Published:Updated:

ஃபேஸ்புக்கில் நட்பு; பின்னர் காதல்... வீட்டுக்கு அழைத்தார்!- படத்தைக்காட்டி மாணவியை மிரட்டிய வாலிபர்

ஜி.சதாசிவம்

கடலூர் மாவட்டம், திட்டக்குடியில் சமூக வலைதளத்தில் அறிமுகமான பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபரைத் திட்டக்குடி போலீஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பாலமுருகன்
கைது செய்யப்பட்ட பாலமுருகன் ( எஸ்.தேவராஜன் )

தர்மபுரி மாவட்டம், மணலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி மகன் பாலமுருகன் (25), இவருக்கும் திட்டக்குடி பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும் ஃபேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் சாட்டிங் மூலம் நட்பாகப் பழகி வந்த நிலையில் பின்னர் அது காதலாக மாறியுள்ளது. பாலமுருகன் அழைத்ததைத் தொடர்ந்து அவரது ஊருக்கு இளம்பெண் சென்றுள்ளார்.

திட்டக்குடி காவல் நிலையம்
திட்டக்குடி காவல் நிலையம்
எஸ்.தேவராஜன்

அங்கு பாலமுருகன் அவரிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். அங்கிருந்து தப்பி ஊருக்கு வந்த இளம்பெண் இது குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். அதன் பின்பு, பாலமுருகன் குறித்து பெண்ணின் பெற்றோர் விசாரித்ததில் அவர் சரியில்லாத ஆள் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் பாலமுருகன் அந்தப் பெண்ணை செல்போன் மூலம் தொடர்புகொண்டு, `தன்னை திருமணம் செய்துகொள்ளாவிட்டால் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிடுவேன்' என மிரட்டியுள்ளார்.

இது குறித்த அந்த இளம்பெண் திட்டக்குடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீ பிரியா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். பின்னர், சம்பந்தப்பட்ட வாலிபரை செல்போனில் தொடர்புகொண்ட போலீஸார் திட்டக்குடிக்கு வருமாறு அழைத்துள்ளனர். இதையடுத்து திட்டக்குடி வந்த பாலமுருகனை போலீஸார் கைது செய்தனர். இது குறித்து போலீஸாரிடம் கேட்டபோது, "பாதிக்கப்பட்ட பெண் கல்லூரியில் படித்து வருகிறார். இவரும் பாலமுருகனும் ஃபேஸ்புக்கில் நண்பர்களாகி ஒரு வருடமாக நட்பாகப் பழகி வந்த நிலையில் பின்னர் காதலித்துள்ளனர். தன்னுடைய ஊருக்கு அந்தப் பெண்ணை பாலமுருகன் அழைத்துள்ளார்.

கைது செய்யப்பட்ட பாலமுருகன்
கைது செய்யப்பட்ட பாலமுருகன்
எஸ்.தேவராஜன்
Vikatan

நம்பிச் சென்ற அந்தப் பெண்ணிடம் பாலமுருகன் தவறாக நடக்க முயன்றுள்ளார். உடனடியாக அங்கிருந்து ஊருக்கு வந்துவிட்டார். பின்னர் பாலமுருகனின் பெற்றோர் அந்தப் பெண்ணின் பெற்றோரிடம் பெண் கேட்டுள்ளனர். அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. அந்தப் பெண்ணும் அவரைத் தவிர்க்க ஆரம்பித்ததால் பாலமுருகன் தனியாக ஒரு ஃபேஸ்புக் ஐ.டி. ஆரம்பித்து இருவரும் உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை அந்தப் பெண் கேட்டதற்கு திருமணம் செய்துகொள்ள சொல்லி மிரட்டியுள்ளார். அதன் பின்பு, அந்தப் பெண் கொடுத்த புகாரின் பேரில் பாலமுருகனிடம் நைசாகப் பேசி இங்கு வர வைத்தோம். அவரிடம் விசாரணை நடத்தியதில் உண்மை தெரியவந்தது. இதையடுத்து வழக்கு பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தோம்" என்றனர்.