Published:Updated:

தமிழகத்தை உலுக்கிய திண்டுக்கல் - ஆத்தூர் சிறுமிகளின் கொலை வழக்கு... தற்போதைய நிலை என்ன?

திண்டுக்கல் சிறுமியின் தாயார்
News
திண்டுக்கல் சிறுமியின் தாயார் ( படம்: விகடன் / ஈ.ஜெ.நந்தகுமார் )

உத்தரப்பிரதேச பெண்ணின் உடல் சாம்பலாகிவிட்டது. இனி அந்த வழக்கின் சட்ட நகர்வுகள் எந்தத் திசையில் பயணிக்கும் என்பதைக் காலம் பதிலாகச் சொல்லும். ஒரு வருடத்துக்கு முன் தமிழகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட இரண்டு சிறுமிகளின் பாலியல் கொலை வழக்குகளின் நிலை என்ன?

திண்டுக்கல்லில் சிறார் வதைக்கு உள்ளாகி மூக்கு, வாயில் மின்சாரம் பாய்ச்சிக் கொல்லப்பட்ட சிறுமி, சேலத்தில் கழுத்துறுத்துக் கொல்லப்பட்ட சிறுமி... இவர்களின் குடும்பங்களின் கதி என்ன தெரியுமா?

கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், திண்டுக்கல் வடமதுரை அருகே உள்ள கிராமம் ஒன்றில், வீட்டில் தனியாக இருந்த 12 வயதுச் சிறுமி, உடல் முழுவதும் ரத்தக்காயங்களோடு, மூக்கு மற்றும் வாயில் மின் வயர் வைக்கப்பட்டு இறந்துகிடந்தார். துடிதுடித்துப்போன சிறுமியின் பெற்றோர், உறவினர்கள், திண்டுக்கல் - வடமதுரைச் சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர்.

விசாரணையில் இறங்கிய வடமதுரை போலீஸார், சிறுமியின் எதிர்வீட்டில் வசிக்கும் கிருபானந்தனைக் கைது செய்தனர். கைதானபோது அவனுக்கு வயது 17. சிறுமியை சிறார் வதை செய்ததையும், மின் வயரை சிறுமியின் வாய், கழுத்தில் வைத்து மின்சாரம் பாய்ச்சிக் கொலை செய்ததையும் வாக்குமூலமாகக் கொடுத்தான்.

திண்டுக்கல் சிறுமியின் தாயார்
திண்டுக்கல் சிறுமியின் தாயார்
படம்: விகடன் / ஈ.ஜெ.நந்தகுமார்

சிறுமி சிறார் வதைக் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கு, மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த செப்டம்பர் 29-ம் தேதி, வழக்கு விசாரணை முடிவடைந்து நீதிபதி புருஷோத்தமன் தீர்ப்பளித்தார். அதில், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி கிருபானந்தனை விடுதலை செய்தார். இச்சம்பவத்தால் கோபமடைந்த சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் நீதிமன்ற வளாகத்துக்குள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

வடமதுரையில், சிறுமியின் அம்மாவிடம் பேசினோம். ``என் கணவர் சலூன் கடை வெச்சிருக்கார். எங்களுக்குக் கல்யாணமாகி ஏழு வருஷமா குழந்தையில்ல. ஏறாத கோயில் இல்ல, ஆஸ்பத்திரி இல்லை. எட்டாவது வருஷம், வரமா எங்க மக பொறந்தா. ஆசை ஆசையா வளர்த்தோம். ஒரு சின்ன காயம்பட்டாகூட துடிச்சிப் போவா. ஆனா, உடம்பெல்லாம் காயம், மார்பையும் உதட்டையும் கடிச்சு ரத்தம் கட்டிப் போய், டிரஸ் பூராவும் ரத்தத்தோட கிடந்த என் மகளைப் பார்த்தப்போ நான் எத்தனை தடவை செத்தேன் தெரியுமா... எம்பொண்ணு எவ்வளவு துடிச்சிப் போயிருப்பா…” எனக்கூறி அழ ஆரம்பித்தார் லெட்சுமி.

சிறிது நேரம் கழித்துத் தொடர்ந்தவர், ``அன்னைக்குக் காலையில நான் 100 நாள் வேலைக்குப் போயிட்டேன். ரேஷன் கடையில அரிசி வாங்க, மகளை வீட்டுல விட்டுட்டுப் போனேன். மதியம் வீட்டுக்கு வந்தேன். பெட்ரூம்ல தரையில படுத்துக்கிடந்தா. கிட்டப் போய் பார்த்தா... உடம்பு பூராவும் ரத்தம். கீறல். தூக்கிப் பார்த்தேன். பேச்சு மூச்சு எதுவும் இல்ல. வாயிலயும் மூக்குலயும் வயரை சொருகி கரன்ட் ஷாக் வெச்சிருந்தான். எனக்கு மயக்கம் வந்துருச்சு. போலீஸ் விசாரணையில, எதிர்வீட்டுக் கிருபானந்தனைக் கைது செஞ்சாங்க. அவன், `மூணு பேர் சேர்ந்துதான் இப்படிப் பண்ணினோம்'னு வாக்குமூலம் கொடுத்தும், கிருபானந்தனை மட்டும்தான் கைது பண்ணினாங்க. மத்த ரெண்டு பேரையும் விட்டுட்டாங்க. இது என்ன நியாயம்?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சரி, வழக்குல கோர்ட்டுலயாவது நீதி கிடைக்கும்னு பார்த்தா, எங்களை அடிச்சுவிரட்டுற மாதிரி அங்கேயும் தீர்ப்பு சொல்லியிருக்காங்க. நாங்க இல்லாதவங்க, அன்றாடம் வேலைக்குப் போனாதான் கஞ்சி குடிக்க முடியும். எங்க ஊர்ல எங்க சனங்க 10 வீடுகள்லதான் இருக்கோம். எங்களால எதுவும் செய்ய முடியாது. நீதிமன்றத்தைத்தான் முழுசா நம்பியிருந்தோம். ஆனா, இப்போ நீதியும் எங்களை கைவிட்டிருச்சு. என் மகளை சித்ரவதை செஞ்சு கொலை பண்ணினவனை விடுதலை செஞ்சுட்டாங்க. அப்போ சொல்லுங்க... எங்க புள்ள எப்படித்தான் செத்தா? யாருதான் கொன்னது? பொம்பளப் புள்ளைய பெத்தா இதுதான் கெதியா?” - கண்ணீர் கொட்டுகிறது அவருக்கு.

வனஜா
வனஜா

அனைத்திந்திய மாதர் சங்க மாநிலக் குழு உறுப்பினர் வனஜா, ``இந்த வழக்கில், சம்பவம் நடந்து மூன்று நாள்கள் வரை குற்றவாளியைக் கைது செய்யவில்லை. முறையான வழக்கு பதிவு இல்லை. குற்றவாளிகளைத் தப்பவைக்கவே அனைத்து வேலைகளும் நடந்தன. உடனடியாக, வடமதுரையில், எம்.எல்.ஏ பாலபாரதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். பிரச்னை பெரிதாகிவிடும் என நினைத்து, சிறுமியின் உறவினர்களை வைத்து சிறுமியின் உடலை எரித்துவிட்டனர். 17 வயதுச் சிறுவனைக் குற்றவாளி என்று கைது செய்தனர். ஆனால், சம்பவத்தில் ஈடுபட்டது மூன்று பேர் கொண்ட கும்பல். கைது செய்யப்பட்டதோ ஒரு நபர் என நாங்கள் குற்றம்சாட்டினோம். போலீஸார் அதைக் கண்டுகொள்ளவில்லை. தற்போது அந்த ஒரு நபரும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

போலீஸார் விசாரணையில் மோப்பநாய், கைரேகை, டி.என்.ஏ பரிசோதனை எனத் தக்க ஆதாரத்தைத் திரட்டி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். நீதிமன்றத்தில் 35 நபர்கள் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டுள்ளனர். ஆனால், தக்க ஆதாரம் இல்லை என நீதிபதி குற்றவாளியை விடுதலை செய்துவிட்டார். நாங்கள் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருக்கிறோம். சி.பி.சி.ஐ.டி விசாரணை வைத்து இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க கோரிக்கை வைப்போம். அப்போதுதான் மொத்தக் குற்றவாளிகள் கூட்டமும் தண்டிக்கப்படும்” என்றார்.

திண்டுக்கல் சிறுமியின் தாயார்
திண்டுக்கல் சிறுமியின் தாயார்
படம்: விகடன் / ஈ.ஜெ.நந்தகுமார்

அடுத்த வழக்கு, தமிழகத்தையே உலுக்கிய மற்றொரு சிறார் கொலை.

சேலம் சிறுமி படுகொலையை, அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் மறந்திருக்க முடியாது. இரண்டாண்டுகளுக்கு முன்பு சாதியும் காம வெறியும் தலைக்கேறிய ஒரு மிருகம் பட்டியலினத்தைச் சேர்ந்த ஏழைச் சிறுமியை பட்டப்பகலில் கழுத்தறுத்துக் கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இச்சம்பவத்தைத் தற்போது நினைத்தாலும் குலை நடுங்கச் செய்யும்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் தளவாய்ப்பட்டியை அடுத்த சுந்தரபுரத்தைச் சேர்ந்த தம்பதிக்கு அருள்ஜோதி, தனம், சற்குருநாதன் என இரண்டு மகள்கள், ஒரு மகன் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). அருள்ஜோதிக்கு திருமணம் ஆகிவிட்டது. தனம் தளவாய்ப்பட்டி நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தார். சற்குருநாதன் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு தன் தந்தையோடு வேலைக்குச் சென்றுகொண்டிருந்தார். வீட்டில் வயதான தாயும் தனமும் இருப்பார்கள். வீடு ஊருக்கு ஒதுக்குப்புறமாக, புதர்கள் சூழ்ந்த காட்டுப் பகுதியில் இருக்கிறது.

இவர்களின் வீட்டுக்கு அருகில், ஆதிக்கசாதியைச் சேர்ந்த தினேஷ்குமாரின் பண்ணை வீடு உள்ளது. அந்த வீட்டில் தினேஷின் மனைவி சாரதா, குழந்தை செல்வதரணீஸ், தினேஷின் பாட்டி, அம்மா, தம்பி ஆகியோர் வசித்து வந்தார்கள். தினேஷ் அடிக்கடி ரிக் வண்டி ஓட்ட வெளியூர் சென்றுவிடுவார். தனம் குடிநீர் எடுப்பதற்கும் தோட்டத்தில் பூ பறிப்பதற்கும், குழந்தையோடு விளையாடுவதற்கும் தினேஷின் வீட்டுக்குச் செல்வது வழக்கம்.

22.10.2018 அன்று, வெளியூர் சென்று வந்துவிட்டு வீட்டில் இருந்த தினேஷ், மாலை தனத்தின் வீட்டுக்குள் புகுந்து அரிவாளால் அவள் கழுத்தை அறுத்துக் கொலை செய்தான். அதையடுத்து ஆத்தூர் காவல்துறையினர் தினேஷை கைதுசெய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு சேலம் மகிளா நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. தற்போது இவ்வழக்கின் நிலை பற்றியும், தனத்தின் குடும்பச் சூழல் பற்றியும் தெரிந்துகொள்ள தனத்தின் வீட்டுக்குச் சென்றோம்.

ஆத்தூர் சிறுமியின் தாயார்
ஆத்தூர் சிறுமியின் தாயார்
படம்: விகடன் / எம். விஜயகுமார்

தனத்தின் அம்மா, ``தனம் கொலை செய்யப்பட்டதை நினைச்சு நினைச்சு என் பெரிய பொண்ணு மனசு விட்டிருச்சு. கர்ப்பமா இருந்தும் சரியா சாப்பிடல. திடீர் திடீர்னு அழும். 45 நாளுக்கு முன்னாடி அதுக்குப் பெண் குழந்தை பிறந்துச்சு. பிரசவம் முடிஞ்சு கொஞ்ச நேரத்துல என் பொண்ணு இறந்துடுச்சு. எங்க வீட்டுல ரெண்டு பொம்பளப் புள்ளைங்க உசுரு போயிடுச்சு, இந்தக் கைப்புள்ளய இப்ப நான் வளர்க்கத் தெம்பில்லாம வெச்சுக்கிட்டிருக்கேன்'' - கையில் பச்சிளம் குழந்தையுடன் அழுவதற்குகூடத் தெம்பில்லாமல் தேம்பினார். அவரை தேற்றினோம்.

``சம்பவத்தன்னைக்கு, வயிறு வலிக்குதுன்னு தனம் பள்ளிக்கூடம் போகல. ராத்திரி 7 மணி இருக்கும். நான் இந்தக் கதவோரமா உக்கார்ந்துட்டு இருந்தேன். பாப்பா வீட்டுக்குள்ல பூக்கட்டிட்டு இருந்துச்சு. எப்பவும் எங்க வீட்டுக்கு வராத அந்தப் படுபாவி தினேஷ், வெறும் மேலோட டவுசர் போட்டுக்கிட்டு கையில வீச்சறுவாளோட வீட்டுக்குள்ல திடீர்னு புகுந்தான்.

நான் பதறிப்போய், ``என்ன சாமீ அறுவாளோட வந்திருக்க..."னு அவன் காலைப் பிடிச்சேன். ஒரே உதையில நான் கீழ விழுந்துட்டேன். எழுந்திருக்க முடியல. பாப்பா பயத்துல, ``அண்ணா நான் என்னங்கண்ணா பண்ணுனேன்...'னு சொல்லி முடிக்கிறதுக்குள்ள, அவன் வெட்டுன ஒரே வெட்டுல கழுத்து தொங்கிடுச்சு. அப்புடியும் விடாம துடிக்கத் துடிக்க தரதரனு புள்ளைய வெளியில இழுத்துட்டு வந்து, வாசல்ல வெச்சு கழுத்தை அறுத்து தலையை எடுத்துட்டுப் போயிட்டான். என் கண் முன்னாலேயே என் மகளோட முண்டம் மட்டும் இழுத்து இழுத்து உயிர் அடங்கிச்சு... இப்ப நெனச்சாலும் என் உடம்பெல்லாம் நடுங்குதே...'' - குரலெடுத்து அழ ஆரம்பிக்கிறார்.

தனத்தின் அப்பா, ``அப்போ எம்புள்ளைக்கு 13 வயசு. இப்ப இருந்தா 15 வயசு இருந்திருக்கும், பத்தாவது முடிச்சிருக்கும்...'' என்று கண்ணீரைத் துடைத்தவர், ``அப்போ கலெக்டர், தாசில்தார்னு எல்லா அதிகாரிகளும் எங்க வீட்டுக்கு வந்திருந்தாங்க. வீடு கட்டித் தர்றோம், பைப் போட்டுத் தர்றோம், பையனுக்கு வேலைவாங்கித் தர்றோம்னு எல்லாம் சொன்னாங்க. ஆனா, எதுவும் செய்யல. அரசு இழப்பீடா 4,12,000 ரூபா கொடுத்தாங்க. கட்சிக்காரங்க, மத்தவங்க கொடுத்தது எல்லாம் சேர்த்து 4 லட்சம்கிட்ட கொடுத்தாங்க. அதுல, 4 லட்சத்துக்கு எம்புள்ளைக்கு நினைவு மண்டபம் கட்டினேன். போலீஸு, கோர்ட்டு, கேஸ்ஸூன்னு 1,35,000 செலவாயிடுச்சு. மீதித் தொகைல கடனை கட்டிட்டேன்.

சிறுமியின் நினைவிடம்
சிறுமியின் நினைவிடம்
படம்: விகடன் / எம். விஜயகுமார்

எங்க ரெண்டு மகளையும் இழந்து நாங்க இப்போ நடைபிணமா வாழ்றோம். இன்னொரு பக்கம், தினேஷோட அம்மாவும் உறவினர்களும் எங்ககிட்ட சண்டைக்கு வர்றாங்க. கொரோனாவுக்கு முன்னால வரை கோர்ட்டுக்குப் போனோம். இப்போ வழக்கு நடக்கலை. ரெண்டு வருஷமாகியும் என் மகளுக்கு நீதி கிடைக்கல. என் மகளைக் கொன்னவனுக்குத் தூக்குத் தண்டனை கொடுக்கணும்'' என்றார் ஆற்றாமையுடன்.

தனம் வழக்கின் வழக்கறிஞர் ஆசைத்தம்பி, ``தனம் தரப்பு சாட்சியங்களின் விசாரணை அனைத்தும் நிறைவு பெற்றது. தினேஷ் தரப்பில் சாட்சியங்கள் இன்னும் முழுமையாக விசாரிக்கப்படவில்லை. தினேஷ் தரப்பினர் சாட்சியங்கள் விசாரிப்பதில் காலதாமதம் செய்வதால் வழக்கை நீர்த்துப் போகச் செய்ய முயல்கிறார்கள். ஆனால், குற்றவாளிக்குத் தண்டனை கிடைக்கும் என முழுமையாக நம்புகிறோம். பட்டியலினப் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமை, கொலை வழக்குகளை விரைவாக முடித்துத் தீர்ப்பு வழங்கினால்தான், நாடு முழுக்க அந்தப் பெண்களின் பாதுகாப்புக்கு குறைந்தபட்ச உறுதியாவது கிடைக்கும்’’ என்றார்.

பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை, கொலை வழக்குகளின் போக்கும் தீர்ப்பும் நமக்களிக்கும் நம்பிக்கை என்ன?