Published:Updated:

`தலைக்கேறிய கஞ்சா போதை..' - குன்னூரில் மகனால் தந்தைக்கு நேர்ந்த சோகம்

தந்தையை வெட்டிய மகன்
தந்தையை வெட்டிய மகன்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள வெலிங்டன் போகித்தெரு பகுதியில் போதையில் தந்தையைக் கத்தியால் வெட்டிய மகனைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள வெலிங்டன் போகி தெரு பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். கூலித்தொழிலாளி. இவரது மகன் ராஜாராம் போதை பழக்கத்துக்கு அடிமையானவர். நாள்தோறும் போதையில் குடும்பத்தினருடன் சண்டையிட்டு வந்துள்ளார்.

உள்ளூர் மக்கள்
உள்ளூர் மக்கள்

இந்த நிலையில் நேற்றும் போதையில் சுயநினைவற்று வீட்டிற்கு வந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரின் தந்தை மகனைக் கண்டித்துள்ளார். இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட வீட்டில் வைத்திருந்த பெரிய அரிவாளால் தனது தந்தையை வெட்டியுள்ளார். இதில் அவரது காலில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது.

அதே கத்தியுடன் வெளியே வந்து தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களையும் சேதப்படுத்தியுள்ளார்.

சம்பவ இடத்தில் காவல்துறையினர்
சம்பவ இடத்தில் காவல்துறையினர்

கையில் அரிவாளுடன் வாசலில் நின்று மிகவும் மூர்க்கத்தனமாக நடந்துள்ளார். இதனால் இவர் அருகில் செல்லவே அக்கம்பக்கத்தினர் அஞ்சி காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் வந்து பார்த்தபோது தந்தை மகன் இருவருமே மயக்கமடைந்த நிலையில் வாசலில் விழுந்து கிடந்துள்ளனர்.

இருவரையும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்று, தந்தையைத் தாக்கிய மகன் மீது வெலிங்டன் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த தந்தை ஊட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

`ஊரடங்கால் களைகட்டிய கஞ்சா வியாபாரம்!' -சுற்றிவளைத்த தனிப்படை காவலருக்கு நேர்ந்த சோகம்

இதுகுறித்து உள்ளூர் மக்கள், ``இந்தப் பகுதியில் பல இளைஞர்கள் கஞ்சா, மது உள்ளிட்ட போதைக்கு அடிமையாகி உள்ளனர். இதனால் பல குடும்பங்கள் நிம்மதியிழந்து தவிக்கின்றன. பெத்த மகனே தந்தையை அரிவாளால் விரட்டி வெட்டும் கொடுமை நடைபெற்றுள்ளது. போதை தலைக்கேறிய நிலையில் அருகில் இருந்த கார் கண்ணாடிகளையும் உடைத்தார். இந்தப் பகுதியில் கஞ்சா விற்பனையை ஒழிக்க காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு