜாகீரிடம் அந்தக் குழந்தையைக் காட்டியுள்ளனர். பின்னர், சூலூரில் வைத்து குழந்தையைத் தருவதாகக் கூறி அங்கு அனைவரும் ஒன்று கூடியுள்ளனர். இதனிடையே, ஜாகீரிடம் புரோக்கர்கள் ஹசீனா மற்றும் கல்யாணி ஆகியோர் கூடுதல் பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அவர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பொதுவெளியில் நடந்த இந்தச் சண்டையை, அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர்.

Vikatan

இதையடுத்து, மக்கள் அவர்கள் 3 பேரையும் பிடித்து சூலூர் போலீஸில் ஒப்படைத்தனர். இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீஸார் அருகில் குழந்தையுடன் இருந்த கண்ணன் - ஜோதி தம்பதியினரையும் பிடித்தனர். பிறகு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட சூலூர் போலீஸார், கருமத்தம்பட்டி பகுதியில் நடைபெற்ற சம்பவம் என்பதால் 5 பேரையும் கருமத்தம்பட்டி போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருமத்தம்பட்டி காவல்நிலையம்
கருமத்தம்பட்டி காவல்நிலையம்

இதில் குழந்தையை விற்க வந்த மதுரையைச் சேர்ந்த கண்ணன் - ஜோதி தம்பதியர் ஏற்கெனவே தங்களது முதல் குழந்தையை இதேபோன்று விற்பனை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இந்த ஆண் குழந்தை யாருக்காக வாங்கப்பட்டது என்பது குறித்தும், கருமத்தம்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் குழந்தைக் கடத்தல் வழக்கில் கைதாகி, சிறைசென்ற ஹசீனா மற்றும் கல்யாணி ஆகியோர் ஜாமீனில் வந்து மீண்டும் குழந்தையை விற்க முயற்சி செய்துள்ளனர். அவர்களிடம் போலீஸார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு