Published:Updated:

`மாமா இல்லாம நான் எப்படி இருப்பேன்மா?!' - கடலூரில் கணவரின் தவறான நட்பால் பறிபோன 3 உயிர்கள்

மாதிரி படம்
மாதிரி படம்

கணவர் திட்டியதால் மனமுடைந்த மனைவி தனது இரு குழந்தைகளைக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடலூர் மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவருக்கும் திருவாரூரைச் சேர்ந்த சிவகாமி என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதியருக்கு 4 வயதில் தன்யாஸ்ரீ என்ற மகளும் ஒன்றரை வயதில் அமுதன் என்ற மகனும் இருந்தனர். விஸ்வநாதன் சிங்கப்பூரில் பணியாற்றி வந்த நிலையில் தனது இரு பிள்ளைகளுடன் சிவகாமி தனியாக வசித்து வந்தார்.

death
death
Representational image

இந்நிலையில் நேற்று முன்தினம் சிவகாமி வீட்டின் படுக்கையறையின் ஜன்னல் கதவுகளில் இருந்த கண்ணாடிக் கதவுகள் வெடித்துச் சிதறியதுடன், உள்ளிருந்து புகை வெளியேறியது. அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிவகாமியின் உறவினர்களும் அக்கம்பக்கத்து வீட்டினரும் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். அப்போது உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்த நிலையில் சிவகாமியும் அவரது இரண்டு குழந்தைகளும் வலியால் துடித்துள்ளனர்.

அவர்கள் மூவரையும் மீட்ட உறவினர்கள் சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மூவருக்கும் தீக்காயங்கள் அதிகமாக இருந்ததால் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு மருத்துவர்கள் கொடுத்த தீவிர சிகிச்சை பலனளிக்காததால் மூவரும் உயிரிழந்தனர்.

`நாட்டில் இருக்கவே பயமா இருக்கு!’ -நள்ளிரவில் நடந்ததைக் கண்ணீருடன் விவரிக்கும் மாணவி #JamiaProtest

தகவலறிந்ததும் நெய்வேலி துணை காவல்துறை கண்காணிப்பாளர் லோகநாதன் மற்றும் ஆய்வாளர் ஷ்யாம் சுந்தர் ஆகியோர் சிவகாமி தற்கொலை செய்துகொண்ட அறையைச் சோதனையிட்டனர். அங்கு மண்ணெண்ணெய் வாடை வீசியதால் தனது குழந்தைகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து விட்டு, சிவகாமியும் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. போலீஸாரின் தொடர் விசாரணையில், வேறு ஒரு பெண்ணுடன் கணவருக்கு இருந்த தொடர்பு குறித்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் சிவகாமி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் தகவல் கிடைத்தது.

அதேசமயம் சிவகாமியின் தற்கொலை குறித்துப் பேசும் அவரது உறவினர்கள், “ விஸ்வநாதன், சிங்கப்பூர் செல்வதற்கு முன்பு அவருக்கும் அவர் அண்ணன் மனைவிக்கும் இடையே நீண்ட நாட்களாக தவறான நட்பு இருந்திருக்கிறது. சிவகாமிக்கு அது தெரிந்துவிட்டதால் கணவர் விஸ்வநாதனைக் கண்டித்ததுடன், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். தொடர்ந்து இருவருக்கும் இடையே இதுதொடர்பாக அடிக்கடி பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில்தான் விஸ்வநாதன் வேலைக்காக சிங்கப்பூர் சென்றிருக்கிறார். ஆனாலும் தனது அண்ணியுடன் தினமும் போனில் தொடர்புகொண்டு பேசி வந்திருக்கிறார்.

மாதிரி படம்
மாதிரி படம்

மீண்டும் அதைக் கண்டித்த சிவகாமியை `உன்னை எனக்குப் பிடிக்கவில்லை. நான் வேற கல்யாணம் செஞ்சுக்கப் போறேன்’ என்று கடுமையாகப் பேசியிருக்கிறார் விஸ்வநாதன். அன்றைய தினமே மீண்டும் மீண்டும் போன் செய்த விஸ்வநாதன், சிவகாமியை வீட்டைவிட்டுச் செல்லுமாறு கூறி சண்டை போட்டிருக்கிறார். அதில் மனமுடைந்துபோன சிவகாமி கடந்த 13-ம் தேதி தனது தாயாரிடம் போனில் பேசியிருக்கிறார்.

அப்போது, ‘ மாமா என்னை செத்துப்போன்னு சொல்றாரும்மா.. வீட்டை விட்டு வெளியே போயிடுன்னு சொல்றாரும்மா.. நான் எங்கம்மா போவேன்… மாமா இல்லாம நான் எப்படி இருப்பேன்மா’ என்று கூறி அழுத சிவகாமியை சமாதானம் செய்திருக்கிறார் அவரது தாய். ஆனால், மீண்டும் மீண்டும் போனில் தொடர்புகொண்டு அவரின் கணவர் திட்டியதால், தனது குழந்தைகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டு தானும் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்” என்கின்றனர் வேதனையோடு.

மாதிரி படம்
மாதிரி படம்

இதுகுறித்து நெய்வேலி டி.எஸ்.பி லோகநாதனிடம் பேசினோம். ``வீட்டில் கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் சாதாரண குடும்பச் சண்டைகளுக்காக யாரும் குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொள்ளும் முடிவை எடுக்க மாட்டார்கள். ஆனாலும் இதில் இருதரப்பு உறவினர்களும் வேறு வேறு காரணங்களைக் கூறுகிறார்கள். அதனால் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகிறோம். விரைவில் உண்மையான காரணத்தைக் கண்டுபிடிப்போம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு