Published:Updated:

பசு குண்டர்கள் தாக்குதல்... பிசுபிசுத்துப்போன வழக்கு... காங். இரட்டை வேடம்?

விகடன் டீம்

போதிய ஆதாரங்கள் இல்லாததால், கைதுசெய்யப்பட்ட ஒன்பது பேரில் ஆறு பேரை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

பசு குண்டர்கள் தாக்குதல்...
பசு குண்டர்கள் தாக்குதல்...

வீடியோ ஆதாரங்கள், இறந்தவரின் மரண வாக்குமூலம், 40 சாட்சிகள்... இவ்வளவு இருந்தும் ராஜஸ்தானைச் சேர்ந்த பெஹ்லுகான் என்பவர் பசு குண்டர்களால் கொலைசெய்யப்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட வழக்கில், அரசு தரப்பில் குற்றம் நிரூபிக்கப்படவில்லை. இதனால், குற்றம்சாட்டப்பட்ட ஆறு பேரும் விடுதலை செய்யப்பட்டிருக் கிறார்கள். இது, கும்பல் கொலைகளைத் தடுக்க ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு கொண்டுவந்த சிறப்புச் சட்டத்தை கேள்விக்குறி ஆக்கியதுடன், வழக்கு விசாரணையில் காங்கிரஸ் அரசு தரப்பில் செய்யப்பட்ட குளறுபடிகளையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது. https://bit.ly/2P6R26L

மருத்துவமனையில் பெஹ்லுகான்
மருத்துவமனையில் பெஹ்லுகான்

கடந்த 2017 ஏப்ரல் 1-ம் தேதி பெஹ்லுகான் மற்றும் அவரின் இரு மகன்கள் பசு மாடுகளை ஒரு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு ஹரியானா விலிருந்து ஜெய்ப்பூருக்குச் சென்றுகொண்டிருந் தனர். ஆல்வார் மாவட்டம், பெஹ்ரார் என்னும் இடத்தில் அவர்களை வழிமறித்த பசு குண்டர்கள் கூட்டம், மூவரையும் கடுமையாகத் தாக்கியது.

பசு
பசு

அடுத்த இரண்டே நாள்களில் பெஹ்லுகான் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். அவர் தாக்கப்படும் வீடியோ, நாடு முழுவதும் வைரலாகப் பரவி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த வழக்கு விசாரணை, ஆல்வார் மாவட்ட கூடுதல் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. இதில்தான் போதிய ஆதாரங்கள் இல்லாததால், கைதுசெய்யப்பட்ட ஒன்பது பேரில் ஆறு பேரை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. மற்ற மூன்று பேரும் சிறார்களாக இருப்பதால், அவர்களைச் சிறார் நீதிமன்றத்தில் விசாரிக்க உத்தரவிட்டது. இந்த வழக்கை போலீஸ் விசாரணை செய்த விதம், மரண வாக்குமூலம் பதிவுசெய்ததில் நடந்த தவறுகள், வீடியோ ஆதாரங்களை தடவியல் ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பாதது, அடையாள அணிவகுப்பு நடத்தாதது என்று பல்வேறு குளறுபடிகளைச் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், காவல்துறையைக் கடுமையாக விமர்சித்துள்ளது.

பெஹ்லுகான் தாக்கப்பட்ட காலகட்டத்தில் நாடு முழுவதுமே பலர் பசு குண்டர்களால் தாக்கப்பட்டனர். குறிப்பாக, ராஜஸ்தானில் நடந்த சட்டசபைத் தேர்தலில் இந்தப் பிரச்னை எதிரொலித்தது. பிரசாரத்தின் போது எதிர்க் கட்சியான காங்கிரஸ், 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதுபோன்ற தாக்குதல் களைத் தடுக்க தனிச்சட்டம் கொண்டுவருவோம்' என்றது. அதேபோல ஆட்சி அமைத்ததும் அடித்துக் கொல்லும் குற்றத்துக்கு ஆயுள்தண்டனையும், ஐந்து லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கக்கூடிய வகையில் புதிய சட்டத்தை அமல்படுத்தியது. ஆனால், அதே காங்கிரஸ் ஆட்சி யில்தான் பெஹ்லுகானின் இரு மகன்களும் பசுவதைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப் பட்டார்கள். இதுவே காங்கிரஸ் அரசு இந்த விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறதா என்கிற சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது.

- ஜூனியர் விகடனின் வெளியாகியுள்ள இந்தக் கட்டுரையின் முழுமையான வடிவத்தை வாசிக்க > பசு குண்டர்கள் தாக்குதல்... பிசுபிசுத்துப்போன வழக்கு! - இரட்டை வேடம் போடுகிறதா காங்கிரஸ்? https://www.vikatan.com/social-affairs/judiciary/rajastan-pehlu-khan-lynching-case

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/