Published:Updated:

சின்னசேலம்: பள்ளி மாணவி உயிரிழப்பு; கலவரமாக மாறிய போராட்டம்; சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்ட விசாரணை!

டிஜிபி சைலேந்திரபாபு, கலவர இடம்.

சின்னசேலம் தனியார் பள்ளி மாணவியின் மர்ம மரணத்தைக் கண்டித்து தொடங்கப்பட்ட போராட்டம், வன்முறையாக மாறிய சம்பவம் தமிழ்நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் டிஜிபி சைலேந்திரபாபு.

சின்னசேலம்: பள்ளி மாணவி உயிரிழப்பு; கலவரமாக மாறிய போராட்டம்; சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்ட விசாரணை!

சின்னசேலம் தனியார் பள்ளி மாணவியின் மர்ம மரணத்தைக் கண்டித்து தொடங்கப்பட்ட போராட்டம், வன்முறையாக மாறிய சம்பவம் தமிழ்நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் டிஜிபி சைலேந்திரபாபு.

Published:Updated:
டிஜிபி சைலேந்திரபாபு, கலவர இடம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகேயுள்ள கணியாமூர் பகுதியில் இயங்கிவருகிறது தனியார் பள்ளியான சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. இந்தப் பள்ளியின் விடுதியில் தங்கி, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் 12-ம் வகுப்பு படித்துவந்தார். கடந்த 13-ம் தேதி அன்று காலை விடுதியின் இரண்டாவது தளத்திலிருந்து அந்த மாணவி குதித்துத் தற்கொலை செய்துகொண்டதாகப் பள்ளித் தரப்பிலும், காவல்துறை தரப்பிலும் கூறப்பட்டது. படிக்கச் சொல்லி ஆசிரியர்கள் அதிக அழுத்தம் கொடுத்ததாலேயே மாணவி தற்கொலை செய்துகொண்டதாகக் கூறியிருந்த எஸ்.பி செல்வக்குமார், அந்த மாணவி எழுதியதாகத் தற்கொலைக் கடிதம் ஒன்றை உறவினர்கள் முன்னிலையில் வாசித்துக் காட்டியிருந்தார். அந்தக் கடிதத்தின் அடிப்படையில் கணித ஆசிரியர் வசந்த், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா இருவரையும் கைதுசெய்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

உயிரிழந்த மாணவி
உயிரிழந்த மாணவி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்நிலையில், மாணவியின் மரணத்துக்கு நீதி விசாரணை கேட்டும், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அந்தப் பள்ளிக்கு சீல் வைக்க வேண்டும் என்றும் கூறி சென்னை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் மக்கள். மேலும், தங்கள் மகள் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் அதற்கு நீதி கிடைக்கும் வரை உடலை வாங்கப்போவதில்லை எனவும் மாணவியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். இதற்கிடையில், மாணவியின் மரணத்தில் இருக்கும் சந்தேகங்கள் குறித்து அவரின் தாய் செல்வி வீடியோ பதிவு ஒன்றில் கனத்த குரலில் உருக்கமாகப் பேசியிருந்தது, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதோடு அதீத தாக்கத்தை ஏற்படுத்தியது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகிய மாணவியின் குடும்பத்தினர், சி.பி.சி.ஐ.டி விசாரணை கேட்டும், மாணவியின் உடலை மறு உடற்கூறாய்வுக்கு உட்படுத்த வலியுறுத்தியும் உடலை வாங்காமல் தொடர்ந்து போராடிவந்தனர். இந்நிலையில், நேற்று (17.07.2022) காலை பள்ளி அமைந்திருக்கும் கணியாமூர் பகுதியில் மாணவியின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு கோஷமிட்டபடி மாணவ அமைப்பினர் ஒன்றிணைந்து நடத்திய போராட்டம், ஒரு கட்டத்தில் கலவரமாக மாறிய சம்பவம் தமிழ்நாட்டையே அதிரவைத்தது. பள்ளி வளாகத்தில் இருந்த சுமார் 15 பேருந்துகள், போலீஸாரின் 40 இரு சக்கர வாகனங்கள், ஒரு பேருந்து, டிராக்டர், கார், ஜே.சி.பி இயந்திரம் மற்றும் பள்ளியும் தீக்கிரையாக்கப்பட்டன. மேலும், பள்ளிக்கு வெளியே இருந்த சில வாகனங்களும் தீயிட்டு எரிக்கப்பட்டன.

கலவரம் - கணியாமூர்
கலவரம் - கணியாமூர்

இதனால் அந்தப் பகுதியே கலவர பூமியாக மாறியது. இந்தக் கலவரத்தின்போது நடத்தப்பட்ட கல்வீச்சில்... டிஐஜி பாண்டியன், கள்ளக்குறிச்சி எஸ்.பி., சேலம் எஸ்.பி உள்ளிட்ட 52 போலீஸார் காயமடைந்தனர். பள்ளி மற்றும் வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டதால் எழுந்த கரும்புகை அந்தப் பகுதியை மேலும் பரபரப்பாக்கியது. கலவரம் கட்டுக்கடங்காமல் சென்றதால், விழுப்புரம், கடலூர், சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட சில மாவட்டங்களிலிருந்தும் சம்பவ இடத்தில் போலீஸார் குவிக்கப்பட்டு, கலவரத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசியும், வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்டும் கலவரத்தை அடக்கும் முயற்சிகள் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டன.

ஒருவழியாக, மதியம் 1:30 மணிக்கு மேல் கலவரப் பகுதியை தமது கட்டுப்பாட்டுக்குள் காவல்துறை கொண்டுவந்தது. அதற்குள் பள்ளி வளாகத்தின் பெரும்பாலான பகுதி சூறையாடப்பட்டிருந்தது. உடனடியாக தீயணைப்பு வாகனங்களும் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளபட்டுவருவதாக தெரிவித்திருந்த மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், கள்ளக்குறிச்சி வட்டம் மற்றும் சின்னசேலம் வட்டத்துக்கு உட்பட்ட குறிப்பிட்ட பகுதிகளில் வரும் 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவு வருவாய் கோட்டாட்சியரால் பிறப்பிக்கப்படுவதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து, கலவரத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் நபர்கள் சிலரை போலீஸார் மடக்கிப் பிடித்து வந்தனர். மேலும், இந்தக் கலவரத்தின் காரணமாக பொதுப் போக்குவரத்தும் மாற்றுப்பாதையில் மாற்றிவிடப்பட்டது. இந்நிலையில், மாலை 6 மணிக்கு மேல் சம்பவ இடத்தை நேரில் வந்து பார்வையிட்ட தமிழ்நாடு அரசின் உள்துறை செயலர் பணீந்தர் ரெட்டி மற்றும் டி.ஜி.பி சைலேந்திரபாபு ஆகியோர், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய சைலேந்திரபாபு, "மாணவியின் இறப்பு சம்பந்தமாக உடனடியாக வழக்கு பதிந்து முறையாகப் புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி
டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி

சம்பந்தப்பட்ட சாட்சிகளிடம் விசாரணை மேற்கொண்டதோடு, சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றி விசாரணை தீவிரமாக நடைபெற்றுவந்தது. இன்றைய தினம் (17.07.2022) கூட ஒரு டிஐஜி தலைமையில், இரு எஸ்.பி-களின் மேற்பார்வையில் 350 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள். அதையும் மீறி இந்தக் கலவரத்தைச் செய்திருக்கிறார்கள். தற்போது கலவரம் அடங்கியிருக்கிறது. டிஐஜி, எஸ்.பி உட்பட இந்தக் கலவரத்தில் 52 காவலர்கள் காயமடைந்துள்ளனர். அடிப்பட்டிருந்தாலும், பெரும் அசம்பாவிதம் நடைபெறாதபடி கண்ணும் கருத்துமாக காவல்துறையினர் இருந்துள்ளனர். எவ்வித எதிர்வினையும் இல்லாமல், உயிர்ச் சேதம் ஏற்படாத வண்ணம் கவனமாகச் செயல்பட்டுள்ளனர். காவல்துறையினர், அவர்களுடைய கடமையை சிறப்பாகச் செய்துள்ளனர்.

மாணவியின் மரணத்துக்கு காரணமானதாலும், போதிய பாதுகாப்பு வசதிகள் அந்த விடுதியில் இல்லாததாலும், அந்தப் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் குழு நடத்தி, கூட்டத்தை ஒன்று சேர்த்தனரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுவருகிறோம். பள்ளிக்கூடத்தைத் தாக்கியது என்பது தனி வழக்கு. அந்தத் தனி வழக்கில், எந்தெந்தப் பகுதியிலிருந்து யார் யார் வந்தார்கள், அவர்கள் ஏன் பள்ளிக்கூடத்தைத் தாக்க வேண்டும் உள்ளிட்ட சந்தேகக் கோணங்களில் புலன் விசாரணை நடத்தப்படும். இந்தக் கலவரத்தில் ஈடுபட்ட 70 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்" என்றார்.

காயமடைந்த போலீஸாரைச் சந்தித்த ஏடிஜிபி தாமரைக்கண்ணன், டிஜிபி சைலேந்திரபாபு.
காயமடைந்த போலீஸாரைச் சந்தித்த ஏடிஜிபி தாமரைக்கண்ணன், டிஜிபி சைலேந்திரபாபு.

அதன் தொடர்ச்சியாக, காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போலீஸாரை நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார். இந்த மாணவியின் உயிரிழப்பு தொடர்பான விசாரணை, இன்றைய தினம் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.