Published:Updated:

`அடிதடி, வன்முறை; மண்டை உடைப்பு!' - புதுச்சேரி மக்களைப் பதறவைத்த தனியார் கல்லூரி மாணவர்கள்

வன்முறை
வன்முறை

புதுச்சேரி தனியார் கல்லூரி மாணவர்கள் நடுரோட்டில் கார் கண்ணாடியை உடைத்தும், கோஷ்டிகளாக மோதிக்கொண்டும் நடத்திய வன்முறை வெறியாட்டம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி, வில்லியனூரில் அமைந்திருக்கும் ஆச்சாரியா கல்விக் குழுமத்தில், பள்ளிகள், கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. சுமார் 3,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் இங்கு பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகள் ஒரே வளாகத்தில் இயங்கி வருகின்றன.

ஆச்சார்யா கல்லூரி வளாகம்
ஆச்சார்யா கல்லூரி வளாகம்

இங்கு பொறியியல் கல்லூரியில் சிவில் பிரிவில் இறுதியாண்டு படிக்கும் மாணவர் ஒருவரை, கலைக் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் படிக்கும் மாணவர் ஒருவர் சக மாணவிகள் முன்னிலையில் அவமானபடுத்திப் பேசியதாகக் கூறப்படுகிறது.

அதில் கோபமடைந்த பொறியியல் கல்லூரி மாணவர், தனது கல்லூரி மாணவர்களிடம் கூற அவர்கள் கோஷ்டியாக வந்து, கலைக்கல்லூரி மாணவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து அந்த மாணவருக்கு ஆதரவாக கலை அறிவியல் மாணவர்களும் வர, இரு தரப்பினருக்குமிடையே வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்பட்டது.

கோஷ்டிகளாக மோதிக்கொள்ளும் மாணவர்கள்
கோஷ்டிகளாக மோதிக்கொள்ளும் மாணவர்கள்

சிறிது நேரத்தில் இருதரப்பு மாணவர்களும் கோஷ்டிகளாகப் பிரிந்து ஒருவரையொருவர் கற்கள் மற்றும் கட்டைகள் போன்றவற்றால் கடுமையாகத் தாக்கிக்கொண்டனர். அதில் சில மாணவர்களுக்கு மண்டை உடைந்த நிலையில், பலருக்குக் கை, கால் என உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டது.

இந்த அடிதடியால் அங்கிருந்த மாணவர்களும் ஆசிரியர்களும் தலைதெறிக்க ஓடியதால் கல்லூரி வளாகம் கலவர பூமியாக மாறியது. சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு கலவரம் முடிவுக்கு வந்த நிலையில், அடிபட்ட மாணவர்களை ஆசிரியர்கள் காரில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனை நோக்கிச் சென்றனர். அப்போதும் கோபம் தணியாத ஒரு பிரிவு மாணவர்கள், அந்த காரை கோட்டை மேடு என்ற பகுதியில் வழிமறித்து, அதிலிருந்த மாணவர்களைத் தாக்கத் தொடங்கினர்.

அடித்து நொறுக்கப்படும் கார்
அடித்து நொறுக்கப்படும் கார்

அதனால் அதிலிருந்த மாணவர்கள் படுகாயங்களுடன் சாலையில் இறங்கி ஓடத் தொடங்கினர். ஆனாலும் அவர்களை விடாமல் துரத்தித் தாக்கியதுடன், அந்த காரையும் அடித்து நொறுக்கினர். திடீரென அரங்கேறிய இந்தச் சம்பவத்தால் அங்கிருந்த பொதுமக்கள் உயிர் பயத்தில் அலறியடித்துக்கொண்டு ஓடினர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வில்லியனூர் காவல்துறையினர் சென்றதால், வன்முறையில் ஈடுபட்ட மாணவர்கள் தப்பி ஓடினர். அதையடுத்து அடிபட்ட மாணவர்கள் கதிர்காமம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து இன்று கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. மாணவர்கள் மோதலில் பொதுமக்களின் வாகனங்களும் சேதமடைந்தன.

தாக்கிக்கொள்ளும் மாணவர்கள்
தாக்கிக்கொள்ளும் மாணவர்கள்

கல்லூரி வளாகம் மங்கலம் காவல் நிலைய கட்டுப்பாட்டுக்குள்ளும், கோட்டைமேடு பகுதி வில்லியனூர் காவல்நிலைய கட்டுப்பாட்டுக்குள்ளும் வருகிறது. ஆனால், பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த வன்முறை தொடர்பாக இரு காவல் நிலையங்களிலும் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.

ஆச்சார்யா கல்விக் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் அரவிந்தனிடம் இதுகுறித்து பேசியபோது, ``இரண்டு மாணவர்கள் கோஷ்டியாகப் பிரிந்து தங்களுக்குள் மோதிக் கொண்டனர். அவர்களுக்கு ஆதரவாக அவர்களது சகோதரர்களும் வந்துவிட்டனர். இந்தப் பிரச்னை குறித்து கல்லூரித் தரப்பிலிருந்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. மாணவர்களுக்கிடையில் நடைபெற்ற மோதல் வெளியில் சென்றதும் அவர்களது நண்பர்களும் இணைந்துகொண்டனர். சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களிடம் நாளை விசாரணை நடைபெற இருக்கிறது” என்றார்.

ஆச்சர்யா கல்விக் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் அரவிந்தன்
ஆச்சர்யா கல்விக் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் அரவிந்தன்

இதுகுறித்து விளக்கம் கேட்க வில்லியனூர், மங்கலம் காவல் நிலையங்களின் வட்ட ஆய்வாளர் பழநிவேலை தொடர்புகொண்டோம்.``மாணவர்களின் கோஷ்டி மோதலால் இரு தரப்பினருமே காயமடைந்திருக்கின்றனர். மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதால் கல்லுரி நிர்வாகமும் பெற்றோர்களும் புகார் அளிக்கவில்லை. இருதரப்புமே சமாதானமாகப் போக விரும்பியதால் வழக்குப் பதிவு செய்யவில்லை” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு