மதுரையில் இயங்கி வரும் பிரபல கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான 10 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு பல கோடி ரூபாய் ரொக்கத்தையும், சொத்து ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மதுரை மாவட்டத்தில் கிளாட்வே, ஜெயபாரத், அன்னைபாரத், கிளாட்வே கிரீன் சிட்டி என நான்கு கட்டுமான நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
சாதாரண நிலையிலிருந்த மதுரையைச் சேர்ந்த அழகர், முருகன், ஜெயக்குமார், சரவணகுமார், செந்தில்குமார் ஆகியோர் பங்குதாரர்களாக இருந்து மேற்கண்ட கட்டுமான நிறுவனங்களை நடத்தி வருகிறார்கள். பல இடங்களில் புதிய குடியிருப்புகளை ஏற்படுத்தி விற்பனை செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் பல கட்டுமான நிறுவனங்கள், அரசு ஒப்பந்ததாரர் இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். மதுரையிலுள்ள கிளாட்வே, ஜெயபாரத், அன்னைபாரத், கிளாட்வே கிரீன் சிட்டி நிறுவனங்களுக்குச் சொந்தமான 10-க்கும் மேற்பட்ட வீடு மற்றும் அலுவலகங்களில் தொடர்ந்து சோதனை செய்து வருகிறார்கள்.
அதிக அளவில் சொத்துகளை வாங்கி குவித்தது, முறையாக வருமான வரி செலுத்தாதது, அரசியல்வாதிகள், பெரிய புள்ளிகளின் மறைமுக முதலீடு போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்ததன் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டதாகச் சொல்லப்பட்டது.

வில்லாபுரத்திலுள்ள இந்நிறுவனத்தின் பங்குதாரர் ஒருவர் வீட்டில் மட்டும் ரொக்கமாக 27 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. நிறுவனத்தின் பெயரில் ஒரே நேரத்தில் 13 ஆடம்பரக்கார்களை வாங்கியுள்ளனர். 50-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இச்சோதனையில் ஈடுபட்டனர். இன்றும் சோதனை தொடர்கிறது.
இதேபோல் அரசு ஒப்பந்ததாரரான முருகவேல் என்பவருக்கு சொந்தமான ஆர்.ஆர் கட்டுமான நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களிலும் 30-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

சாதாரண ஒப்பந்த வேலைகளைச் செய்து வந்த இந்நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளில் பல ஆயிரம் கோடி மதிப்பில் அரசு ஒப்பந்தங்களை எடுக்கும் அளவுக்கு வளர்ந்தது மட்டுமல்லாமல் வரி ஏய்ப்பிலும் ஈடுபட்டுள்ளது சோதனையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இதில் அரசியல் புள்ளிகள் முதலீடு செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. சோதனை முழுமையாக நிறைவு பெற்ற பின் கைப்பற்றப்பட்ட பணம், சொத்துகளின் மொத்த மதிப்பு தெரிய வரும்.