Published:Updated:

5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை! - திண்டுக்கல் இளைஞருக்கு ஆயுள் தண்டனை

ஆர்.குமரேசன்
வீ.சிவக்குமார்

5 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து, கல்லால் அடித்துக் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

 Representation image
Representation image

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகேயுள்ள செம்மனம்பட்டியைச் சேர்ந்த வயதான பெண்மணி 2017, டிசம்பர் 14-ம் தேதியன்று தன் 5 வயது பேத்தியுடன் ரேஷன் கடைக்குச் சென்றுள்ளார். தன்னை தூக்கும்படி பேத்தி அழுக, "என்னாலேயே நடக்க முடியல, இதுல உன்னைய தூக்கிகிட்டு எப்படி நடக்குறது?" என்று தவித்துள்ளார் பாட்டி. அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ராஜ்குமாரிடம் தன்னை ரேஷன் கடையில் இறக்கிவிடும்படி பாட்டி கேட்டுள்ளார். ரேஷன் கடையில் இறங்கிக் கொண்டவர், பேத்தியை போகிற வழியிலுள்ள பால்வாடியில் இறக்கிவிடுமாறு கேட்டுள்ளார்.

 Representation image
Representation image

குழந்தையை அழைத்துக்கொண்டு சென்ற ராஜ்குமார், கிணத்துப்பட்டி கரட்டுப்பகுதியில் வண்டியை நிறுத்தி சிறுமியை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கி இருக்கிறார். மேலும், கழுத்தை நெரித்தும், கல்லால் அடித்தும் அக்குழந்தையை கொலை செய்திருக்கிறார். சிறுமியைக் கொன்றுவிட்டு, அவள் அணிந்திருந்த கொலுசுகளைக் கழட்டிக்கொண்டு அவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பியிருக்கிறார். குழந்தையைக் காணாமல் தேடி அலைந்த பெற்றோர், கரட்டுப் பகுதியில் காயங்களுடன் இறந்து கிடந்த உடலைத்தான் பார்க்க முடிந்தது. பாட்டியை போலீஸார் விசாரித்தபோது `ஒரு பையன் கூடத்தான் அனுப்பினேன்' எனக் கூறினார்.

போலீஸார் பழைய குற்றவாளிகள் படங்களைக் காட்டியபோது, ராஜ்குமாரை அடையாளம் காட்டியுள்ளார் பாட்டி. விரைந்து செயல்பட்ட போலீஸார், ராஜ்குமாரைக் கைது செய்து விசாரித்தபோது, குற்றத்தை ஒப்புக்கொண்டார். ஏற்கெனவே இரண்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளி ராஜ்குமார், சிறார் சிறைச்சாலையிலிருந்து அப்போதுதான் விடுதலையாகி வந்துள்ளார். சம்பவத்தன்று அவர் வந்த வண்டி வேடசந்தூரில் திருடியது என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

Rajkumar
Rajkumar

`இது தப்பில்லையா... வாழுற வயசுல ஏன் இப்படி வாழ்க்கையைக் கெடுத்துக்குற... ஜெயிலுக்குப் போயிட்டு வந்த பிறகாவது இப்படிச் செய்யாம நல்லவனா இரு'னு சொன்னோம். அதுக்கு, `நானா, செய்ய மாட்டேன். ஆனா, போதையில இருந்தா ஒண்ணும் பண்ண முடியாது’னு சொல்றான் என போலீஸரையே அதிரை வைத்திருக்கிறார் ராஜ்குமார். சிறார் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்றது. வேடசந்தூர் டி.எஸ்.பி சிவக்குமார், இந்த வழக்கில் தனிக் கவனம் எடுத்துக்கொண்டார். சிறார் நீதிமன்றத்திலிருந்து மகிளா நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்றப் போராடினார்.

டெல்லி நிர்பயா வழக்கில், 17 வயது குற்றவாளிக்கு மனநல மருத்துவர்களின் சான்றிதழ் அடிப்படையில் மற்ற குற்றவாளிகளுடன் தண்டனை கிடைத்ததை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டார். அவரது முயற்சியால் மதுரை, திண்டுக்கல்லில் உள்ள சிறந்த மனநல மருத்துவர்கள், பொது மருத்துவர்கள் மூலமாக ராஜ்குமாரைச் சோதித்தனர். அவரை சோதித்த மூன்று மருத்துவர்கள் நல்ல உடல் நலத்துடனும், அழுத்தமான மனநிலையிலும்தான் அந்தச் செயலை செய்துள்ளார். முழுமையான ஆண்மகனுக்கு உரிய உடல், மன அமைப்பு இருக்கிறது எனச் சான்றிதழ் அளித்தனர். அந்தச் சான்றிதழ் அடிப்படையில் வழக்கு மகிளா நீதிமன்றம் வந்தது.

D.S.P Sivakumar
D.S.P Sivakumar

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது திண்டுக்கல் மகிளா நீதிமன்றம். கொலை குற்றத்தைச் செய்த ராஜ்குமாருக்கு ஆயுள் தண்டனையும் 15,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார் நீதிபதி புருஷோத்தமன்.