Published:Updated:

``நள்ளிரவில் விசாரணைக்கு அடித்து இழுத்துச் சென்றார்கள்!'' - மாவட்ட ஆட்சியரிடம் பழங்குடி பெண் புகார்

பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த ஐந்து பேரை காவல்துறையினர் பொய் வழக்கு பதிந்து, காவல்நிலையம் அழைத்துச் சென்று சித்ரவதை செய்ததாக எழுந்திருக்கும் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம், தில்லை நகர்ப் பகுதியில் வசிக்கும் பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த ஐந்து பேரை காவல்துறையினர் பொய் வழக்கு பதிந்து, காவல்நிலையம் அழைத்துச் சென்று சித்ரவதை செய்ததாக எழுந்திருக்கும் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சின்ன சேலம், தில்லை நகரைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரின் மனைவி புவனேஸ்வரி, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பி.என். ஸ்ரீதரிடம் புகார் மனு ஒன்றினை அளித்திருக்கிறார். அந்த மனுவில், ``நாங்கள் பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 14-ம் தேதி) இரவு சுமார் சுமார் 11.45 மணியளவில், நாங்கள் தூங்கிக் கொண்டிருந்த போது, சீருடை அணியாத காவலர்கள் திடீரென எங்கள் இருப்பிடங்களுக்குள் புகுந்தனர். தூங்கிக்கொண்டிருந்த எங்களை எழுப்பி, என் கணவர் பிரகாஷ் (25), உறவினர்கள் தர்மராஜ் (35), செல்வம் (55) ஆகியோரை அடித்து வேனில் இழுத்துச் சென்றனர். நள்ளிரவில் அடித்து இழுத்துச் செல்லப்பட்டவர்கள் எங்கே என்று தெரியாத நிலையில், மறுநாள் காலை சின்ன சேலம் காவல் நிலையத்துக்குச் சென்று விசாரித்தேன்.

காவலர்களால் அழைத்துச் செல்லப்பட்ட பழங்குடிகள்
காவலர்களால் அழைத்துச் செல்லப்பட்ட பழங்குடிகள்

அப்போது, அழைத்து வரப்பட்டவர்கள் இங்கில்லை, கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் இருக்கிறார்கள் என்று காவலர்கள் கூறினார்கள். இதற்கிடையில், மீண்டும் ஊருக்குள் வந்த காவல்துறையினர் எங்கள் உறவினர்கள் பரமசிவம் (42), சக்திவேல் (29) ஆகிய மேலும் இருவரை வேனில் அழைத்துச் சென்றனர். நாங்கள் பட்டியலின பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், படிப்பறிவில்லாத ஏழைகள் என்பதாலும் எங்களை காவலர்கள் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறார்கள். எனவே, என் கணவர் உட்படக் காவலர்களால் அடித்து இழுத்துச் செல்லப்பட்ட 5 பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். மேலும், எந்தக்குற்றமும் புரியாத அப்பாவிகளை அடித்து அடாவடியாக இழுத்துச் சென்ற 15 காவலர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று புவனேஸ்வரி தன் புகார் மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.

புவனேஸ்வரியின் புகார் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், காவலர்களால் அழைத்துச் செல்லப்பட்ட 5 பேரின் நிலை என்ன என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. இது தொடர்பாக கள்ளக்குறிச்சி போலீஸாரிடம் விசாரித்த போது, "விசாரணை நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி விரைவில் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளிப்பார்" என்றனர்.

விழுப்புரம்: அடிப்படை வசதிகள்கூட இல்லை... அல்லாடும் இருளர் பழங்குடிகள்! - நம்பிக்கை அளித்த ஆட்சியர்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு