Published:Updated:

பாலியல் தொழில் மோசடி... 5 பேர் கைது! - கோவையில் மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஓயோ லாட்ஜ்

Representational Image
Representational Image

கோவையில் ஓயோ பெயரில் அறைகளைப் பாலியல் தொழிலுக்குப் பயன்படுத்தி மோசடி செய்த 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும், அவரது பிஸ்னெஸ் பார்ட்னரும் இணைந்து கோவை சரவணம்பட்டி, சின்னமேட்டுப்பாளையம் பகுதியில், Oyo Flagship Tristar Inn என்ற பெயரில் ரூம்களை வாடகைக்கு விட்டு வந்தனர். ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், லாட்ஜ்கள் நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. ஆனால், சின்னமேட்டுப்பாளையம் ஓயோ லாட்ஜ் அரசாங்கத்திடம் எந்த அனுமதியும் வாங்காமல், இயங்கி வந்ததாகக் கூறப்படுகிறது.

ஓயோ லாட்ஜ்
ஓயோ லாட்ஜ்

இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு முகமுடி அணிந்த 4 மர்ம நபர்கள் அந்த லாட்ஜ்க்குள் புகுந்து, இரண்டு ஜோடிகள் மற்றும் அந்த லாட்ஜ் ஊழியர்களைத் தாக்கிவிட்டு பணம், மொபைல்களைத் திருடிச் சென்றுவிட்டனர்.

தகவலறிந்த சரவணம்பட்டி போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போதுதான், அந்த லாட்ஜில் பாலியல் தொழில் மோசடி நடக்கும் அதிர்ச்சி தகவல் வெளியானது. இதையடுத்து போலீஸார், திருப்பூரை சேர்ந்த 25 வயது இளைஞர் சிவக்குமார் மற்றும் 22 வயது பெண், நீலிக்கோணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித், போத்தனூரைச் சேர்ந்த ஃபயாஸ், குனியமுத்தூரைச் சேர்ந்த சாதம் உசைன் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

லாட்ஜ்
லாட்ஜ்

அவர்கள் மீது 3 (2) (a), 4 (2) (c) ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் தொடர்புடையை சென்னையைச் சேர்ந்த சுதா என்பவர் தலைமறைவாகியுள்ளார்.

இதுகுறித்து சரவணம்பட்டி போலீஸார் கூறுகையில், ``சிவக்குமாரும் மற்றொரு பெண்ணும்தான் அந்த லாட்ஜை நடத்தி வருகின்றனர். ஃபயாஸ் மற்றும் சதாம் உசைன் இவருவருமே தங்களது காதலிகளான கல்லூரி மாணவிகளுடன் அங்கு தங்கியிருந்தனர். கல்லூரி பெண்களை அங்கு அழைத்து வரும் பணிகளை ஃபயாஸ் மற்றும் சதாம் உசைன் செய்து வந்தனர். பல பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளுடன் ஃபேஸ்புக் மூலம் தொடர்பில் இருந்து, பின்னர் ரூம்களுக்கு அழைத்து வருவார்கள்.

லாட்ஜ்
லாட்ஜ்

ஊரடங்கிலும் அந்த லாட்ஜ் இயங்குவதை தெரிந்த மர்மநபர்கள், ஆயுதங்களுடன் உள்ளே நுழைந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். சிசிடிவி கேமராக்களும் சேதப்படுத்தப்பட்டு, டிஜிட்டல் வீடியோ ரெக்காடரையும் எடுத்து சென்றுவிட்டனர். பாலியல் தொழிலில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யப்பட்ட 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுவிட்டனர். தனிப்படை அமைத்து கொள்ளையடித்தவர்களையும் தேடி வருகிறோம்” என்றனர்.

கோவையில் ஓயோ லாட்ஜ் சர்ச்சையில் சிக்குவது இது முதல்முறை அல்ல. ஏற்கெனவே நவஇந்தியா பகுதியில் இயங்கி வந்த ஓயோ சர்வீஸ் அப்பார்ட்மென்டில், கல்லூரி மாணவிகள், இளைஞர்கள் வருவதாகக் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த லாட்ஜ்க்கு சீல் வைக்கப்பட்டிருந்தது. பிறகு, சென்னை உயர் நீதிமன்றம் அந்த லாட்ஜ்க்கு வைக்கப்பட்டிருந்த தடையை நீக்கியதையடுத்து, அது மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துவிட்டது.

பாலியல் தொழில் மோசடி... 5 பேர் கைது! - கோவையில் மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஓயோ லாட்ஜ்

அந்த சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் ஓர் ஓயோ லாட்ஜ் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ``அங்கு ஆய்வு செய்து விதிமுறைகள் மீறப்பட்டிருப்பது உறுதியானால், உடனடியாக அந்த லாட்ஜ்க்கு சீல் வைத்துவிடுவோம்” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு