Published:Updated:

பெண் கூலித்தொழிலாளியின் உயிரைப் பறித்ததா அ.தி.மு.க நிவாரண வாகனம்?! கோவை சர்ச்சை

உயிரிழந்த மாரி
உயிரிழந்த மாரி

அ.தி.மு.க சார்பில் நிவாரணப் பொருள் கொடுப்பதற்காக வந்த வேன் மோதிதான் விபத்து நடந்ததாகத் தகவல்கள் வெளியாகின.

கோவை, கரடிமடை மத்திப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சின்ராஜ். இவரின் மனைவி மாரி. கூலித்தொழில் செய்து வந்தார். அந்தப் பகுதியில் நேற்றுமுன்தினம் மாலை அதிகவேகமாக வந்த ஈச்சர் வேன் ஒன்று, அங்கு நின்றுகொண்டிருந்த மாரி மற்றும் பாப்பம்மாள் ஆகியோர் மீது மோதியது. இதையடுத்து, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கோவை அரசு மருத்துவமனையில் அவர்களைச் சோதித்த மருத்துவர்கள் மாரி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறினர். பலத்த காயமடைந்த பாப்பம்மாளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து ஏற்படுத்திய வாகனம்
விபத்து ஏற்படுத்திய வாகனம்

இந்த நிலையில், அ.தி.மு.க சார்பில் நிவாரணப் பொருள் கொடுப்பதற்காக வந்த ஈச்சர் வேன் மோதிதான் விபத்து நடந்ததாகத் தகவல்கள் வெளியாகின. இதைத்தொடர்ந்து, உயிரிழந்த மாரிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கோவை தி.மு.க புறநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சி.ஆர்.ராமசந்திரன் உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள் நேற்று காலை கரடிமடைக்கு சென்றனர். ஆனால், அவர்களை போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றுவிட்டனர்.

இதனால், தி.மு.க மாநகர கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக், மாநகர மேற்கு மாவட்ட பொறுப்பாளர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட தி.மு.க-வினர் விடுவிக்கப்பட்டனர். இதுதொடர்பாக, கோவை தி.மு.க-வின் நான்கு மாவட்ட பொறுப்பாளர்களும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ``உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி சார்பில் நேற்றுமுன்தினம் இரவு அந்தப் பகுதியில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன.

தி.மு.க-வினர்
தி.மு.க-வினர்

பொருள்கள் குறைவாக இருந்ததால், அந்தப் பகுதி மக்கள் அனைவருக்கும் பொருள்கள் வழங்கவேண்டுமென கேட்டுள்ளனர். இப்படியாக கூட்டம் கூடிய நிலையில், நிவாரணப் பொருள்களை ஏற்றி வந்த வாகனத்தின் ஓட்டுநர் குடிபோதையில் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் இயக்கியுள்ளார். அதனால்தான் விபத்து ஏற்பட்டுள்ளது.

அ.தி.மு.க-வினர் அவர்களது குடும்பத்தை மிரட்டி வருகின்றனர். அதனால்தான், இன்று அங்கு தி.மு.க-வினர் சென்றனர். ஆனால், அமைச்சர் வேலுமணியின் ஏவல்துறையாக செயல்படும் காவல்துறை அவர்களைக் கைது செய்தது. தி.மு.க-வினர் மீது தொடர்ந்து பொய் வழக்கு போடுவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்” என்று கூறியுள்ளனர். மேலும், ஊரடங்கை மீறி கூட்டம் கூட்டி, விதிமுறைகளை மீறிய அமைச்சர் வேலுமணி உள்ளிட்ட அ.தி.மு.க-வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை போலீஸ் எஸ்.பி-யிடம் தி.மு.க-வினர் மனுவும் அளித்துள்ளனர்.

ஆம்புலன்ஸ்
ஆம்புலன்ஸ்

இதுகுறித்து கோவை போலீஸ் எஸ்.பி சுஜித்குமாரிடம் கேட்டபோது, ``அது அ.தி.மு.க-வினரின் நிவாரணப் பொருள்கள் கொடுக்க சென்ற வண்டி என்பதுபோலதான் சொன்னார்கள். டிரைவர் மீதுதான் தவறு. அவர்மீது வழக்கு போட்டுள்ளோம். உயிரிழந்தவரின் உடலை பிரேதப் பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்துவிட்டோம். அந்த விவகாரம் தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு டி.எஸ்.பி-யிடம் கேளுங்கள்” என்றார்.

பேரூர் டி.எஸ்.பி வேல்முருகனை தொடர்புகொண்டபோது, ``வழக்கு பதிவுசெய்து, கைதும் செய்யப்பட்டுவிட்டார். கூடுதல் விவரங்களுக்கு பேரூர் இன்ஸ்பெக்டரை தொடர்புகொள்ளுங்கள்” என்றார். பேரூர் இன்ஸ்பெக்டர் சுகவனத்தைத் தொடர்புகொண்டபோது, ``வழக்கு பதிவுசெய்தது உண்மைதான். ஆனால், டிரைவரைக் கைது செய்யவில்லை. அவர் ஓடிச்சென்றுவிட்டார்” என்றவரிடம் விபத்து தொடர்பான கூடுதல் விவரங்கள் கேட்டபோது, ``விவரங்கள் எல்லாம் நோட்டில் இருக்கிறது. நான் உங்களை அழைக்கிறேன்” என்று இணைப்பை துண்டித்துவிட்டார். அதன் பிறகு அவரிடமிருந்து நமக்கு அழைப்பு வரவில்லை.

மாரி சடலமாக
மாரி சடலமாக

சிறிது நேரத்தில் நாம் இன்ஸ்பெக்டரை மீண்டும் தொடர்புகொண்டாம். அவர் நம் அழைப்பை ஏற்கவில்லை. இதனிடையே, கரடிமடை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு மர்ம நபர்கள் கற்களை வீசியதில் பேரூர் இன்ஸ்பெக்டர் சுகவனம் மற்றும் கான்ஸ்டபிள் சென்தட்டி ஐயன் ஆகியோர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, போலீஸார் அவர்கள் மீது தடியடி நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த கட்டுரைக்கு