Election bannerElection banner
Published:Updated:

சர்ச்சையில் சிக்கிய பெண் இன்ஸ்பெக்டர்! - ஆயுதப்படைக்கு மாற்றிய வேலூர் எஸ்.பி

எஸ்.பி செல்வகுமார்
எஸ்.பி செல்வகுமார்

சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் பணிபுரிந்துவரும் காவலர்களும் இன்ஸ்பெக்டருக்கு எதிராக மேலிடத்தில் புகார் வாசித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

வேலூர் மாநகர், சத்துவாச்சாரி காவல் நிலையத்தில், இன்ஸ்பெக்டராகப் பணியாற்றிவந்தவர் புனிதா. இவர்மீது பல்வேறு புகார்கள் காவல்துறை வட்டாரத்தில் வாசிக்கப்படுவதாகத் தகவல் வெளியானது. காவல் நிலையத்துக்கு வரும் புகார்தாரர்களின் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பேரம் பேசியதாகவும், தனக்குக் கீழுள்ள மற்ற காவலர்களை மரியாதைக் குறைவாக நடத்தியதாகவும் உயரதிகாரிகளிடம் புனிதாமீது குற்றச்சாட்டுகள் பறந்ததாகச் சொல்லப்படுகிறது.

இன்ஸ்பெக்டர் புனிதா
இன்ஸ்பெக்டர் புனிதா

சில தினங்களுக்கு முன்னர் திருட்டு வழக்கில் தொடர்புடைய ஏழு பேரை ஸ்பெஷல் டீம் ஃபோர்ஸ் பிடித்ததாகக் கூறப்படுகிறது. அந்தக் கும்பல் ஏற்கெனவே சத்துவாச்சாரி இன்ஸ்பெக்டர் புனிதாவிடம் சிக்கியதாகவும், ஆனால் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்காமல் இன்ஸ்பெக்டர் விட்டுவிட்டதாகவும் காவல்துறை வட்டாரத்திலிருந்து தகவல்கள் கசிந்தன.

இது தொடர்பாக, உயரதிகாரிகளின் விசாரணையும் நடந்துவந்திருக்கிறது. விசாரணையின்போது சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் பணிபுரிந்துவரும் காவலர்களும் இன்ஸ்பெக்டருக்கு எதிராக மேலிடத்தில் புகார் வாசித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

எஸ்.பி செல்வகுமார்
எஸ்.பி செல்வகுமார்

இன்ஸ்பெக்டர் புனிதா குறித்துச் சில ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகின. இந்தநிலையில், எஸ்.பி செல்வகுமார் உத்தரவின்பேரில் சத்துவாச்சாரி இன்ஸ்பெக்டர் புனிதா அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். அவர் சட்டம்-ஒழுங்கு கவனிக்கும் இன்ஸ்பெக்டர் என்பதால், ஆயுதப்படையிலிருந்து விரைவில் வேறு ஏதேனும் காவல் நிலையத்தில் பணியமர்த்தப்படலாம் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு