Published:Updated:

டெல்லி: `10 வயது மகனுடன் ஆபாச நடனம்; அதிர வைத்த வீடியோ!' - அதிரடியில் இறங்கிய மகளிர் ஆணையம்

சமூக வலைதளங்கள் (மாதிரி படம்)
சமூக வலைதளங்கள் (மாதிரி படம்)

டெல்லியில் தனது 10 வயது மகனுடன் ஆபாசமாக நடனமாடி சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவேற்றம் செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி மகளிர் ஆணையம் போலீஸாருக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் என சமூக வலைத்தளங்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்த டிஜிட்டல் யுகத்தில் மிகக் குறுகிய காலத்தில் பிரபலமாக வேண்டும் என்ற நோக்கத்துடனும், பெரிதான மெனக்கெடுதல்கள் ஏதுமின்றி நல்ல வருமானம் பார்த்து விடவேண்டும் என்ற எண்ணத்திலும், பலர் வித்தியாசமான மற்றும் சர்ச்சையான விஷயங்களைச் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்திருக்கும் வீடியோ ஒன்று காண்போரை முகம் சுளிக்கச் செய்கிறது. 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடரும் டெல்லியைச் சேர்ந்த அந்த பெண்ணின் இன்ஸ்டாகிராம் கணக்கில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு வீடியோ வெளியாகியது. வீடியோவில், அந்த பெண் 10-லிருந்து 12 வயதுடைய சிறுவன் ஒருவனுடன் அநாகரீகமான முறையில் மிகவும் அருவருக்கத்தக்க அசைவுகளுடன் நடனமாடுகிறார். மேலும், அந்த பெண்ணுடன் நடனமாடிய அந்த சிறுவன் அவரின் மகன் என்றும் கூறப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்டு வைரலானது.

சமூக வலைதளம்
சமூக வலைதளம்

சொந்த மகனுடன் அந்த பெண் ஆபாசமாக நடனமாடும் வீடியோ இணையத்தில் தீயாய் பரவி சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் குழந்தைகள் நல ஆர்வலர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, அந்த வீடியோவின் கமெண்ட் பகுதியில் ஏராளமானோர் அந்த பெண்ணின் செயலை விமர்சித்து கடுமையான கருத்துக்களைப் பதிவிட்டு வந்தனர். அதன் காரணமாக, அந்த பெண் சமூக வலைத்தளங்களில் இருந்து அந்த வீடியோவினை நீக்கி விட்டார். ஆனால், இணையவாசிகள் அதைப் பதிவிறக்கம் செய்து தற்போது வரையிலும் அதிகளவில் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்.


இந்நிலையில், இந்த வைரல் வீடியோவானது டெல்லி மகளிர் ஆணைய உறுப்பினர்களின் கவனத்துக்குச் செல்லவே, தற்போது வீடியோ பதிவிட்ட பெண்ணுக்குச் பெரும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

சர்ச்சை வீடியோ குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டெல்லி மகளிர் ஆணையத்தினர், "வீடியோவில் அந்த பெண்ணுடன் நடனமாடும் சிறுவனுக்கு அதிகபட்சம் 10-லிருந்து 12 வயது தான் இருக்கும். ஆனால், அவன் தன் தாயுடன் ஆபாசமாக நடனமாடுகிறான். இதில் அவன் மீது நாம் குற்றம் சொல்ல முடியாது. ஏனென்றால் அவன் சிறுவன். ஆனால் அவனுக்கு அவனுடைய தாய் எதைக் கற்பித்திருக்கிறார் என்பதைக் கண்டு நாம் அதிர்ச்சி அடைய வேண்டியதாக இருக்கிறது. சிறுவனை அந்த பெண் தவறாக வழி நடத்தியிருக்கிறார். அம்மா - மகன் என்ற புனிதமான உறவு இந்த விவகாரத்தில் களங்கப் படுத்தப்பட்டிருக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் அந்த சிறுவன் பிற்காலத்தில் பெண்கள் அனைவரையும் எப்படி நினைப்பான் என்று யோசிக்கவே மனம் பதைக்கிறது. எனவே இந்த விவகாரத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி டெல்லி போலீஸாருக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறோம்" என்றனர்.

டெல்லி மகளிர் ஆணையத் தலைவி சுவாதி மாலிவால்
டெல்லி மகளிர் ஆணையத் தலைவி சுவாதி மாலிவால்

தொடர்ந்து, வீடியோ குறித்து டெல்லி மகளிர் ஆணையத் தலைவி சுவாதி மாலிவால் கூறுகையில், "சமூக வலைத்தளங்கள் மக்களின் திறமைகளை வெளிப்படுத்தும் அற்புதமான கருவிகளாக இருக்கின்றன. ஆனால், இந்த கருவிகளைச் சிலர் புகழ் போதைக்காகத் தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர். அதன் காரணமாக, அருவருக்கத்தக்க மற்றும் வெட்கக்கேடான செயல்களைச் செய்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் ஒரு 10 வயது சிறுவனுக்கு நல்ல விஷயங்களை கற்றுக் கொடுக்கவேண்டிய தாயே, அவனைத் தவறாக வழி நடத்தியிருக்கிறார். நாங்கள் மகளிர் ஆணையத்தினர் தான் ஆனால், இது போன்ற தவறான பெண்களை ஒருபோதும் ஆதரிப்பவர்கள் அல்ல. எனவே, அந்த பெண் மீது தக்க நடவடிக்கை வேண்டும் என்று போலீஸாரை வலியுறுத்துகிறோம்" என்றார்.

சென்னை: வெளியில் பூட்டு; உள்ளே ஆபாச நடனம் - சுவர் ஏறிக் குதித்து நடவடிக்கை எடுத்த போலீஸ்!

மாநில மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியதை அடுத்து, டெல்லி போலீஸார் சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக வீடியோ பதிவிட்ட பெண் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உள்ளனர். அதே போல், அம்மாவுடன் சேர்ந்து நடனமாடிய சிறுவனுக்கு சிறப்பு மன நல ஆலோசனை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு