Published:Updated:

`என்கூட பேசு, நீ எனக்கு வேணும்!' - ஒருதலைக் காதலால் இளம் தாய்க்கு நேர்ந்த கொடுமை

Representational Image
Representational Image

ஒருதலைக் காதலால் இளம் தாய் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம், கடலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கடலூர் மாவட்டம், நெய்வேலி டவுன்ஷிப் 21-வது வட்டத்தைச் சேர்ந்தவர், ஜான் விக்டர். ராணுவ வீரரான இவர், மேற்கு வங்கத்தில் பணியாற்றிவருகிறார். இவரது மனைவி சிலோமி, தன் இரு குழந்தைகளுடன் 21-வது வட்டத்தில் தனியாக வசித்து வருகிறார். இவர், வடலூரிலுள்ள தனியார் வீடு கட்டும் நிறுவனத்தில் கடந்த ஒரு வருடமாக வேலை செய்து வந்திருக்கிறார். அதற்காக தினமும் நெய்வேலி டவுன்ஷிப்பிலி ருந்து வடலூருக்கு தனியார் பேருந்தில் செல்வது வழக்கம். அந்தப் பேருந்தில், குமராட்சியை அடுத்திருக்கும் அரசூர் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவர் நடத்துநராகப் பணியாற்றி வந்திருக்கிறார். தினமும் செல்லும் பேருந்து என்பதால் சுந்தரமூர்த்தியிடம் சிலோமி நட்புடன் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது.

மருத்துவமனையில் சிலோமி
மருத்துவமனையில் சிலோமி

அதேசமயம், திருமணமாகாதவரான சுந்தரமூர்த்தி, சிலோமியை ஒருதலையாகக் காதலித்து வந்திருக்கிறார். சலோமி பேருந்தில் ஏறியதும் காதல் பாட்டுகளைப் போடுவதும், அவரிடம் வலியச் சென்று பேசுவதுமாக இருந்த சுந்தரமூர்த்தி, ஒருகட்டத்தில் சிலோமியை அவரது அலுவலகம் வரை பின் தொடர்ந்து செல்ல ஆரம்பித்திருக்கிறார்.

கைது செய்யப்பட்ட சுந்தரமூர்த்தி
கைது செய்யப்பட்ட சுந்தரமூர்த்தி

அவரது நடவடிக்கைகளைக் கண்டு பயந்துபோன சிலோமி, அவரிம் பேசுவதைத் தவிர்த்திருக்கிறார். ஏன் என்னிடம் பேசவில்லை என்று கேட்ட சுந்தரமூர்த்தியிடம், ``என் கணவர் ராணுவத்தில் வேலை செய்கிறார். எங்களுக்கு ரெண்டு குழந்தைங்க இருக்காங்க. தினமும் நான் போற பஸ் கண்டக்டருங்கிறதால நானும் நட்பா பேசினேன். ஆனா, தப்பு தப்பா பேச ஆரம்பிக்கிறீங்க. அதனால இனிமே எங்கிட்ட பேசாதீங்க” என்று சிலோமி கூறியதாகச் சொல்கிறார்கள்.

அவரிடம் பேசுவதை நிறுத்திய சிலோமி, வழக்கமாக அந்தப் பேருந்தில் வேலைக்குச் சென்று வந்திருக்கிறார். சிலோமியின் செயல் சுந்தரமூர்த்திக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதால், அவரைக் கொலை செய்ய முடிவெடுத்திருக்கிறார். அதற்காக நேற்று முன் தினம் இரவே கேன் ஒன்றில் பெட்ரோலை வாங்கிய சுந்தரமூர்த்தி, அதைப் பேருந்தில் வைத்திருந்திருக்கிறார்.

வடலூர் காவல் நிலையம்
வடலூர் காவல் நிலையம்

வழக்கம்போல நேற்று காலை அந்தப் பேருந்தில் ஏறி வடலூரில் இறங்கி, தன் அலுவலகம் நோக்கிச் சென்ற சிலோமியை, பெட்ரோல் ஊற்றி தீ வைப்பதற்காக கேனுடன் பின் தொடர்ந்திருக்கிறார் சுந்தரமூர்த்தி. ஆனால் சிலோமி, அதற்குள் அலுவலகத்திற்குள் சென்றுவிட்டதாகத் தெரிகிறது.

`6 மணி நேரத்தில் 1,800 பேர் கொலை!'- அஸ்ஸாமைத் துரத்தும் நெல்லி படுகொலை #NellieMassacre

சிறிதுநேரத்தில், தான் வைத்திருந்த பெட்ரோல் கேனை அங்கு மறைத்து வைத்துவிட்டு, அலுவலகத்திற்குள் சென்று அங்கிருந்த ஊழியர்களிடம், தான் சிலோமியின் உறவினர் என்று கூறி அவரை அழைத்துவரும்படி கூறியிருக்கிறார். சிறிது நேரத்தில் வெளியே வந்த சிலோமி, அங்கு சுந்தரமூர்த்தி நின்றிருப்பதைப் பார்த்ததும் `நீங்க ஏன் இங்க வந்தீங்க” என்று அதிர்ச்சியுடன் கேட்டிருக்கிறார். அதற்கு ``எங்கிட்ட பேசு. நீ எனக்கு வேணும்” என்ற சுந்தரமூர்த்தியிடம்,``இப்படிலாம் பேசாதீங்க. இங்கிருந்து போங்க” என்று கோபமாகக் கூறியிருக்கிறார் சிலோமி.

Representational Image
Representational Image

உடனே, மறைத்துவைத்திருந்த பெட்ரோலை எடுத்து சிலோமியின் மீது ஊற்றிய சுந்தரமூர்த்தி, ``எனக்கில்லாத நீ உயிரோடவே இருக்கக் கூடாது” என்று கூறி தீ வைத்துள்ளார். உடல் முழுவதும் தீப்பிடித்த நிலையில், வலியால் அலறித் துடித்துள்ளார் சிலோமி. அதையடுத்து, அங்கிருந்தவர்கள் துணிகளைக் கொண்டு சலோமியின் மீது எரிந்த தீயை அணைத்து, 108 ஆம்புலன்ஸில் அவரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதேபோல அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்ற சுந்தரமூத்தியையும் வளைத்துப்பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவுசெய்து சுந்தரமூர்த்தியைக் கைது செய்த வடலூர் காவல்துறையினர், அவரிடம் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். சிலோமியின் தாயிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் இரு குழந்தைகளில் ஒன்று கைக்குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு