Published:Updated:

`நான் செய்த தவற்றை யாரும் செய்யாதீங்க ப்ளீஸ்!’- மன்னிப்புக் கேட்ட இன்ஸ்டாகிராம் வைரல் சிறுமி

இன்ஸ்டாகிராம் சிறுமி
இன்ஸ்டாகிராம் சிறுமி

``தெரியாமல் இந்தத் தவற்றை நான் செய்துவிட்டேன். அது என்னுடன் முடிந்துவிடட்டும். உங்களுக்கு நானே உதாரணம். இனிமேல் யாரும் இப்படி செய்யாதீர்கள். நானும் இனிமேல் வீடியோக்களை பதிவிட மாட்டேன்.” - இன்ஸ்டாகிராம் வைரல் வீடியோ சிறுமி.

இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா தொற்று தீவிரமடைந்து இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்தது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளை காலவரையின்றி மூட உத்தரவிட்ட மத்திய அரசு, மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்களை எடுக்கக் கல்வித்துறைக்கு உத்தரவிட்டது. மாணவர்களின் பாதுகாப்பு கருதி எடுக்கப்பட்ட இந்த முடிவானது, மாணவர்களிடையே பல்வேறு பாதிப்புகளையும் உண்டாக்கியது. அதற்கான போதுமான வசதிகள் இல்லாத மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள முடியாமல் சிரமப்பட்டனர். ஆனால், இன்னொருபுறமோ தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்த வாய்ப்பிருந்த மாணவர்கள், இந்த சூழ்நிலை தந்த சுதந்திரத்தை சாதகமாக எடுத்துக்கொண்டு தங்கள் பெரும்பாலான நேரத்தை மொபைலிலும் இணையத்திலேயேயுமே கழித்தனர்.

மன்னிப்பு கேட்ட சிறுமி
மன்னிப்பு கேட்ட சிறுமி

குறிப்பாக, சமூக வலைதளங்களில் கிடைக்கும் லைக்குகள், கமென்டுகளை தங்களுக்கான அங்கீகாரமாக நினைக்கும் அவர்கள், மெய்நிகர் உலகத்தின் ஆழம் தெரியாமல் சிக்கிக்கொள்கிறார்கள். பெரும்பாலான பெற்றோர்களுக்கும் இணையம் குறித்த போதுமான விழிப்புணர்வு இல்லாததால், தங்கள் குழந்தைகள் செய்யும் ஆபத்தான செயல்களை ரசித்து ஊக்குவிக்கின்றனர். அப்படி பெற்றோர்களின் ஆதரவுடன் புகழுக்கும் லைக்குகளுக்கும் ஆசைப்பட்டு சமூக வலைதளத்தில் வீடியோக்களை வெளியிட்டு வந்த சிறுவனையும் சிறுமியையும் மீட்டு நடவடிக்கை எடுத்திருக்கிறது குழந்தைகள் நல பாதுகாப்புக் குழு.

சென்னை, கோடம்பாக்கத்தைச் சேர்ந்த அந்தச் சிறுவனுக்கு 16 வயது. சினிமா பாடல்களை டப் செய்து நடித்த வீடியோக்களை தொடர்ந்து பதிவேற்றம் செய்து வருபவர். அதேபோல கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பத்தை அடுத்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியும் தனது வீடியோக்களை ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வந்திருக்கிறார். இருவரும் இன்ஸ்டாகிராமில் நட்பாகி லைக், கமென்ட்களைப் பரிமாறிக்கொண்டனர்.

இன்ஸ்டாகிராம்
இன்ஸ்டாகிராம்

ஒரே வாரத்தில் தன் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அந்தச் சிறுவன் சிறுமியின் வீட்டுக்குச் செல்ல, சிறுமியின் பெற்றோரும் அவர்களுக்கு தடபுடல் விருந்து வைத்திருக்கின்றனர். அன்றைய தினமே சிறுமியைக் காதலிப்பதாகக் கூறிய அந்தச் சிறுவன், அவருக்கு ஒரு மோதிரத்தை அணிவித்திருக்கிறார். அதன் பிறகு இருவரும் ஜோடியாக நடித்த காதல் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யத் தொடங்கினர்.

ஒருகட்டத்தில் தாங்கள் இருவரும் காதலிப்பதாகவும், தங்கள் காதலுக்கு பெற்றோர்கள் ஒப்புக்கொண்டதாகவும் சமூக வலைதளத்தில் இந்தச் சிறுவர்கள் தெரிவித்து, பதற்றத்தை ஏற்படுத்தினர். அதேபோல, தன் காதலியின் பெயரை பச்சை குத்திக்கொண்டதாகச் சிறுவன் கூறியதில் அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள், சிறுவனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ரிப்போர்ட் அடித்து முடக்கினார்கள். அதற்காக அந்தச் சிறுவனும் சிறுமியும் அழும்போது, சிறுவனின் அம்மா, `மருமகளே அழாதே’ என்று தேற்றிய காட்சிகளும் அவர்களின் புதிய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாயின. மேலும், சிறுமியின் தாயை `அத்தை’ என்றே அழைத்து வந்திருக்கிறார் சிறுவன்.

இன்ஸ்டாகிராம்
இன்ஸ்டாகிராம்

பதின்பருவ வயதில் ஏற்படும் ஈர்ப்பை காதல் என்று நினைத்துக்கொண்ட இந்த இருவருக்கும், பெற்றோர்களும் உறுதுணையாக இருந்ததுதான் கொடுமையின் உச்சம். சமூக வலைதளங்களில் இவர்களின் வைரல் வீடியோக்களைப் பார்த்த பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவின் எஸ்.பி ஜெயஸ்ரீ மற்றும் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவி சரண்யா, பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராதிகா உள்ளிட்டவர்கள், சம்பந்தப்பட்ட சிறுமியின் ஐ.பி முகவரி மூலம், அவரது முகவரியைக் கண்டுபிடித்து நேரில் சென்று விசாரணை நடத்தியிருக்கின்றனர்.

அதையடுத்து, தேவைப்பட்டால் சிறுமியை காப்பகத்தில் தங்க வைப்போம் என்று அவர்கள் எச்சரிக்க, தொடர்ந்து, `இனிமேல் இப்படிச் செய்ய மாட்டேன்' என்று மன்னிப்பு கேட்டிருக்கிறார் அந்தச் சிறுமி. அதன் பிறகு சிறுமிக்கும் அவரின் பெற்றோருக்கும் அறிவுரை வழங்கிவிட்டு சென்றிருக்கின்றனர் அதிகாரிகள். அதையடுத்து சமூக வலைதளத்தில் அந்தச் சிறுமி பேசி வெளியிட்டிருக்கும் வீடியோவில், ``உங்கள் அனைவருக்கும் என்னைத் தெரியும். இன்ஸ்டாகிராமில் புகழுக்காக இப்படி செய்துவிட்டேன்.

சிறுமி
சிறுமி
வைரலாகும் 2K கிட்ஸ் `லவ்' வீடியோ... பிள்ளைகளை தெரிந்தே ஆபத்தில் சிக்க வைக்கிறோமா?

அதற்காக மிகவும் வருத்தப்படுகிறேன். எனது வீடியோவை பார்த்துவிட்டு என் வயதுடைய பெண்கள் சிலர், நானும் வீடியோ போடப் போகிறேன் என்று கூறியிருக்கிறீர்கள். தயவு செய்து அப்படியெல்லாம் செய்யாதீர்கள், பேசாதீர்கள். தெரியாமல் இந்தத் தவற்றை நான் செய்துவிட்டேன். அது என்னுடன் முடிந்துவிடட்டும். உங்களுக்கு நானே உதாரணம். இனிமேல் யாரும் இப்படிச் செய்யாதீர்கள். நானும் இனிமேல் வீடியோக்களை பதிவிட மாட்டேன்” என்று கூறியிருக்கிறார். இந்த வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு