Published:Updated:

`சட்டப்படி அந்தத் திருமணம் செல்லாது!'- கறார் காட்டும் மனைவி; 2 குழந்தைகளோடு போராடும் முதல் கணவர்

``ரமேஷ்குமாரும் நானும் சேர்ந்து வாழ்ந்து குழந்தை பெற்றிருந்தாலும் அந்தத் திருமணம் செல்லாது. சட்டப்படி பார்த்தால் எனது தாயைத்தான் ரமேஷ்குமார் திருமணம் செய்திருக்கிறார்.''

ரமேஷ்குமார், பிரீத்தி மற்றும் குழந்தைகள்
ரமேஷ்குமார், பிரீத்தி மற்றும் குழந்தைகள்

கன்னியாகுமரி மாவட்டம், முளகுமூடு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார். சமையல் தொழிலாளியான இவருக்கும் கேரள மாநிலம் கோவளம் பகுதியைச் சேர்ந்த பிரீத்தி என்பவருக்கும் கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது. முறைப்படி இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்துள்ளது. திருமணமாகி பத்து வருடங்கள் ஆன நிலையில், அவர்களுக்கு ஒன்பது வயதில் ஸ்ரீவிஷ்ணு என்ற மகனும் நான்கு வயதில் சம்ஸ்கிரிதி என்ற மகளும் உள்ளனர்.

அகிலுடன் பிரீத்தி
அகிலுடன் பிரீத்தி

இதற்கிடையில், ரமேஷ்குமார் கடந்த 2017-ம் ஆண்டு சவுதி அரேபியாவுக்கு சமையல் வேலைக்குச் சென்றார். அப்போது மனைவி பிரீத்தி மற்றும் குழந்தைகளை முளகுமூட்டில் ஒரு வாடகை வீட்டில் தங்கவைத்துவிட்டுச் சென்றுள்ளார். வெளிநாட்டிலிருந்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வீட்டுக்குத் திரும்பியுள்ளார். அப்போது வீடு பூட்டப்பட்டிருந்தது. வீட்டுக்குள் இரண்டு குழந்தைகள் இருந்துள்ளனர். ரமேஷ் குமார் வெளியில் காத்திருந்திருக்கிறார்.

இரவு நேரத்தில் பிரீத்தி வீட்டுக்கு வந்து சேர்ந்திருக்கிறார். `எங்கே போய்விட்டு வருகிறாய்?' என ரமேஷ்குமார் கேட்கவும், இருவருக்குள்ளும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்னை வெடித்தது. `இனி உன் சவகாசமே தேவையில்லை' எனக்கூறி வீட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார் பிரீத்தி.

என்ன செய்வது எனத் தெரியாமல் கையைப் பிசைந்த ரமேஷ்குமார் மனைவியை சேர்த்து வைக்குமாறு தக்கலை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். போலீஸார் இருவரையும் காவல்நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்தினர். கணவனும் பிள்ளைகளும் தேவையில்லை என்றும், தனியாக வாழ விரும்புவதாகவும் கூறியிருக்கிறார் பிரீத்தி.

அகிலை திருமணம் செய்யும் பிரீத்தி
அகிலை திருமணம் செய்யும் பிரீத்தி

விரக்தியுடன் வீட்டுக்குச் சென்ற ரமேஷ்குமார் அவ்வப்போது பிரீத்தியை போனிலும் வாட்ஸ்அப் மெசேஜ் மூலமும் வீட்டுக்கு வருமாறு அழைத்திருக்கிறார். தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்த பிரீத்தி ஒருகட்டத்தில் ஒரு புகைப்படம் மற்றும் சில பேப்பர்களை வாட்ஸ்அப்பில் அனுப்பியிருக்கிறார். அதில் முளகுமூடு பகுதியைச் சேர்ந்த அகில் என்ற வாலிபரை 28.10.2019 அன்று தேவாலயம் ஒன்றில் வைத்து திருமணம் செய்துகொண்ட புகைப்படமும, அகிலை திருமணம் செய்ததற்கான திருமண ஒப்பந்தப் பத்திரமும் இருந்ததைக் கண்டு ரமேஷ்குமார் அதிர்ச்சியடைந்தார்.

தன் மனைவி வேறு திருமணம் செய்துகொண்டதாக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார் ரமேஷ்குமார்.

இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தியபோது பிரீத்தி புது குண்டு ஒன்றைப் போட்டார். ``ரமேஷ்குமார் என்னைத் திருமணம் செய்யவில்லை. அவர் செய்த பதிவுத் திருமணத்தில் எனது பெயர் இல்லை. என் தாய் சிந்துவின் பெயர்தான் உள்ளது. எனவே, ரமேஷ்குமாருக்கும் எனக்கும் திருமணம் நடந்தது செல்லாது" என ஒரே போடாகப் போட்டார் பிரீத்தி.

ரமேஷ்குமார், பிரீத்தி மற்றும் குழந்தைகள்
ரமேஷ்குமார், பிரீத்தி மற்றும் குழந்தைகள்

ஷாக் ஆன போலீஸார் திருமண பதிவுப் பத்திரத்தைப் பார்த்துவிட்டு, ரமேஷ்குமாரிடம் விசாரித்தனர். ரமேஷ்குமாரும் உண்மையை ஒப்புக்கொண்டார். ``நான் பிரீத்தியை திருமணம் செய்யும்போது அவருக்கு 15 வயது. குழந்தைத் திருமணம் பிரச்னையை ஏற்படுத்தும் என்பதால். திருமணப் பதிவின்போது பிரீத்தியின் தாய் பெயர், அவரது ஆவணங்கள், புகைப்படங்களைக் கொடுத்தார்கள். ஆனால், பிரீத்தியை திருமணம் செய்ததால் எனக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். என் குழந்தைகளுக்காக மனைவியை என்னோடு சேர்த்து வையுங்கள்" என்றார் கண்ணீருடன்.

நிலைமையை உணர்ந்த நித்திரவிளை போலீஸார் மீண்டும் பிரீத்தியை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ``ரமேஷ்குமாரும் நானும் சேர்ந்து வாழ்ந்து குழந்தை பெற்றிருந்தாலும் அந்தத் திருமணம் செல்லாது. சட்டப்படி பார்த்தால் எனது தாயைத்தான் ரமேஷ்குமார் திருமணம் செய்திருக்கிறார். சட்டப்படி நான் அகிலை திருமணம் செய்திருக்கிறேன். அகிலுடன் செய்துகொண்ட திருமணம்தான் சட்டப்படி செல்லும். இனியும் ரமேஷ்குமார் பிரச்னை செய்தால் சட்டப்படி பார்த்துக்கொள்வோம்" எனக் கறாராக கூறியிருக்கிறார் பிரீத்தி.

நான் பிரீத்தியை திருமணம் செய்யும்போது அவருக்கு 15 வயது. குழந்தை திருமணம் பிரச்னையை ஏற்படுத்தும் என்பதால். திருமணப் பதிவின்போது பிரீத்தியின் தாயின் பெயர், அவரது ஆவணங்கள், புகைப்படங்களைக் கொடுத்தார்கள்.
ரமேஷ் குமார்

இதற்கு என்ன பதில் சொல்வது, இந்தப் பிரச்னையை எப்படிக் கையாள்வது எனத் தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றது காவல்துறை.